எல்லாருக்கும் சமமான இணைய சேவை குறித்த மக்கள் எழுச்சியின் விளைவாக, தகவல் தொழில் நுட்ப துறையில் பல்வேறு கருத்துகள், நாள்தோறும் வெளியான வண்ணம் உள்ளன. இந்தியாவில், மொபைல் சேவை தருவதில், முன்னணியில் இயங்கும் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள், இணையத்தில் இயங்கும் சில நிறுவனங்கள், மொபைல் போனில் அழைப்புகளை இலவசமாக்குவதால், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதென்றும், அதனால், இந்த தளங்களைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பது நியாயமே என்று முறையிட்டுள்ளனர்.
இந்த விளக்கத்தினை, இந்தியாவில் இயங்கும் இணையம் மற்றும் மொபைல் நிறுவனங்களுக்கான அமைப்பு (Internet and Mobile Association of India (IAMAI)) ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு பொதுவான குற்றச்சாட்டு என்றும், இதற்கான நிதி இழப்பு ஆதாரங்களை, இந்த நிறுவனங்கள் தரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும் கருத்து தெரிவிக்கையில், இணையம் வழி தரப்படும் போன் அழைப்புகள் (voice over internet protocol (VOIP) calls) வழக்கமான மொபைல் சேவை நிறுவனங்கள் தரும், மொபைல் அழைப்புகளுக்கு இணையானவை அல்ல. இரண்டு வகையையும் ஒரே மாதிரியாகக் கருதக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. வழக்கமான தொலைபேசி அழைப்புகளிலிருந்து, இணைய வழி இணைப்புகள் முற்றிலும் மாறுபட்டவை என அறிவித்துள்ளது.
ஒரு VOIP அழைப்புக்கு வழக்கமான தொலைபேசி அழைப்புக்கான செலவைக் காட்டிலும் மூன்று பங்கு செலவாகும். இதே வழியில் வழங்கப்படும் “சேட்” எனப்படும் உரையாடல் வசதி மூலம், இசை, விடியோ மற்றும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மிக வேகமாக டேட்டா அனுப்பப்பட்டு பெறப்படுகிறது. எனவே, மொபைல் சேவை நிறுவனங்களின் வருமானத்தை இவை பாதிக்கின்றன என்று சொல்வதை, இங்கு ஒப்பிட்டு பார்க்க அடிப்படையே இல்லை. மொபைல் சேவை நிறுவனங்கள், எப்படியாவது, குறிப்பிடப்படும் இணைய நிறுவனங்களின் வருமானத்தை எப்படியாவது பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் தான் இந்த கருத்துகளை வைப்பதாகவும், இவற்றை IAMAI வன்மையாக எதிர்க்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிற்கான கட்டணச் செலவு குறித்து IAMAI தெளிவு படுத்தியுள்ளது. இணையம் வழி அழைப்பு மிக மலிவானது என்று சொல்வது ஒரு கட்டுக் கதை. பேஸ்புக், ஸ்கைப், அமேஸான் மற்றும் பிற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் இந்த வசதியைத் தந்து வருகின்றன. இணைய வழிமுறை வழியாக, அழைப்பு ஒன்றினை 60 நிமிடங்கள் மேற்கொண்டால், அதில் ஏற்படும் ஒலி பரிமாற்றத்திற்கு மட்டும் 25 எம்.பி. முதல் 35 எம்.பி. வரையில் டேட்டா பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். இதுவே விடியோவும் சேர்ந்தால், அதற்கு மட்டுமே 240 எம்.பி. டேட்டா தேவைப்படும்.
ஸ்கைப் தளத்தில், அதன் வாடிக்கையாளர்களுக்கிடையே அழைப்பு ஏற்படுத்துகையில், அந்த இணைப்பு 2ஜி அல்லது 3ஜி என்பதனைப் பொறுத்து சராசரியாக ரூ. 3 வரை செலவாகும். எனவே, ஒரு மணி நேரம் பேசினால், ஏறத்தாழ ரூ.180 வரை செலவு உயரும்.
ஆனால், மொபைல் சேவை நிறுவனங்கள் சார்பாக, பார்தி ஏர்டெல் தெரிவிக்கையில், மொபைல் அழைப்புகளில் ஒரு சதவீத அழைப்பு அப்ளிகேஷன் வழி இணையம் மூலம் தரப்பட்டால், மொபைல் சேவை நிறுவனங்கள் ரூ.1,200 கோடி வருமானத்தை இழக்கின்றன என்று கூறியுள்ளது. இது தவறானது என்று, இந்த அறிக்கையில் உள்ள பல ஓட்டைகளை, IAMAI சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனங்கள், தாங்கள் பெரிய அளவில் கடனாளியாகி உள்ளோம் என்று கூறுவது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்திற்கென இவர்கள் செலவு செய்ததனால் தான் என்று சுட்டிக் காட்டியுள்ளது. மற்றபடி இணைய வழி அழைப்பு தரும் நிறுவனங்களால் அல்ல என்பதனையும் தெளிவுபடுத்தியுள்ளது.
மொபைல் சேவை நிறுவனங்கள், டெக்ஸ்ட் மற்றும் குரல் வழி அழைப்பு சேவைகளைத் தவறாக, உடனடி சேவையுடன் ~~ வாட்ஸ் அப் மெசஞ்சர் அல்லது பேஸ்புக் மெசஞ்சர் சேவையுடன் ~~தொடர்பு படுத்தி கருத்து தெரிவித்துள்ளன. தொடர்பு படுத்தி, “ஒரே சேவை, ஒரே சட்ட திட்டம்” எனக் குரல் கொடுக்கின்றன. ஒப்பிட்டு பார்க்கும் அடிப்படையே தவறு என உறுதியாகக் கூறியுள்ளது IAMAI.
இந்த பிரச்னை குறித்து TRAI அமைப்பு இன்னும் எந்த முடிவான கருத்தும் தெரிவிக்கவில்லை. மக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற நிலையில், நிலைமையை இன்னும் ஆய்வு செய்து வருகிறது.
வாட்ஸ் அப் அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை
அண்மையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அழைப்புகளை ஏற்படுத்திப் பேசுவது, இதன் பயனாளர்கள் இடையே அதிகரித்து வருகிறது. “இது முற்றிலும் இலவசம். மொபைல் போன் அழைப்புகள் போல் இல்லை” என மக்கள் கருதுகின்றனர். சற்று தீவிரமாகப் பார்த்தால், இந்த வகை அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை என்பது புரியும். இதனைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் வாட்ஸ் அப் வழி அழைப்புகளை மேற்கொள்ளும் முன் சற்று யோசிப்பீர்கள். இதோ இங்கு விவரங்களைப் பார்க்கலாம்.
வாட்ஸ் அப் அழைப்பு என்பது, நம் மொபைல் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாய அடிப்படை. இணைய இணைப்பிற்கு நம் திட்டத்திற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். வை பி இணைப்பு இருந்தால், இதன் சுமை குறையும். இல்லையேல், நம் இணைய இணைப்பின் திறன், பணம் குறையும்.
வாட்ஸ் அப் அழைப்பின் போது, 60 விநாடிகளில் ஏறத்தாழ 1.3 எம்.பி. டேட்டாவினைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, சற்று குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.
இந்தியாவில், ஒரு சராசரி 3ஜி டேட்டா திட்டம் மாதத்திற்குக் குறைந்தது ரூ.200 முதல் ரூ.350 வரை செலவாகிறது. இது குறைந்த அளவு தான். இதன் அடிப்படையில் பார்த்தால், நிமிடம் ஒன்றுக்குக் குறைந்தது 20 பைசா செலவாகும். வழக்கமான மொபைல் போன் பயன்பாட்டிற்கு நாம் 30 முதல் 80 பைசா வரை செலவழிக்கிறோம்.
500 எம்.பி. டேட்டா திட்டம் கொண்டிருந்தால், வாட்ஸ் அப் அழைப்பு 6 மணி நேரம் பேசும் அளவைக் கொடுக்கும்.
3ஜி அல்லது 4ஜி வகையில், நிமிடத்திற்கு 1.3 எம்.பி. என எடுத்துக் கொண்டால், நாள் ஒன்றுக்கு 11 நிமிடம் பேசும் காலம் கிடைக்கும்.
இது அழைப்பவருக்கானது மட்டும் என எண்ணிவிடாதீர்கள். அழைப்பினைப் பெறுபவரும் இதே அளவிற்கு டேட்டா செலவு அமையும். ஆனால், வழக்கமான மொபைல் அழைப்பில், அழைப்பினைப் பெறுபவருக்கு எந்த செலவும் இல்லை. எனவே, அழைப்பை ஏற்படுத்துபவர் மற்றும் அழைப்பினைப் பெறுபவருக்கான இரு வழி செலவினையும் பார்த்தால், வழக்கமான மொபைல் அழைப்பே குறைவானது என்ற முடிவை நாம் எடுக்கலாம்.