விண்டோஸ் 10, இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்ட பல செயலிகளை விலக்கியுள்ளது. அதில் ஒன்று, நாம் வழக்கமாகக் கையாளும் டிவிடி பிளேயர் இயங்குவதற்கான புரோகிராம். ஆனால், இந்த டிவிடி புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 இலவசமாக அப்கிரேட் செய்யப்பட்டாலும், இதுவரை நமக்கு அளிக்கப்பட்டு வந்த சில புரோகிராம்களை, இது போல கட்டணம் செலுத்திப் பெறுமாறு மைக்ரோசாப்ட் வழி அமைத்துள்ளது. இது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கான கட்டணம் 15 டாலர்.
இதே போல சாலிடெர் கேம் விளையாடவும், விளையாடுபவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவும், இந்த விளையாட்டுப் பிரியர்களைத் திகைக்க வைத்துள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திலும், டிவிடி பிளேயர் தரப்படவில்லை. அதற்கான புரோகிராமினை அப்டேட் செய்திட கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது.
இப்போது, பல பயனாளர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்துதான், விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு, டிவிடி இயங்காது என்பது ஆச்சரியமும் திகைப்பும் கூடிய ஒரு உணர்வாக இருக்கும்.
கட்டணம் செலுத்த வேண்டுமா? என முகம் சுளிப்பவர்கள், பிரபலமான தர்ட் பார்ட்டி புரோகிராமான வி.எல்.சி. புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் 10க்கான புரோகிராமிற்கு, வி.எல்.சி. செயலியைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், “VLC for Windows Store” என அழைக்கிறது. இதில் விடியோ பைல்கள் மட்டுமின்றி, பல பார்மட்களில் உள்ள ஆடியோ பைல்களையும் இயக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவலாகும். இதில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், பல குறைகளையும் நிவர்த்தி செய்துள்ளதாக இதனை வடிவமைத்த தாமஸ் நைக்ரோ தெரிவித்துள்ளார்.
புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில், இதன் இடைமுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேடி அறியும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. சப் டைட்டில் மற்றும் 10 பிட் விடியோ இயக்கத்திற்கான தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது.
இதனை டவுண்லோட் செய்திட http://blog.thomasnigro.fr/2015/08/07/vlc-1-5-on-the-road-to-windows-10/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மொபைல் போனுக்கான விண் 10 பதிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 – உடனடி மாற்றங்கள்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டீர்களா? இது ஒரு புதிய சிஸ்டம். இதில், இதுவரை விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத பல புதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே இருந்த சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் முழுப் பயனையும் பெற்றவராக இயங்க முடியாது. அவை குறித்த சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
1. ஒரே கம்ப்யூட்டரில் பலர் இயங்குவதற்கு விண்டோஸ் எப்போதும் அனுமதி அளிக்கும். பலர் பயன்படுத்தினாலும், அவரவர் பணி தனித்தனியே அமைக்கப்படும். எனவே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை அமைக்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரை, தனிப்பட்ட ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு அமைத்தால், அதில் உள்ள பைல்களை வேறு யாரும் அணுக இயலாது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, பாஸ்வேர்ட் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால், அதனுடன், ஒரு கிரெடிட் கார்டினை ஒருங்கிணைக்க முடியும். எனவே, பாஸ்வேர்ட் ஒன்றைத் தனிநபர் சொத்தாக இதில் அமைக்கவும்.
3. மின் அஞ்சல் முகவரி ஒன்றையும், அதற்கான பாஸ்வேர்ட் ஒன்றையும் கவனமாக அமைத்துப் பயன்படுத்தவும். மைக்ரோசாப்ட் சேவைகளைப் பயன்படுத்த, இந்த மின் அஞ்சல் முகவரி மிக முக்கியம். அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால், அதன் வழியாக, ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவையைப் பயன்படுத்த மைக்ரோசாப்ட் அனுமதி அளிக்கிறது. அத்துடன், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து செயலிகளைப் பெற இது கட்டாயத் தேவையாகும். உங்கள் குழந்தைகள், இணையத்தில் எந்த எந்த தளங்களில் உலாவுகிறார்கள் என்பதனையும் இதன் மூலம் கண்டு கொள்ளலாம்.
4. ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ளது. இதனை முழுமையாகப் பயன்படுத்த, தேவையற்றை செயலிகளைக் காட்டும் டைல்ஸ் சதுரங்களை நீக்கவும். பின்னர், உங்கள் தேவைக்கேற்ற வகையில், ஸ்டார்ட் மெனுவினை அமைக்கவும்.
5. விண்டோஸ் ஸ்டார்ட் மெனு உங்கள் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் காட்டுகிறது. கால்குலேட்டரிலிருந்து 3D Builder வரை அனைத்தையும் காணலாம். விண் 10 உடன் தரப்பட்டிருக்கும், இலவச செயலிகள் அனைத்தின் பயன்பாட்டினையும் அறிந்து கொண்டு பயன்படுத்தவும்.
6. விண்டோஸ் 10 உடன் வந்திருக்கும் இயற்கைக் காட்சிகள் கொண்ட டெஸ்க்டாப் திரை உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால், உங்களுக்குப் பிடித்த படங்களை டெஸ்க்டாப்பின் பின்னணி காட்சியாக அமைக்கலாமே.
7. உங்களுக்கு உதவ டிஜிட்டல் உதவியாளர் ஒருவர் தரப்பட்டுள்ளார். இவர் ஆணா, பெண்ணா என்பதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதன் பெயர் CortanaTM. இந்த உதவியாளர், நீங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கும் கட்டளைச் சொற்களைப் புரிந்து கொண்டு செயல்படும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடித்தருமாறு இதனிடம் கூறலாம். இணையத்திலும் தகவல்களைத் தேடுமாறு கேட்கலாம். CortanaTM உடன் அடிக்கடி அரட்டை அடித்து வந்தால், அதற்கு எவ்வாறு சொற்களைக் கூற வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும்.
8. புதியதாக இணையத்தில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் ஸ்டோரில், பல விளையாட்டுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் இலவச விளையாட்டுகளும் உண்டு. இவற்றில் சிலவற்றையாவது தரவிறக்கம் செய்து விளையாடிப் பாருங்கள்.
9. இணையத்தில், மிகப் பயனுள்ள ஒன்றைக் காண்கிறீர்கள். ஆனால், படித்தறிய நேரம் இல்லை. உடனே அந்த தளத்தினை Reading List ல் சேர்த்துவிடுங்கள். இதில் அந்த தளத்திற்கான குறிப்பு பதிந்து வைக்கப்படும். பின்னர், தேவைப்படும்போது, இதனை இயக்கித் தேவையான தளங்களுக்குச் செல்லலாம்.
10. ஸ்டைலஸ் எனப்படும் டிஜிட்டல் திரைக்குச்சியுடன் டேப்ளட் பி.சி. பயன்படுத்துபவர்கள், இணைய தளங்களை, அதன் உதவியுடன் குறித்துக் கொள்ளலாம். குறித்ததை, கிராபிக்ஸ் ஆக அமைத்துக் கொள்ளலாம். பழைய வசதிகளுடன், புதியதாகவும் பல வசதிகள் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன. இவை குறித்த நூல்களைப் படித்து, முழுமையாக இதனை இயக்கிப்பார்த்து அனுபவிக்கவும்