வெள்ளிக் கிழமைகளில் இலவச பேஸ்புக் இணைப்பு
25 Feb,2015
இந்திய தகவல் தொடர்பு நிறுவனமாக இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அதன் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வெள்ளிக் கிழமைகளில், பேஸ்புக் தளத்தை இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இந்திய தகவல் தொடர்பு வர்த்தகத்தில், வாடிக்கையாளர் ஒருவர் பயன்படுத்தும் டேட்டா பயன்பாட்டில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமே முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும், ஒரு மாதத்தில் 750 எம்.பி. டேட்டாவினைப் பயன்படுத்துகின்றனர். 2 கோடியே 70 லட்சம் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இந்நிறுவனத்திடம் உள்ளனர். இவர்களையும் சேர்த்து 3ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை 1 கோடியே 51 லட்சமாகும்.
இந்த புதிய “வெள்ளிக்கிழமை இலவச பேஸ்புக் (Free Facebook Fridays) என்ற திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், இந்நிறுவனத்தின் ஜி.எஸ்.எம். ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள், அவர்கள் கொண்டுள்ள இணையத் திட்டம் எதுவாயினும், கட்டணம் எப்படி இருந்தாலும், வெள்ளிக்கிழமைகளில், சமூக இணைய தளமான பேஸ்புக் தொடர்பு கொண்டு, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். இதன் மூலம், இந்தியாவில் இணையப் பயன்பாடு மேலும் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ரிலையன்ஸ் கருதுகிறது.
தற்போது ரிலையன்ஸ் ரூ.50 மற்றும் ரூ.100 கட்டணத்தில் டேட்டா பேக் வழங்குகிறது. இவர்கள், பேஸ்புக் தளத்துடன், இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். அதற்கு டேட்டா எல்லை வரம்பு இல்லை. ரூ. 100க்கு மேல் டேட்டா பேக் வாங்குபவர்களுக்கு, பேஸ்புக் மட்டுமின்றி, வாட்ஸ் அப் தளத் தொடர்பும் வழங்கப்படுகிறது.