விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தயாராக உள்ள நிலையில், பலர், விண் 10 பதிந்த பின்னர், அதன் இயக்கம் பிடிக்கவில்லை என்றால், முன்பு இருந்த விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7க்குப் பின் நோக்கிச் செல்ல முடியுமா? என்று அறிய விரும்புகின்றனர். சிலர், அந்த வசதி இருந்தால் மட்டுமே, விண் 10 சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடவும் விரும்புகின்றனர்.
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 7லிருந்து அப்கிரேட் வழியில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திருந்தால், மீண்டும் விண்டோஸ் 8 அல்லது விண் 7 சிஸ்டத்தினை மீண்டும் பெறலாம். மீண்டும் விண் 8 வேண்டும் என்றால், அதற்கும் வழி தரப்பட்டுள்ளது. இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு முன் எந்த விண்டோஸ் சிஸ்டத்தினைப் பயன்படுத்தினீர்களோ, அதற்குத்தான் மீண்டும் செல்ல முடியும்.
விண் 7லிருந்து, விண் 10 அப்கிரேட் செய்தவர்கள், விண் 7க்குச் செல்லலாம். இதற்கு ஸ்டார்ட் மெனு திறந்து, Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Update & security” என்ற ஐகானில் கிளிக் செய்து, அதில் “Recovery” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Go back to Windows 7″ அல்லது “Go back to Windows 8.1″ என்ற ஆப்ஷன் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
இதனைத் தேர்ந்தெடுத்து Get started என்ற பட்டனில் அழுத்தினால், விண்டோஸ் 10 நீக்கப்பட்டு, முன்பு உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வந்த விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கு முன்னர், மைக்ரோசாப்ட், “ஏன் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாறுகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கும். உங்கள் புதிய சிஸ்டத்தினைப் பிடிக்காமல் போனதற்கான காரணத்தை விளக்கமாகத் தரவும். பின்னூட்டமாக மைக்ரோசாப்ட் எடுத்துக் கொள்ளும்.
இது எப்படி செயல்படுகிறது? என்ற வினா உங்களுக்கு எழலாம். விண்டோஸ் 10 சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுகையில், அது உங்களின் பழைய விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸ் குறித்த தகவல்களை “C:\Windows.old” என்ற போல்டரில் போட்டு வைக்கிற்து. இதனை பைல் எக்ஸ்புளோரர் மூலம் நீங்கள் பார்க்கலாம். ஆனால், அதனை மாற்றுவதோ நீக்குவதோ கூடாது. அதிலிருந்து பைல்களை எடுத்துப் பயன்படுத்தலாம்.
பொதுவாக, உங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் ஒவ்வொரு பைலையும், புதிய சிஸ்டம் எடுத்து வைக்கும்போது, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் நிறைய இடம் எடுத்துக் கொள்ளப்படும்.
இதனைக் காண Disk Cleanup செயலியை இயக்கி, எவ்வளவு இடம் இதற்கெனப் பயன்படுத்தப் பட்டுள்ளது எனப் பார்க்கலாம். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து அங்கு “Disk cleanup” என டைப் செய்து தேடவும். பின் அதனை இயக்கி, “Clean up system files” என்ற பட்டனை அழுத்தலாம். இங்கு கிடைக்கும் பட்டியலில் ‘Previous Windows installation(s)” என்ற ஒரு பிரிவு இருக்கும். இதன் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்தால், பழைய சிஸ்டம் பைல்களுக்கு எவ்வளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிய வரும். நீங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்குப் போவதில்லை என்ற முடிவினை எடுத்தால், டிஸ்க் கிளீன் அப் செயலி மூலம், இவற்றை நீக்கிவிடலாம். ஆனால், ஒருமுறை நீக்கிவிட்டால், மீண்டும் பழைய சிஸ்டம் கிடைப்பது கடினம்.
இனி, எப்படி, விண் 10லிருந்து, பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்குப் போகலாம் என்று பார்ப்போம். உங்களுடைய கம்ப்யூட்டரில் ஏற்கனவே, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால் இதனைச் செயல்படுத்தலாம். இந்த சிஸ்டம் அதற்கெனத் தரப்பட்ட ப்ராடக்ட் கீயுடன் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டிருக்கும். பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு செல்வதற்கு, புதிய கம்ப்யூட்டர் ஒன்றில், விண்டோஸ் சிஸ்டம் எவ்வாறு முழுமையாகப் பதியப்படுகிறதோ, அது போல செயல்படுத்த வேண்டும்.
இதற்கென, அதிர்ஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களுக்கான ஐ.எஸ்.ஓ. பைல்களைத் தன் இணைய தளத்தில் தரவிறக்கம் செய்திடத் தருகிறது. இந்த இன்ஸ்டலேஷன் பைலைத் தரவிறக்கம் செய்திடவும். இதனை ஒரு டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் அமைத்திட, Microsoft’s Windows USB/DVD download tool என்ற மைக்ரோசாப்ட் டூலைப் பயன்படுத்தவும்.
பின்னர், அந்த யு.எஸ்.பி. அல்லது டிவிடியைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரை பூட் செய்திடவும். பின்னர், அந்த சிஸ்டத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுக்கவும். ஏற்கனவே உள்ள, விண்டோஸ் 10ன் மீதே இதனைப் பதிவு செய்திடவா என்று கேட்கப்படும். அதற்கு ஓகே கிளிக் செய்திட்டால், பழைய சிஸ்டம் மீண்டும் பதியப்படும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் 10 சார்ந்த முக்கிய பைல்களுக்கான பேக் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முன்னதாக, உங்கள் பழைய சிஸ்டத்தின் ப்ராடக்ட் கீயினை நகலெடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் கேபின் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரின் பின்புறத்தினை ஆய்வு செய்தால், இந்த கீ கிடைக்கலாம். சில லேப் டாப் கம்ப்யூட்டரில், அதில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் அல்லது அது வைக்கப்படும் இடத்தில் “certificate of authenticity” இருக்கும். அதில் இந்த கீ தரப்பட்டிருக்கும். அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதில் சி ட்ரைவிற்கு மேலாக, கம்ப்யூட்டர் என இருப்பதில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், காட்டப்படும் கூறுகளில், இறுதியாக ப்ராடக்ட் கீ காட்டப்படும். அதனை அப்படியே ஸ்கிரீன் ஷாட் ஆக எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 கொண்ட பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்திருந்தால், இந்த ப்ராடக்ட் கீக்கு வேலையே இல்லை. இந்த கீ, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பகுதி ஒன்றில், நீக்கமுடியாதபடி பதியப்பட்டிருக்கும். விண்டோஸ் 8.1. அதனைத் தானாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும்.
இங்கு ஓர் எச்சரிக்கையினைத் தர விரும்புகிறேன். இது போல, பின்னோக்கி, பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு வர விரும்பினால், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்து ஒரு மாத காலத்திற்குள் வர வேண்டும். ஏனென்றால், விண்டோஸ் 10 பதியப்பட்ட பின் ஒரு மாத காலத்திற்குத்தான், பழைய விண்டோஸ் போல்டரில் பைல்கள் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், அவை நீக்கப்படும். மேலும், நீங்களாக C:\Windows.old போல்டரை நீக்கி இருந்தாலும், பழைய சிஸ்டத்திற்குச் செல்ல முடியாது.
நீங்கள், புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தால், அதிலிருந்து விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 செல்வது கடினம். இதனை, விதிகளுக்குட்பட்டு மேற்கொள்வதாக இருந்தால், விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 லைசன்ஸ் கீ ஒன்று கட்டணம் செலுத்திப் பெற்றுத்தான் இதனை மேற்கொள்ள முடியும். அப்போது தரப்படும் ப்ராடக்ட் கீயினை, இன்ஸ்டால் செய்திடுகையில் தர வேண்டியதிருக்கும்.
எப்போது, நாம் விண் 10லிருந்து, முந்தைய சிஸ்டத்திற்குச் செல்ல விரும்புவோம்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள், புதியதாக அமைக்கப்பட்ட விண்டோஸ் 10 சிஸ்டத்தில் செயல்படவில்லை என்றாலோ, அல்லது வேறுவிதமாகச் செயல்படத் தொடங்கினாலோ, நாம் பழைய சிஸ்டத்திற்கு மாறத் தொடங்குவோம். அல்லது முக்கியமான ஹார்ட்வேர் சாதனம் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனாலும் நாம் பழைய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவோம்.
மேலே காட்டப்பட்ட வழிகள் மூலம், எப்போது வேண்டுமானாலும், பழைய சிஸ்டத்திற்குச் செல்லலாம். மீண்டும் விரும்பினால், விண்டோஸ் 10 ஐ இன்ஸ்டால் செய்திடலாம். இலவசமாகவே இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால், எல்லாம் ஓர் ஆண்டு கால
அவகாசத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதன் பின்னர், கட்டணம் செலுத்த வேண்டும்.