சம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இக்கைப்பேசிகள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து சில மாற்றங்களை உள்ளடக்கியதாக Samsung Galaxy S6 Edge Plus எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதான நினைவகமாக 3GB RAM, 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
எட்ஜ் பிரவுசர் கூடுதல் தகவல்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10 இயக்கத்துடன் தர இருக்கும் எட்ஜ் பிரவுசர், பல வகைகளில், இந்நிறுவனத்தின் வழக்கத்திற்கு மாறான வகைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
முதலில் ஸ்பார்டன் திட்டம் என இது அறிவிக்கப்பட்டது. அண்மையில் தான், இது எட்ஜ் என அழைக்கப்படும் என்றும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள பிரவுசராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பொதுவாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பின் புதிய பதிப்புகள் அறிவிக்கப்படுகையில், அவை அப்போது புழக்கத்தில் இருக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், ஒன்றுக்கு மேற்பட்டவற்றில், பயன்படும் விதத்தில் தரப்படும். ஆனால், இப்போது வர இருக்கும் எட்ஜ் பிரவுசர், விண்டோஸ் இயக்கத்தின் முந்தைய பதிப்புகளில் இயங்காது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் லோகோ போலவே, எட்ஜ் பிரவுசரின் லோகோவும் ஏறத்தாழ வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதோடு ஒற்றுமை முடிந்துவிடுகிறது.
”அடுத்த பிரவுசரை வடிவமைப்பது ஒன்று மட்டும் எங்களின் பணியாக இல்லாமல், அனைத்து வழிகளிலும், மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினோம்” என்று எட்ஜ் பிரவுசரை வடிவமைத்த வல்லுநர் குழுவின் தலைவர் சார்லஸ் மோரிஸ் கூறியுள்ளார்.
மரபு வழித் தொடர்பில்லை
வழக்கமாக, மைக்ரோசாப்ட் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை, அதன் பழைய பதிப்புகளில் உள்ள செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகவே வெளியிடும். ஏனென்றால், பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களை, குறிப்பிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பின் அடிப்படையில் தயாரித்து வழங்கியிருப்பார்கள். புதியதாக வரும் ஒன்று, முற்றிலும் மாறுபட்ட செயல்பாட்டில் இருந்தால், அதற்கென அவர்களின் தளத்தினை மாற்ற வேண்டியதிருக்கும். எனவே, இந்த இணைய தளத் தயாரிப்பு நிறுவனங்கள், இணையதளங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்குச் சிரமம் வழங்கக் கூடாதென்ற எண்ணத்தில், இது போல மரபு வழி இயக்கத்தினை மைக்ரோசாப்ட் கொண்டிருந்தது. அது. எட்ஜ் பிரவுசரில் கைவிடப்பட்டுள்ளது. பழசாகிப் போன தொழில் நுட்பத்திலிருந்து விலகி, புதிய பிரவுசர் தரப்படுகிறது. இது ஏறத்தாழ, மொஸில்லா, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வழிகளை ஒத்ததாக உள்ளது.
எட்ஜ் பிரவுசர், மைக்ரோசாப்ட் தரும் ActiveX டூல்களை சப்போர்ட் செய்யாது. அதே போல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 11க்கென வடிவமைக்கப்பட்ட விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் மற்றும் தர்ட் பார்ட்டி டூல்களும், எட்ஜ் பிரவுசரில் இயங்காது. அல்லது இயக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். ஆனால். அடோப் பிளாஷ் மற்றும் பி.டி.எப். பைல்களை சப்போர்ட் செய்திடும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, அல்லது அதனையே விரும்புபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் குறிப்பிட்ட காலத்திற்கு விண்டோஸ் 10 பிரவுசருக்கு சப்போர்ட் வழங்கி உதவிடும். இதற்கான பாதுகாப்பு பைல்கள் மட்டும் வழங்கப்படும். புதிய வசதிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
அதிவேகமும், திறன் கூடிய இணையத் தேடலும்: பழைய பிரவுசரில் இயங்கிய தளங்களுக்கான ஒத்திசைவுத் தன்மை வேண்டாம் என மைக்ரோசாப்ட் முடிவெடுத்ததால், எட்ஜ் பிரவுசர் மிகவும் குறைவான இடத்தை எடுத்துக் கொள்ளும் சிறிய இயக்க பைலைக் கொண்டுள்ளது. அதிக பட்ச பயன்பாடுகளைத் தரும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் முற்றிலும் புதிய MSHTML தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பழைய பிரவுசரை சப்போர்ட் செய்திடும் எந்த டூலும் இதில் இல்லை. இதனால், இதனைச் சுருக்கிக் கையாள முடியும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 11 போல இரண்டு மடங்கு வேகத்தில், இயங்குகிறது. இந்த வகையில், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களின், புதிய 64 பிட் செயல்வேகத்தைத் தூக்கியடிக்கும் வகையில் இயங்குகிறது. இன்றைய அளவில், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐ, 4,200 விஷயங்களில் மிஞ்சும் வகையில் எட்ஜ் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் புதியதாக அமைக்கும், அனைத்து சாதனங்களுக்குமான இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதால், அனைத்து சாதனங்களிலும், ஒரே மாதிரியாக இணைய தளங்களைக் காட்டுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மொபைல் சாதனங்களில், இணையப் பக்கங்களைக் காட்டுகையில் திணறியது. அந்த தயக்கம், குழப்பம் எட்ஜ் பிரவுசர் மொபைல் சாதனங்களில் இயங்குகையில் இருக்காது.
எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் ஏற்பு: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் போல் இல்லாமல், ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்கு எட்ஜ் சப்போர்ட் வழங்கிடும். தர்ட் பார்ட்டி டூல்கள் மூலம் கிடைக்கும் இணையப் பக்கங்களையும் சப்போர்ட் செய்திடும். இந்த புதிய செயல்பாடு, எட்ஜ் பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினை அளிக்கிறது. குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் எக்ஸ்டன்ஷன்கள் போல, எட்ஜ் பிரவுசரின் எக்ஸ்டன்ஷன்கள் எச்.டி.எம்.எல் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடக்கத்தில், இந்த எக்ஸ்டன்ஷன் சப்போர்ட் இருக்காது என்று தெரிகிறது. படிப்படியாக இது வழங்கப்படும்.
தனி நபருக்கானது: எட்ஜ் பிரவுசர், அதன் பயனாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அனுபவத்தினைக் கொடுப்பதாக இருக்கும். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ சர்ச் சேவையுடன் இணைந்ததாக இருக்கும். பயனாளர்கள், இந்த சேவைகளைப் பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கையில், பிரவுசரில் நம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், இணையத்தில் நம் தேடல் மிக எளிதாக முடிவுகளைப் பெறும்.
எட்ஜ் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில், ஒரு கேள்வியை டைப் செய்திடத் தொடங்கும்போதே, எட்ஜ் அதற்கு தேடல் விடைகளாக வரக்கூடியவற்றைப் பட்டியலிடத் தொடங்கும். எடுத்துக் காட்டாக, இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து அறிய, தேடல் ஒன்றை மேற்கொண்டால், அந்தக் கேள்வியை டைப் செய்திடும்போதே, அன்றைய பங்கு விலை விபரங்கள் காட்டப்பட ஆரம்பிக்கும். ஓர் உணவு விடுதி குறித்து கேள்வி அமையும் போதே, அங்கு செல்ல வழி, எவ்வளவு நேரம் அது இயங்கும், உங்கள் முந்தைய விருப்பங்களின் மீதான மெனு போன்றவை தயாராகப் பார்ப்பதற்கு இருக்கும்.
பிரவுசரைத் தொடங்கும்போதே, புதிய டேப் ஒன்றுடன் தொடங்கும். அதில் நீங்கள், அண்மையில் பார்த்த தளங்களின் பட்டியல் தரப்படும். அவற்றுடன், அன்றைய செய்தித் தளங்களுக்கான லிங்க்ஸ் கிடைக்கும். இதனால், பயனாளர், விரைவாக தனக்கு வேண்டியதை அணுகலாம்.
புதிய அனுபவத்தில் ஆழ்த்தும் வசதிகள்: பயனாளர்கள் படித்து அறியும் அனுபவத்தில், பல புதிய திருப்பங்களை எட்ஜ் பிரவுசர் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரில் தேவையற்ற, நம் கவனத்தைத் திருப்புகின்ற சமாச்சாரங்கள் இல்லை. வேண்டாத மெனுக்கள், பின்னணியில் இயங்கும் சிறிய புரோகிராம்கள் ஆகியவை தரப்படவில்லை. இணைய தளத்தின் வரிகளில், பயனாளர் ஆழ்ந்து படிக்கலாம். நம் கவனம் அனைத்தும், தளம் தரும் தகவல்களில் மட்டுமே இருக்கும்.
இந்த வசதியுடன், ஒரு பட்டனை அழுத்தினால், நாம் பார்க்கும் இணைய தளத்தின் மேல், நம் கருத்துகளை, குறிப்புகளை எழுதி வைக்கலாம். மறுமுறை அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், நம் குறிப்புகளும் நமக்குக் காட்டப்படும்.