விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பல எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தால், தான் இழந்த மதிப்பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் மீட்டுக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்தவர்கள், இந்த தொகுப்பில், மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக முயற்சி செய்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, நாம் பயன்படுத்த என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அவற்றை எல்லாம் தர முயற்சித்துள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள சிறந்த வசதிகளையும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிமுகமான பல நல்ல விஷயங்களையும் கலந்து, இதனை வடிவமைத்துள்ளது. அத்துடன், இந்த சிஸ்டத்தினை, க்ளவ்ட் சேவையுடன் இணைத்து, (ஒன் ட்ரைவ்) நல்ல வசதிகளைத் தர முன்வந்துள்ளது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் மற்றும் விண்டோஸ் வாடிக்கையாளர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்பதற்கான கருத்துகளை முன்வைத்துள்ளனர். விண்டோஸ் 8 சிஸ்டம் வாங்கிப் பயன்படுத்திய பலரும், அதனால் கிடைத்த எதிர்பாராத ஏமாற்றத்தால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பலரும் அடுத்த சிஸ்டத்திற்கு மேம்படுத்தத் தயாராக உள்ளனர். ஆனால், அதே நேரத்தில், விண்டோஸ் 8 பயன்படுத்தத் தொடங்கிய பலர், விலை மலிவான, மற்ற நிறுவனங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறி உள்ளனர். பலர், பெர்சனல் கம்ப்யூட்டர்களை விடுத்து, குரோம் புக், ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு மாறி உள்ளனர். இவர்களை மீண்டும் மைக்ரோசாப்ட் தன் குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், விண்டோஸ் 10 இலவசமாக வழங்கப்பட வேண்டும். விண்டோஸ் 7 மற்றும் அதன் பின்னர் வந்த விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 சிஸ்டம் வாங்கிய அனைவருக்கும் இது இலவசமாகத் தரப்பட வேண்டும். வர்த்தக ரீதியில், இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகத் தெரியலாம். ஆனால், தன் நிலையைச் சீராக்க, மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுத்தே ஆக வேண்டியதிருக்கும். தன் எதிர்கால வர்த்தகத்தில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, இந்த முடிவினை மைக்ரோசாப்ட் எடுக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தினாலும், தன் புரோகிராம்களில் கூடுதல் வசதிகளைக் கட்டணத்தின் அடிப்படையில் தந்து இழப்பை ஈடு செய்திடலாம் என்றும் மைக்ரோசாப்ட் அலுவலர் கெவின் தெரிவித்துள்ளார். தற்போது ஆபீஸ் 365 தொகுப்பில், மைக்ரோசாப்ட் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. அதனுடன் இணைந்து விண்டோஸ் 10 சிஸ்டத்திலும் இனி தன் வர்த்தக ரீதியான செயல்பாட்டினை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், இதற்கு ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு வரலாம். இலவசமாக விண்டோஸ் 10 கொடுக்கப்படும் நிலையில், பெரும்பாலானவர்கள், தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்திட மாட்டார்கள். புதிய கம்ப்யூட்டர் வாங்க மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்பவர்கள், இந்த இலவச அனுமதியை எதிர்ப்பார்கள்.
முன்பு புதிய விண்டோஸ் பதிப்பு வெளியிடப்படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், புதிய சாதன வசதிகளை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களைப் புதிய கம்ப்யூட்டர் வாங்கும் வகையில் வழி நடத்துவார்கள். இது இப்போது நடைபெற இயலாது என இந்த தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணுகின்றன. ஆனால், நடுநிலையாளர்கள், இப்போதும் கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், விண்டோஸ் 10ஐப் பயன்படுத்தும்போது, புதிய வசதிகளைத் தரும் வகையில், தயாரிப்பில் புதுமைகளைக் கொண்டு வரலாம் என்று கூறுகின்றனர்.
இதற்கான தீர்வு ஒன்றை மைக்ரோசாப்ட் கண்டறிய வேண்டும்.
விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பிற்குப் பலத்த வரவேற்பு இருப்பதால், மைக்ரோசாப்ட் இது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் விண்டோஸ் 7/8/8.1 சோதனைத் தொகுப்பு வெளியிடப்பட்ட போது, பயன்படுத்திய வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் காட்டிலும், விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பிற்க்கு மிக அதிகமான அளவில் பயனாளர்கள் பதிந்துள்ளனர். ஏறத்தாழ 15 லட்சம் பேர் தாங்கள் பயன்படுத்தி வருவதாகப் பதிந்துள்ளனர். தினந்தோறும் 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை, பயனாளர்களின் பின்னூட்டங்கள் அடிப்படையில், 1,300 பிழைக் குறியீடுகள் கண்டறியப்பட்டு, குறை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால், விண்டோஸ் 10 வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முழுமையான தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸெல் டிப்ஸ்ஸ
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் என சொல்ல வேண்டும். இதனை மேற்கொள்ள முதலில் டேட்டா இருக்கும் செல்லினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு செல்லை மட்டும் வரிசைப்படுத்துவதாக இருந்தால் Sort Ascending அல்லது Sort Descending பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். எந்த செல்லைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த செல் அந்த பீல்டின் காலத்தில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இந்த இரு பட்டன்களும் Standard டூல்பாரில் உள்ளன.
ஒரே வகை டேட்டா இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வகை டேட்டாவினை (எடுத்துக்காட்டாக பெயர் மற்றும் பிறந்த தேதி) வரிசைப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் எக்ஸெல் தொகுப்பிற்கு வேறு வகையில் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். எந்த பீல்டுகளை வரிசைப்படுத்த வேண்டும் எனவும் எந்த வகையில் அவற்றை அடுக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இதற்கு முதலில் Data மெனு செல்லவும். அதில் Sort என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Sort விண்டோவில் மூன்று வகையில் பிரிப்பதற்கு, அவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு என வழிகள் தரப்பட்டிருக்கும். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் நீங்கள் விரும்பும் டேட்டா செல்லுக்கான பெயரைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமைக்கேற்றபடி அமைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் (உயர்ந்த மதிப்பு/குறைந்த மதிப்பு) அமைக்க ascending அல்லது descending தேர்ந்தெடுக்கவும். வகைப்படுத்த வேண்டிய டேட்டா செல்களுக்கு நீங்கள் ஹெடர் வரிசை (“Header row” ஒன்று கொடுத்திருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். இதற்கு கீழாக வசதி தரப்பட்டிருக்கும். இதனை நீங்கள் செலக்ட் செய்யாவிட்டால் எக்ஸெல் ஹெடரிலுள்ள சொல்லையும் எடுத்துக் கொண்டு பிரித்து அதற்கென ஒரு இடம் கொடுத்துப் பிரிக்கும். அல்லது ஹெடர் வரிசை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் “No header row” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்தும் முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டேட்டா தொகுப்பு நீங்கள் விரும்பியபடி வகைப்படுத்தப்பட்டு அழகாகக் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு செல்லில் உள்ள டேட்டாவினையும் சேர்த்து வகைப்படுத்திடத் திட்டமிட்டால் அதனை மாற்றித் தேர்ந்தெடுத்து வகைப்படுத்தலாம்.
டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.