இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்கள் வைத்து இயக்குபவர்கள், இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இது குறித்து பயனாளர்கள், பல சந்தேகங்களைக் கொண்டுள்ள நிலையில், விண் 7 மற்றும் விண்டோஸ் 8.1 கட்டணம் செலுத்தி வாங்காமல், திருட்டுத்தனமாக, காப்பி எடுத்துப் பயன்படுத்துபவர்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனைப் பலர் ஆச்சரியத்துடன் வரவேற்றுள்ளனர். ஏனென்றால், மைக்ரோசாப்ட் எப்போதும், வாடிக்கையாளர்கள் சரியான உரிமத்துடன் மட்டுமே ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த வேண்டும் எனக் கண்டிப்புடன் அறிவித்து வந்துள்ளது. ஏதேனும் அப்கிரேட் செய்திடுகையில், திருட்டு சிஸ்டம் நகல் எனில், அதனை அப்கிரேட் செய்திடாமல் பாப் அப் மூலம் அறிவுறுத்தி வந்தது.
எனவே, தற்போது தரப்பட்டுள்ள அறிவிப்பு, மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய இலக்குகளை இந்த அறிவிப்பின் மூலம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல், ஆப்பிள் நிறுவனம் தன் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பினை, தன் போன்கள் விற்பனை மூலம் ஈடு செய்து கொள்கிறது. கூகுள் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து, இழப்பினை, விளம்பரங்கள் மூலம் ஈடு செய்து கொள்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இவற்றைக் கண்காணித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
மேலும், பல கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி போன்ற திறன் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதனை மைக்ரோசாப்ட் விரும்பவில்லை. குறிப்பாக, திருட்டு நகல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆகியவற்றைப் பிடிவாதத்துடன் பயன்படுத்துபவர்களையும் கொண்டுள்ள சீனாவில், இந்த இலவச அறிவிப்பு, விண்டோஸ் 10 சிஸ்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மேலும், சீன அரசாங்கம், விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டத்தினை அரசு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
இருப்பினும், மைக்ரோசாப்ட் ஒன்றைத் தெளிவாக்கியுள்ளது. சரியான உரிமம் இல்லாமல் விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்தி வருபவர்களுக்கு, விண் 10 இலவசமாக வழங்கப்பட்டாலும், அது முறையான, சட்ட பூர்வமான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகக் கருதப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. எனவே, தங்கள் சிஸ்டத்தினை, விண் 10க்கு அப்கிரேட் செய்வதன் மூலம், சட்டபூர்வ பதிப்பாக மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்ட பலர் இப்போது திகைப்பில் உள்ளனர். சீனாவில் 75% சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், கட்டணம் செலுத்தாத திருட்டு நகல்கள் என்பது உலகறிந்த உண்மை.
இந்த அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் சொல்வது என்ன? திருட்டு விண் 7 மற்றும் விண் 8 நகல்களுடன், விண் 10 அப்டேட்
செய்திட்டாலும், அதுவும் திருட்டு நகல் எனவே கருதப்படும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், அது திருட்டு நகல் என அறிவுறுத்தப்பட்டு கட்டணம் செலுத்த அறிவிப்பு வழங்கப்படும். கட்டணம் செலுத்தவில்லை என்றால், திரை கருப்பாக மாற்றப்படும். Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளுக்கு அப்டேட் கிடைக்காது.
இன்னும் சில மாதங்களில், விண்டோஸ் 10, 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 உள்ளவர்கள், இலவசமாய் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
வேர்ட் டிப்ஸ்!ஹைபன்
ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.
1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.
2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.
4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.
சுருக்கமாகச் சில குறிப்புகள்: வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல alt + Ctrl + Page Down அழுத்தவும்.
வேர்ட் ஸ்பெல் செக்கர்: வேர்ட் புரோகிராம், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கு, மிகத் திறமையாகச் செயல்படும் ஸ்பெல் செக்கர் ஒன்றைக் கொண்டுள்ளது. மிக நன்றாகவே அதுவும் செயல்படுகிறது. ஆனால், நாம் சில சொற்களைச் சுருக்கி அக்ரோனிம் (acronym) எனப்படும் சுருக்குச் சொற்களைத் தருகையில் அவற்றையும் பிழை எனக் காட்டுகிறது. வேர்ட் இவற்றைக் கணக்கில் கொள்ளாமல், ஸ்பெல் செக் செய்து பிழைகளைக் காட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால், கீழ்க்காணும் செயல்முறைகளை அமைத்திட வேண்டும்.
1. Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, மீண்டும் Word Options என்பதில் கிளிக் செய்து திறக்கவும். வேர்ட் 2010ல், ரிப்பனில், File டேப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது புறம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Ignore Words in UPPERCASE என்னும் செக் பாக்ஸில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதில் என்ன பிரச்னை என்றால், சுருக்குச் சொல் இல்லாமல், ஏதேனும் கட்டுரை அல்லது பாரா தலைப்பினை நீங்கள் பெரிய எழுத்துகளில் அமைக்கும்போது, அவற்றையும் ஸ்பெல் செக்கர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். நீங்கள் தான் அதனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை நீக்கி செயல்பட வேண்டும்.