விண்டோஸ் 10 சில சந்தேகங்கள்
கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனி ஐ.எஸ்.ஓ. பைலாகக் கிடைக்குமா? அதனைப் பயன்படுத்தி, முழுமையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திட இயலுமா?
பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான, ஐ.எஸ்.ஓ. டிஸ்க் இமேஜ் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். https://www.microsoft.com/en-us/software-download/windows10 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்கு செல்லவும். ஏற்கனவே விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டரில், சிஸ்டம் பதியப்பட்டால், ப்ராடக்ட் கீ தேவையில்லை. மேலே சொல்லப்பட்ட தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட டிஸ்க் இமேஜ் மூலம், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, நீங்கள் குறிப்பிட்டது போல, முழுமையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செயல்பாட்டினை மேற்கொண்டால், அதற்கான ப்ராடக்ட் கீ கொடுத்தால் தான், சிஸ்டம் இயங்கும். இதனை கட்டணம் செலுத்தித்தான் நீங்கள் பெற வேண்டியதிருக்கும். இதனை மேற்கொள்ளும் முன், https://www.microsoft.com/en-us/software-download/faq என்ற முகவரியில் மைக்ரோசாப்ட் தரும் கேள்வி~பதில் பகுதியை நன்கு படித்து, விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும்.
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடுவதனை ரிசர்வ் செய்திடுவது கட்டாயமா?
பதில்: கட்டணம் செலுத்திப் பெற்ற விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதற்கு, முன்பதிவு செய்து வைக்கலாம். இவ்வாறு செய்வதில் உள்ள ஓர் அனுகூலம் என்னவென்றால், விண்டோஸ் 10 வெளியாகும் முன்னரே, அதற்கான சில சிஸ்டம் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டிருக்கும். பின் நாளில், விண் 10 பதியப்படுகையில், இன்ஸ்டலேஷன் பைல்களைத் தரவிறக்கம் செய்திட, உங்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. பல கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண் 10 சிஸ்டம் பைல்கள் ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டால், மைக்ரோசாப்ட் நிறுவன சர்வர்களில் அந்த அளவிற்கு பேண்ட்வித் எனப்படும் இணைய அலைக்கற்றை இருக்க வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படக் கூடாது என்பதற்காகவே, முன்பதிவு செயல்பாட்டினை, மைக்ரோசாப்ட் ஏற்படுத்தியுள்ளது.
இலவசமாக, விண்டோஸ் 10 சிஸ்டம் பெற, முன்பதிவு என்பது கட்டாயமல்ல. இது குறித்து பல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்கும் முன்பாக, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து, அதில் ஏற்படும் புதிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டிலும், முந்திக் கொண்டு ஓடுபவர்கள் ஏற்படுத்தும் தூசி அடங்கிய பின்னர், பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்த பின்னர், புதிய சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.
கேள்வி: கிளீன் இன்ஸ்டால் (Clean Install) என்று அழைக்கப்படும் விதத்தில், முழுமையான, தொடக்கம் முதலாகிய பதிவின் மூலம் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேற்கொள்ள என்ன செய்திட வேண்டும்?
பதில்: தொடக்கம் முதலாக, ஹார்ட் டிஸ்க்கில் வேறு எந்த சிஸ்டம் பதிவுகள் இல்லாத நிலையில், முதல் சிஸ்டம் பதிவாக, விண்டோஸ் 10 னை, உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எப்போது? அப்கிரேட் செய்திட்ட பின்னரா? அல்லது, அப்கிரேட் செய்திடும்போதேவா?
இது குறித்து மைக்ரோசாப்ட் தன் தளத்தில் தெரிவித்துள்ளதனை இங்கு தருகிறேன். இந்த தளம் https://www.microsoft.com/en-us/windows/windows-10-faq என்ற முகவரியில் இயங்குகிறது.
இலவசமாகத் தரப்படும் விண்டோஸ் 10 செயல்பாட்டின் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொண்ட பின்னர், அந்த கம்ப்யூட்டரில், எத்தனை முறை வேண்டுமானாலும், கிளீன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதற்கென, நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான உரிமத்தினை கட்டணம் செலுத்திப் பெற வேண்டியதில்லை. அல்லது பழைய விண்டோஸ் 8 அல்லது 7 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து, பின் விண் 10 இலவச அப்கிரேட் செய்திடத் தேவை இல்லை.
விண் 1-0 பதிந்த பின்னர், இன்ஸ்டலேஷன் செய்திடத் தேவையான மீடியாவை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். யு.எஸ்.பி. ட்ரைவ் அல்லது டிவிடி மூலம் இதனைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கிளீன் இன்ஸ்டால் செய்திட, அதே கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.
இதில் ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால், 32 பிட் சிஸ்டத்தினை, 64 பிட் சிஸ்டமாக உயர்த்திக் கொள்வதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு, பயனாளர்கள், முதலில் பழைய 32 பிட் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து, விண் 10க்கு அப்கிரேட் செய்த பின்னர், 64 பிட் சிஸ்டத்திற்கு கிளீன் இன்ஸ்டால் செய்திடலாம்.
கேள்வி: பழைய ஆப்பரேட்டிங் (விண் 8 மற்றும் விண் 7) சிஸ்டங்களில் தரப்பட்ட எவையேனும், புதிய சிஸ்டத்தில், நீக்கப்பட்டுள்ளதா? ஏன்? அதற்கான மாற்று வழிகள் என்ன? பழைய புரோகிராம்கள், கேம்ஸ் ஆகியவை இதிலும் இயங்குமா?
பதில்: ஆம், துரதிருஷ்டவசமாக, சில நீக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் தான் இதுவரை அளித்துவந்த விண்டோஸ் மீடியா சென்டரை நீக்கியுள்ளது. டிவிடி இயக்கத்திற்கு, வேறு ஒரு நிறுவனத்தின் ட்ரைவர் பைல் தேவைப்படலாம். விண்டோஸ் மீடியா சென்டருக்குப் பதிலாக, வி.எல்.சி. மீடியா பிளேயர் போன்ற செயலிகள் தேவைப்படலாம்.
விண்டோஸ் 7ல் தரப்பட்ட டெஸ்க்டாப் சாதனங்கள் இயக்க முறை இதில் இல்லை. கேம்ஸ் நீக்கப்பட்டு, புதிய முறையில் தொகுப்பாகத் தரப்படுகின்றன.
முந்தைய சிஸ்டத்தில் இயங்கிய அனைத்து புரோகிராம்களும், கேம்ஸ் ஆகியவையும் இதில் இயங்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. பொதுவாக, விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்களில் இயங்கிய அனைத்தும், விண் 10ல் இயங்கும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்காது என அறிந்தால், விண் 10 க்கு அப்கிரேட் செய்யப்படும்போது தெரிவிக்கப்படும்.
கேள்வி: முன்பு நான் கட்டணம் செலுத்திப் பெற்ற விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7 உரிமம் என்னவாகும்? காலாவதியாகிவிடுமா?
பதில்: விண்டோஸ் 1-0, இலவச அப்கிரேட் முறையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், 30 நாட்கள் கால அவகாசத்தில், மீண்டும் பழைய சிஸ்டத்திற்குத் திரும்புவதற்கான வழிகளையும், பைல்களையும் கொண்டிருக்கும். நீங்கள் விரும்பினால், அந்த சிஸ்டத்திற்குச் செல்லலாம். விண் 10 அப்கிரேட் செய்திடுகையில், விண் 8 மற்றும் 7 உரிமங்கள், விண் 10 உரிமமாக மாற்றப்படும்.
கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்கிரெட் செய்வதைக் காட்டிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து அப்கிரேட் செய்வது சிரமமாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வகையிலும் இருக்குமா?
பதில்: விண்டோஸ் 10 என்பது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது அப்கிரேட் ஆக, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுகையில், புதிய பைல்கள் பழைய பைல்களின் இடத்தில் எழுதப்படும். பழைய பைல்கள், அவற்றின் அமைப்புகள் தனியே பதிந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் பாதுகாக்கப்படும். தொழில் நுட்ப ரீதியாக, இது ஒரு சவால் தரும் விஷயம் தான். ஆனால், மைக்ரோசாப்ட் இதனை மேற்கொள்ள தன் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 7ல் தரப்பட்டுள்ள மீடியா சென்டர் போன்ற சில புரோகிராம்கள் நீக்கப்படும். மைக்ரோசாப்ட் இந்த இலவச அப்கிரேட் செயல்பாட்டிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. விண்டோஸ் 7 எனில், அதன் எஸ்.பி. பேக் 1 இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். விண் 8 எனில், அது விண் 8.1க்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு சிஸ்டங்களிலிருந்தும் அப்கிரேட் செய்வது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவோ, அல்லது சிக்கல்கள் நிறைந்ததாகவோ இருக்காது.
அப்படியே நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளும் சிஸ்டமாக விண்டோஸ் 8 இருக்கலாம். ஏனென்றால், அது ஏற்கனவே கூடுதலான வேகத்தில் இயங்கும் சிஸ்டமாக இருப்பதால்.
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக எவற்றைக் கூறுவீர்கள்?
பதில்: பலவற்றைக் கூறலாம். பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இருப்பினும், என் பார்வையில் எவை மிக முக்கிய புதிய அம்சங்கள் என்று சிலவற்றைத் தருகிறேன்.
1. வழக்கமான ஸ்டார்ட் மெனு தரப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் 7ல் தரப்பட்ட ஸ்டார்ட் மெனு அம்சங்களும், பின்னர் விண்டோஸ் 8ல் தரப்பட்டுள்ள அம்சங்களும் கிடைக்கின்றன. லைவ் டைல்ஸ்களும் தரப் பட்டுள்ளன. இவை வேண்டாம் என நீங்கள் கருதினால், விலக்கிக் கொள்ளலாம்.
2. நம்முடன் பேசி நமக்கு உதவக் கூடிய கார்டனா என்னும் டூல் (Cortana) விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து, அதன் ஒரு பகுதியாகத் தரப்பட்டுள்ளது. — “Find me photos over 5GB in size from December of last year” என்று இதனிடத்தில் கூறினால், அது தேடி எடுத்துத் தரும்.
3. இதில் கிடைக்கும் DirectX 12 இயக்கம், விண்டோஸ் 1-0ல் மட்டுமே கிடைக்கக் கூடியது.
4. மைக்ரோசாப்ட் எட்ஜ் என்ற புதிய பிரவுசர், முற்றிலும் புதிய கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுகிறது. இதன் வேகம், தற்போதைய எந்த பிரவுசரின் வேகத்தைக் காட்டிலும் 120 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
5. கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்கும் பிரிவில், பயோ மெட்ரிக் முறைக்கான வழி தரப்பட்டுள்ளது. ‘விண்டோஸ் ஹலோ’ என இதனை அழைக்கின்றனர்.
6. விர்ச்சுவல் டெஸ்க்டாப் இதில் சப்போர்ட் செய்யப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் திரைகளை உருவாக்கிப் பயன்
படுத்தலாம்.
7. புதிய வகை நோட்டிபிகேஷன் மையம் செயல்படுகிறது.
8. டாஸ் சிஸ்டம் அடிப்படையில் இயங்கும் கட்டளைப் புள்ளி எனப்படும் கமான்ட் ப்ராம்ப்ட், இதில் முற்றிலும் புதிய வகையில் தரப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்களும் விண்டோஸ் 10க்கு மாறும்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 7, விண் 8.1 பயன்படுத்தும் தனி நபர்களுக்கு மட்டுமே இலவசம். வர்த்தக நிறுவனங்கள் கட்டணம் செலுத்தித்தான் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், அவ்வளவு எளிதில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, தங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது தங்கள் வர்த்தக செயல்பாட்டினைக் கெடுத்துவிடும் என்ற அச்சத்தில், பொறுத்துப் பார்த்து, ஹார்ட்வேர் மாற்றத்திற்கான செலவினங்களைக் கணக்கிட்ட பின்னரே மாறுவார்கள். விண்டோஸ் எக்ஸ்பி என்றோ செத்துவிட்டது என மைக்ரோசாப்ட் கூறிய பின்னரு, அமெரிக்க கடல்படை அலுவலகங்களில் இயங்கும் கம்ப்யூட்டர்களில், இன்னும் எக்ஸ்பி சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
ஆனால், அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி, பல வர்த்தக நிறுவனங்கள், இரண்டு ஆண்டு காலத்திற்குள், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அப்படி நடந்துவிட்டால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், நூறு கோடி சாதனங்களில் இயக்கம் என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும்.