கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு மிகவும் மெலிதானதும், எடை குறைந்ததுமான சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
YOLK எனப்படும் இச் சார்ஜர் சூரிய சக்தியில் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குறிப்பிடும் புத்தகங்கள், டையரி என்பவற்றுக்குள் வைத்து எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவை 2.5W, 5W, 7.5W, 10W மின்சக்தியை வெளிவிடக்கூடியதாக இருப்பதுடன் iPhone 6 கைப்பேசியினை 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முதன் முறையாக விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படவுள்ள இச்சாதனம் தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் இன்டர்நெட் வலையில் 8 லட்சம் பேர்
இணைய இணைப்பினை இதுவரை பெறாத அனைவரும், அதனைப் பெறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இண்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்னும் திட்டத்தினை இந்தியாவில், சென்ற பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தில், இந்தியாவில் ஏழு மொபைல் சேவை மண்டலங்களிலிருந்து (சென்னை, தமிழ்நாடு, மும்பை, மஹாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திர மாநிலம் மற்றும் கேரளா), 8 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மொபைல் சேவை நிறுவனம் வழங்கும் இணைப்பினைப் பெற்றவர்களுக்கு, 30 இணைய தளங்களுக்கான இணைப்பு, இந்த திட்டத்தில்
இணைபவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, மேலும் எட்டு நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பன்னாட்டளவில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தில், 80 கோடி பேர் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு இலவச இணைய தளங்களை பார்த்துப் பயன் பெறும் மக்கள், தொடர்ந்து கட்டணம் செலுத்தி இவற்றைப் பார்க்கத் தொடங்குவார்கள் என பேஸ்புக் நிறுவன அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில், இந்த திட்டம், அனைவருக்கும் சமமான இணைய சேவை என்னும் (நெட் நியூட்ராலிட்டி) என்ற கொள்கைக்கு எதிரானது என்று பலத்த எதிர்ப்பு இந்தியாவில் எழுந்துள்ளது. ஒரு சில நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது, சலுகை அடிப்படையில் அணுகுதலை வழங்குவது சரியல்ல என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுவும், குறிப்பிட்ட மொபைல் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும், அதாவது கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும், இணைய இணைப்பினை இலவசமாக வழங்குவது சரியல்ல என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அதே நேரத்தில், பன்னாட்டளவில், சாம்சங் மற்றும் குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, 500 கோடி மக்களை இணைத்திட இந்த திட்டம் முயற்சிக்கும் என இதற்கான அலுவலர் தெரிவித்துள்ளார்.