வரும் ஜூலை 29ல் கிடைக்க இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பலரும் ஆவலுடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம்.
1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். மைக்ரோசாப்ட் தன் வலைமனையில் (http://www.microsoft.com/en-us/windows/windows-10-specifications) இதனை அறிவித்துள்ளது.
விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் அல்ட்டிமேட், விண்டோஸ் 8 ப்ரோ, விண்டோஸ் 8.1 ப்ரோ ஆகிய சிஸ்டம் தொகுப்புகளிலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொண்டால், அவற்றில், விண்டோஸ் மீடியா சென்டர் இருக்காது. அப்டேட் செய்யப்படுகையில் இந்த அப்ளிகேஷன் நீக்கப்படும்.
2. டிவிடி இயக்கும் செயலி: விண்டோஸ் மீடியா சென்டர் வழியாக, டிவிடிக்களை இயக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். மீடியா சென்டர் நீக்கப்படுவதால், டிவிடிக்களை இயக்க தனியான ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும்.
3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் நாம் இயக்கிக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.
4. விண்டோஸ் 10 ஹோம் பதிப்பினைக் கொன்டிருப்பவர்களின் கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் பைல்கள் தாமாகவே பதியப்படும். விண்டோஸ் 10 ப்ரோ மற்றும் என்டர்பிரைஸ் ஆகிய தொகுப்புகள் வைத்திருப்போர் மட்டும் அப்டேட் பைல்கள் தங்களுக்குத் தேவை இல்லை என்று கருதினால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும்படி அமைக்க வசதி தரப்பட்டுள்ளது.
5. பிரபல விளையாட்டுகள்: சாலிடெர், மைன்ஸ்வீப்பர் மற்றும் ஹார்ட்ஸ் ஆகிய விளையாட்டுகள், விண்டோஸ் 7 தொகுப்பு வரை தரப்பட்டு வந்தன. விண்டோஸ் 10 சிஸ்டம் இதன் மீது அப்டேட் செய்யப்படுகையில், இவை நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக, “Microsoft Solitaire Collection” மற்றும் “Microsoft Minesweeper” என்ற பெயரில் இந்த விளையாட்டுகள் நிறுவப்படும்.
6. விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ்: இந்த செயலி உங்கள் சிஸ்டத்தில் பதியப்பட்டிருந்தால், ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் நீக்கப்படும். இதற்குப் பதிலாக, க்ளவ்ட் ஸ்டோரேஜ் வகைப் பதிப்பு ஒன்று நிறுவப்படும்.
மேலே சொல்லப்பட்டவை நீக்கப்பட்டாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் தர இருக்கும் புதிய வசதிகள் பல, இந்தக் குறையினை நீக்கிவிடும். புதிய எட்ஜ் பிரவுசர், புதிய இணைந்த கேண்டி க்ரஷ் கேம், விண்டோஸ் போன் மேப் அப்ளிகேஷன் எனப் பலவற்றை இந்த வகையில் குறிப்பிடலாம்.
வேர்ட் டிப்ஸ்ஸ.பேக் அப் காப்பி:
பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை வேர்ட் எடுப்பதே இல்லை. அதில் அந்த வசதி எல்லாம் இல்லை எனவும் பதிலளிக்கலாம். இதில் எது உண்மை?
வேர்டில் உருவாக்கப்படும் பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த செயல்பாட்டினை வேர்ட் தானாக, மாறா நிலையில் கொண்டிருக்க வில்லை. நாமாகத்தான் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டும். அது எப்படி எனப் பார்க்கலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி வேர்ட் ஆப்ஷன்ஸ் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனுடைய பைல் டேப் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, அதன் பின்னர், ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கீழாக Save options என்பதனைக் காணும் வரை செல்லவும். டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Save என்ற ஆப்ஷனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டும் ஒன்றல்ல.
4. இங்கு Always Create Backup Copy என்பதில் கிளிக் செய்திடவும். செக் மார்க் ஒன்றை இதில் ஏற்படுத்தவௌம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனை அடுத்து, உருவாக்கப்படும் டாகுமெண்ட் அனைத்திற்கும் பேக் அப் காப்பி அமைக்கப்படும். அதாவது, டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் சேவ் செய்திடுகையில், அதற்கு முந்தைய நிலையில் உள்ள டாகுமெண்ட், பேக் அப் காப்பியாக இருக்கும். ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போன நிலையில், இந்த பேக் அப் காப்பியினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பைலின் துணைப் பெயரினை ஒரிஜினல் பைலின் பெயராக மாற்றிக் கொள்ளலாம்.
எண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. இந்த மேற்கோள் அடையாளக் குறிகள் அப்படியே உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டில் வேறு ஒரு வழி மூலம் ஏற்படுத்தலாம்.
ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0145என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்டு மூலம் டைப் செய்திட வேண்டும்.
எக்ஸெல் டிப்ஸ்ஸசார்ட்களில் டேட்டா லேபிள்:
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை – சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.
3. இதில் உள்ள Data Labelsஎன்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.
4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.
அடுத்து எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இந்த பாக்ஸில் உள்ள Data Lables என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும்.
4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.
புதிய வகை ஒர்க்புக் பதிவு: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம்.
இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இடது பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்கமாக properties காட்டும்.
2. அடுத்து Document Propertiesஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.