ரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய வகையிலான காரினை சொகுசு கார்களைத் தயாரிக்கும் Mercedes நிறுவனம் வடிவமைத்துள்ளது.
நான்கு பேர் பயணிக்கக்கூடிய சிறிய ராயில் போன்று இருக்கும் இக்காருக்கு Smart Forrail எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் தலா 80 கிலோகிராம் எடைகொண்ட நான்கு சில்லுகள் காணப்படுவதுடன் இவற்றில் ரயர் மற்றும் டியூப் இல்லாதவாறு முற்றிலும் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆறு மாத கடும் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இக்காரானது எதிர்காலத்தில் இலகுவானதும், விரைவானதுமான போக்குவரத்தில் பாரிய பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேட்காமல் கிடைக்கும் கேண்டி க்ரஷ் சாகா
ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஐபோன்களில் கேண்டி க்ரஷ் சாகா விளையாடாத உலகளாவிய பயனாளர்களைக் காண்பது மிக அரிது. லெவல் தாண்ட முடியாமல் “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று இதனைக் கை விட்டவர்கள் பலருண்டு. அந்த அளவிற்கு மக்களிடையே புகழ் பெற்ற இந்த விளையாட்டை விளையாடித் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழந்தவர்கள், இழப்பவர்களும் பலர் உண்டு. தங்கள் கல்லூரி பாடத்தை ஒதுக்கி, இதனை இரவு பகலாக விளையாடித் தாங்கள் பட்டம் பெறுவதை ஒத்தி போட்ட மாணவ மாணவியர் ஏராளம். ஏன், இந்த விளையாட்டினை விளையாடி, “நீயா? நானா?” எனப் போட்டியிட்டு, மனம் விலகிய தம்பதியரும் உண்டு. அது மட்டுமா! இந்த
விளையாட்டைச் சார்ந்து 133 கோடி டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விளையாட சான்ஸ் கேட்டும் பவர் அப் கேட்டும் பணம் செலுத்தி பெற்ற வகையில் இந்த வர்த்தகம் நடந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், 56 கோடியே 95 லட்சம் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.
இந்த கேம் தற்போது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது (http://news.xbox.com/2015/05/games-candy-crush-saga-is-coming-to-windows-10). நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் சேர்த்து இந்த விளையாட்டும் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். விண்டோஸ் சிஸ்டத்துடன் சாலிடெர், ஹார்ட்ஸ் மற்றும் மைன் ஸ்வீப்பர் விளையாட்டுகள் இணைந்தே தரப்பட்டன. தற்போது கேண்டி க்ரஷ் சாகா இந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறது.
இனி அலுவலகங்களில் வேலை பார்க்கும்போதே, மானேஜருக்குத் தெரியாமல் பலர் இந்த விளையாட்டை விளையாடுவதையும், தான் எத்தனை லெவல் தாண்டியிருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்வதிலும், ஒவ்வொரு லெவலுக்கும் டிப்ஸ் கிடைக்குமா என்று பலர் அலைவதையும் பார்க்கலாம். சில அலுவலகங்களின் கம்ப்யூட்டர்களில், பேஸ்புக் போன்ற தளங்கள், வேலை பார்ப்பவர்கள் அணுக முடியாதபடி தடை செய்யப்பட்டிருக்கும். இப்போது, இந்த கேம் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், அப்படிப்பட்ட தடை எதுவும் போட முடியாது. இன்னொரு சிக்கலை எப்படி மைக்ரோசாப்ட் தீர்க்க போகிறது என்று தெரியவில்லை. விளையாடுகையில், பணம் செலுத்தும் முறை, நேரடியாக கிங் நிறுவனத்தின் பணம் செலுத்தும் வழிக்குச் செல்லுமா? அல்லது மைக்ரோசாப்ட் ஸ்டோர் வழியாகச் செல்லுமா? என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
இனி இந்த விளையாட்டைப் பற்றிப் பார்க்கலாம்.
கேண்டி க்ரஷ் சாகா ~ புதிர் விலக்குவதை இலக்காகக் கொண்ட விடியோ கேம். கிங் (King) நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்குகிறது. முதன் முதலில், 2012 ஆம் ஆண்டில், ஏப்ரல் 12ல் பேஸ்புக் தளத்தில் இது அறிமுகமானது. அதே ஆண்டு, நவம்பர் மாதம், ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கும், விண்டோஸ் இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கு 2014 டிசம்பரிலும் வெளியானது. 2013, மார்ச் மாதத்திலேயே, அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக இது பெயர் எடுத்தது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை புதிய நிலைகள், இந்த விளையாட்டில் இணைக்கப்பட்டன. வெறியோடு விளையாடிய பலர், புதிய லைப் மற்றும் விதி விலக்கல்களுக்குப் பணம் கட்டி விளையாடத் தொடங்கினார்கள். கிங் நிறுவனம் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் விளையாடும் நூறு பேர்களில், 2லிருந்து 3 பேர் தான் பணம் செலுத்தி “லைப்” வாங்கி விளையாடுகின்றனர். மற்ற 97 பேர் இலவசமாகவே விளையாடி வருகின்றனர். இதன் வருமானக் கணக்கைப் பார்க்கலாமா? 2013 ஆம் ஆண்டிலேயே நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 லட்சத்து 33 ஆயிரம் டாலர் வருமானமாக ஈட்டியது. இது ஆப்பிள் ஸ்டோரில் பெற்ற வருமானம் மட்டுமே. 2013ல் ஆப்பிள் ஸ்டோரில் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேஷன் என்ற பெயரையும் கேண்டி க்ரஷ் சாகா பெற்றது.
முதலில், ஹாங்காங் நாட்டில் தான் இந்த விளையாட்டிற்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஏழு பேரில் ஒருவர் இந்த விளையாட்டினை இறக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். 2013, டிசம்பரில், ஜப்பான் நாட்டில் கேண்டி க்ரஷ் அறிமுகமானது. உடனேயே, ஜப்பானில், ஆண்ட் ராய்ட் சாதனங்களில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகளில் 23 ஆவது இடத்தைப் பிடித்தது. ஆப்பிள் ஸ்டோரில் முதல் இடத்தைக் கொண்டது.
சென்ற ஆண்டு மே மாதம், இந்த விளையாட்டின் தொடர்ச்சியாக, ”கேண்டி க்ரஷ் சோடா சாகா” அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற மாதம் வரை இந்த விளையாட்டில் 375 நிலைகள் தரப்பட்டுள்ளன.
சென்ற மே மாதம் வரை, இந்த விளையாட்டின் பேஸ்புக் எடிஷன் வழக்கமான நிலைகளாக, 900 நிலைகளையும், 665 ட்ரீம் வேர்ல்ட் நிலைகளையும் கொண்டுள்ளது.
தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது போல, இந்த விளையாட்டின் அடிமைகளாகப் பலர் இயங்குவதைக் காணலாம். முதலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்திட அனுமதித்துவிட்டுப் பின் வெற்றி பெறும் வெறியை உண்டாக்கி, பணம் கறக்கும் விளையாட்டு இது. விளையாட்டில் நம் வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தாலும், 30 நிமிடங்கள் காத்திருந்தால், நமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடனே விளையாட வேண்டும் என்றால், ஒரு டாலர் செலுத்தி வாய்ப்புகளைப் பெற வேண்டும். அப்படித்தான் பலர் மாட்டிக் கொண்டு பணத்தை இழக்கின்றனர். நேரத்தை வீணடிக்கின்றனர். “இதுதான் கடைசி, இனி விளையாடவே மாட்டேன்” எனத் தினந்தோறும் வைராக்கிய சபதம் எடுத்துத் தொடர்ந்து விளையாடும் பலர் உண்டு.
பேஸ்புக்கில் கேண்டி க்ரஷ் விளையாடி அதன் போதைக்கு அடிமையானவர்களுக்கென்று ஒரு பக்கமும் உள்ளது. (https://www.facebook.com/pages/Candy-Crush-Addict-Support-Group/192392607579007).
”இந்த விளையாட்டு எனக்கு எதையும் கற்றுத் தரவில்லை. இது என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது; என் பணத்தை வீணடிக்கிறது என்று தெரிந்தும் இதனை விளையாடாமல் இருக்க முடியவில்லை” என ஒருவர் (http://www.slate.com/articles/technology/technology/2013/07/candy_crush_saga_the_most_addictive_game_since_angry_birds.html) புலம்புகிறார். இந்த வெறியை, ‘சுகர் கோமா (Sugar Coma)’ என அழைக்கின்றனர். இந்த விளையாட்டுக்கு, நன்றாகத்
தான் பெயர் கொடுத்துள்ளனர். எந்த சத்தும் தராமல், இனிப்பை நாக்கில் தடவி, தொடர்ந்து சுவைக்கத் தூண்டும் குச்சி மிட்டாய் தான் இந்த விளையாட்டு. புதியதாக இதனை விளையாடப் போகும் புத்திசாலிகள் இந்த எச்சரிக்கைகளை மனதில் கொண்டால் நல்லது.
ஒரு சிறுவன் கேட்கிறான்ஸ” அதெல்லாம் சரி, எனக்குப் பிடித்த “ஜெஸ்பால்” கேம் விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்குமா?” மைக்ரோசாப்ட் அதனையும் தரும் என எதிர்பார்க்கலாம்.