மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 விரைவில் வெளியிடப்படும் நிலையில், அதுவே இறுதியான விண்டோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விண்டோஸ் 11 என எதுவும் வராது. ஒரு எண்ணுடன் தரப்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கும், தேவைப்படும் போதெல்லாம் அதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சப்போர்ட் பைல்கள் வெளியிடப்பட்டு வந்த பழக்கமும் கைவிடப் படுகிறது. ஆனால், தொடர்ந்து புதிய வசதிகள் அவ்வப்போது தரப்படும். புதிய வசதிகளை, அடுத்த விண்டோஸ் பதிப்பிற்கென தனியே ஒதுக்கி வைக்கும் பழக்கம் இனி இருக்காது என, மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் பிரிவின் இயக்குநர்
ஜெர்ரி நிக்ஸன், அண்மையில் சிகாகோ நகரில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இதுவரை அப்டேட் பைல்கள், பாதுகாப்பு குறித்தவையாகவே இருந்து வந்துள்ளன. இனி, புதிய வசதிகளும் அது போலவே அப்டேட் பைல்களாகத் தரப்படும். விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் ஓ.எஸ். எக்ஸ் (Windows OS X) இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல இதுவும் தொடரும்.
இது நல்லதொரு பழக்கம் தான். எங்கும் பிராட்பேண்ட் இணைய இணைப்பு கிடைக்கும் சூழ்நிலையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சி.டி.யில் அதற்கான பதிவு எண்ணுடன் டப்பாவில் அடைத்து விற்பனை செய்திட வேண்டியதில்லை. இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். வருங்காலத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு சேவையாகத்தான் கருதப்படும். புதிய வசதிகள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள், அவை தேவைப்படும்போதெல்லாம் வழங்கப்படும்.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, சிறிய அளவில், இலவச அப்டேட் வசதிகள் மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தரப்படும். விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்களும், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்படும் சிறிய அளவிலான அப்டேட் பைல்களாகவே கிடைக்கும். விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சிஸ்டத்தினை “அப்டேட்” செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் தனியே விலை கொடுத்துத்தான் அதற்கான உரிமம் பெற்றுக் கொள்ள முடியும்.
பெரிய அளவிலும் மாற்றங்கள் மற்றும் வசதிகள் தரப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்பினால், அவையும் தரப்படும். ஆனால், அனைத்தும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பொதுவானவையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. விண்டோஸ் 10 அப்டேட் செய்து கொண்டவர்கள், கம்ப்யூட்டரில் நுழைந்து பதிந்து கொண்ட வைரஸ் புரோகிராம்களை நீக்க, ரீ இன்ஸ்டால் செய்வது குறித்து எந்த குறிப்பும் இதுவரை தரப்படவில்லை. இப்போது விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டம் கொண்டு இயக்கி வருபவர்கள், மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தினைத் தங்களிடம் உள்ள சிஸ்டம் சி.டி. அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்ட, ப்ளாஷ் ட்ரைவ் இன்ஸ்டலேஷன் செயலிகள் மூலம், ரீ இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர். இது விண்டோஸ் 10க்கு எப்படி இருக்கும் என இன்னும் அறியப்படவில்லை.
விண்டோஸ் 10 எத்தனை வகைகள்
விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்பட இருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/13/introducingwindows10editions/) குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ஜூலையில், 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், மொபைல் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப் ஆகிய அனைத்திலும் இயங்கும் தன்மையைக் கொண்டதாக விண்டோஸ் 10 இருக்கும். அத்துடன், நாம் இந்த உலகில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலும் இது இயங்கும். ஏ.டி.எம். சாதனங்களிலிருந்து நம் இதயத் துடிப்பினை அளக்கும் கருவி வரையிலும், பல்வேறு சாதனங்களிலும் இது இயங்கும்.“ எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும், மக்களுக்கு அது தரும் அனுபவம், புதியதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்’ என டோனி ப்ராபட் கூறியுள்ளார். மொத்தம் ஏழு வகையான விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகவுள்ளது.
அவை:
விண்டோஸ் 10 ஹோம்: நுகர்வோரை மையப்படுத்திய டெஸ்க் டாப் பதிப்பு. இதில் விண்டோஸ் இயக்க முறைமையின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும். எட்ஜ் பிரவுசர், தொடு உணர் திரை உள்ள டேப்ளட் பி.சிக்கான Continuum டூல். கார்டனா இணைப்பு, போட்டோ, வீடியோ, மேப், மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் பைல்களை இயக்க செயலிகள், விண்டோஸ் ஹலோ எனப்படும் முகம் பார்த்து அனுமதி வழங்கும் டூல் ஆகியவை கிடைக்கும். ஆபீஸ் அப்ளிகேஷன் வெளியாகும்போது, இலவச அப்டேட் ஆகத் தரப்படும்.
விண்டோஸ் 10 மொபைல்: விண்டோஸ் போன்கள், மற்றும் சிறிய அளவிலான (3 முதல் 7.99 அங்குல அளவிலான திரை கொண்ட ) டேப்ளட் சாதனங்களுக்கானது.
விண்டோஸ் மொபைல் எண்டர்பிரைஸ்: இது விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கென, மொத்த எண்ணிக்கையில் உரிமங்களை வாங்குவோருக்கு மட்டும்.
விண்டோஸ் 10 ப்ரோ: மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய விண்டோஸ் 10 டெஸ்க் டாப் பதிப்பு. தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தும்.
விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ்: நிறுவனங்களுக்கான விண்டோஸ் 10. அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் வேண்டுவோருக்கானது. இந்த பதிப்பு, முதல் ஆண்டு இலவச பதிப்பினை நாடுவோருக்கானது அல்ல. இதற்கென தனியே உரிம ஒப்பந்தம் உண்டு.
விண்டோஸ் 10 கல்விக்கானது: கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கானது. கல்வி நிலையங்களுக்கென மொத்தமாக உரிமம் பெற விரும்புவோருக்கானது. பள்ளிகளும் மாணவர்களும், தங்கள் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ப்ரோ பதிப்புகளிலிருந்து, இந்த பதிப்பிற்கு மாறிக் கொள்ள வழிகள் தரப்படும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 மொபைல் எண்டர்பிரைஸ் ஆகிய பதிப்புகள், ஏ.டி.எம். மையங்களில் உள்ள சாதனங்கள், வர்த்தக மையங்களில் இயங்கும் விற்பனை கையாளும் சிறிய சாதனங்கள், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சிறிய டெர்மினல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.
விண்டோஸ் ஐ.ஓ.டி. கோர்: இந்த பதிப்பு, விலை குறைந்த, அதிகப் பயன் இல்லாத சாதனங்களில் பயன்படுத்தவென வடிவமைக்கப்பட்டது.