விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை சிஸ்டம் சோதனை செய்து, அவை நகலெடுத்துப் பயன்படுத்தும் பைரேட்டட் சாப்ட்வேர் தொகுப்பாக இருந்தால், அவற்றை அனுமதிக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இவற்றை அங்கீகாரம் பெறாத சாப்ட்வேர் புரோகிராம்கள் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது
.
பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கட்டணம் செலுத்தி வாங்கும் நிறுவனங்கள், அதில் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ், போட்டோஷாப், கோரல் ட்ரா மற்றும் பிற சாப்ட்வேர் புரோகிராம்களை, கட்டணம் செலுத்தாமல், நகல் எடுத்து பைரேட்டட் சாப்ட்வேர் புரோகிராம்களாகவே பயன்படுத்துகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இதனைக் காவல்துறை கண்டறிந்தால், அவை பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றவும், பயன்படுத்துவோர் மீது வழக்கு தொடரவும் சட்டத்தில் இடம் உண்டு.
ஆனால், இப்போது மைக்ரோசாப்ட் தன்னளவிலேயே இதனைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. நிறுவனங்களானாலும், தனி நபர் பயன்பாடாக இருந்தாலும், முறையான வழிகளில் வாங்கிப் பயன்படுத்தாத புரோகிராம்கள் இருப்பின், அவற்றை இயக்கவிடாமல் செய்திடும் தொழில் நுட்பத்தினை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைத்துள்ளது.
அல்லது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே பயனாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூட
மைக்ரோசாப்ட் இது போன்ற முடிவினை எடுத்திருக்கலாம் என்று, இந்த பிரிவில் செயல்படுவோர் தெரிவித்துள்ளனர்.
அதிரடியாய் ஒரு பேட்ச் பைல்
மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்கள் எவற்றையேனும் கைப்பற்றி உள்ளனரா என்று தெரியாத நிலையில், அதற்கான தீர்வு தரும் பேட்ச் பைல் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இது குறித்த https://technet.microsoft.com/library/security/MS15-093 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, அவர்களைக் கவிழ்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டால், உடன் ஹேக்கர்கள் அவர்கள் கம்ப்யூட்டர்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்வது எளிதாகிவிடும்.
இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள ஒரு குறைபாடு தான். இந்த குறைபாட்டினை, மைக்ரோசாப்ட் CVE-2015-2502 எனக் குறிப்பிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெமரியில் உள்ள ஆப்ஜெக்ட்களைக் கையாளுகையில், இந்த குறை வெளியே அறியப்படுகிறது.
அந்த குறையை, ஹேக்கர்கள் பயன்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்திட முடியும். அப்போது கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனாளருக்குரிய உரிமையினை ஹேக்கர் பெற முடியும். எனவே, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் யாரேனும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், இந்த குறைபாடு இயங்கினால், கம்ப்யூட்டர் பின் அவருக்குக் கட்டுப்படாமல் போய்விடும்.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் எட்ஜ் பிரவுசரில் இந்த குறைபாடு இல்லை எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த பேட்ச் பைல் https://support.microsoft.com/en-us/kb/3087985 என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் தரப்படுகிறது. தானாக, இது அப்டேட் செய்யப்படவில்லை எனில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கி வைத்துக் கொள்வது நல்லது.
இந்தக் குறையைக் கண்டறிந்தவர் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் Clement Lecigne என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வெளியீட்டு நாள் இல்லாமல், அதிரடியாக இது போல பேட்ச் பைல் வெளியிடுவது, இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து உடனுடக்குடன் தீர்த்து வைக்கும் வாடிக்கையாளர் சேவையைனை மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு, எட்ஜ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்