போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.diphso.no/FotoMix.html. 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம்.
விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது.
பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்
கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும். மேக் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்ட ட்ரைவ்களில் HFS+ என்ற பைல் வகை பயன் படுத்தப்படுகிறது. அவை விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்காது. லினக்ஸ் சிஸ்டம் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. எனவே, ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும், இந்த பைல் சிஸ்டம் வகைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஒவ்வொன்றும் வேறு எந்த வகை சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இத்தனை வகை பைல் சிஸ்டங்கள் உள்ளன என அதன் அடிப்படைக் கட்டமைப்பினையும் புரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. இங்கு அவற்றைக் காண்போம்.
பலவகை பைல் சிஸ்டங்கள் ஏன் உள்ளன?
ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரை அல்லது எந்த ஸ்டோரேஜ் மீடியாவாக இருந்தாலும், அவற்றில் பல வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்பட்டு ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்டோரேஜ் மீடியாவும், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் (partitions) கொண்டுள்ளன. ஒவ்வொரு பார்ட்டிஷனும் ஒரு வகை பைல் சிஸ்டத்துடன் பார்மட் செய்யப்பட்டுள்ளன. பார்மட் செய்கையில், அச்செயல்பாடானது, அந்த வகை பைல் சிஸ்டத்தினைக் காலியான நிலையில் அமைக்கிறது.
ஒரு பைல் சிஸ்டம், குறிப்பிட்ட ட்ரைவில் டேட்டாவினைப் பிரித்து தனித்தனி தகவல் துண்டுகளாக அமைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இந்த பைல்கள் குறித்த தகவல்களையும், பைலின் பெயர், யார், யார் அந்த பைலைப் பார்க்க அனுமதி பெற்றுள்ளனர் மற்றும் பைல் குறித்த பிற பண்புகளையும் ஸ்டோர் செய்திட ஒரு வழி தருகிறது. இதே பைல் சிஸ்டம், ட்ரைவில் ஸ்டோர் செய்யப்படும் பைல்களுக்கான அட்டவணை ஒன்றையும் தயார் செய்து வைக்கிறது. இதன் மூலமே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்த ட்ரைவில் பைலைத் தேடுகையில், தேடல் மிக எளிதான செயலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பைல் எளிதாக இடம் அறியப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது.
நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த பைல் சிஸ்டத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டிருந்தால் தான், அது பைல் ஒன்றில் உள்ள டேட்டாவினைத் தர முடியும், பைல்களைத் திறக்க முடியும் மற்றும் அதனைத் திருத்தி மீண்டும் ட்ரைவில் பதிய முடியும். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல் சிஸ்டம் ஒன்றை அறிய இயலாமல் போனால், நீங்கள் அந்த பைல் சிஸ்டத்திற்கான சப்போர்ட் தரும் ட்ரைவர் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அவ்வாறு இன்ஸ்டால் செய்யவில்லை என்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அந்த பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்த முடியாது.
அப்படியானால், ஒரே ஒரு பைல் சிஸ்டம் இருக்கலாமே? ஏன் பல இருக்கின்றன? என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அனைத்து பைல் சிஸ்டங்களும் ஒரே தரமானவை அல்ல. வேறுபாடான இந்த பைல் இயக்க முறைகள், வேறுபாடான பல வழிகளில் டேட்டாவினை வகைப் படுத்துகின்றன. சில பைல் சிஸ்டங்கள், மற்றவற்றைக் காட்டிலும், செயல்பாட்டில் வேகத்தைக் கொண்டிருக்கும். சில கூடுதலான பாதுகாப்பினைக் கொண்டிருக்கும். சில மற்றவற்றைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்டோர் செய்திடக் கூடிய வசதியைப் பெற்றிருக்கும். சில சிஸ்டங்கள் பைல் கெட்டுப் போக வாய்ப்பே இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கம்ப்யூட்டர் பைல்களைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பலவகையான செயல்பாடுகளைக் கண்டால், மிகச் சிறந்த்து என ஒரே ஒரு பைல் சிஸ்டத்தினச் சுட்டிக் காட்ட முடியாது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பவர்களும் இதே பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் லினக்ஸ் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குபவர்கள் தங்களுக்குச் சொந்தமான பைல் சிஸ்டத்தினையே பயன்படுத்துகின்றனர். புதியதாக வரும் பைல் சிஸ்டங்கள், நிச்சயமாக, முன்னதாக இருந்த பைல் சிஸ்டங்களைக் காட்டிலும் வேகமாக, நிலைத்த தன்மை கொண்டவையாக, அதிகக் கொள்ள்ளவில் டேட்டா ஸ்டோர் செய்யக் கூடியவையாக உள்ளன. இவை கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளன. பைல் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்படுவது எளிதான செயல் அல்ல. இந்த சிஸ்டம் எப்படி பைல்கள் அமைக்கப்பட வேண்டும், அவை எப்படி வகைப்படுத்தப்பட வேண்டும், அட்டவணைப் படுத்தப்பட வேண்டும் மற்றும் அவை சார்ந்த தகவல்கள் எப்படி, எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனைக் கொண்டிருக்கின்றன.
இங்கு பொதுவான சில பைல் சிஸ்டங்கள் குறித்துப் பார்க்கலாம்.
1. FAT32: இந்த வகை பைல் சிஸ்டம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மிகப் பழைய வகை பைல் சிஸ்டத்தினைச் சேர்ந்ததாகும். கம்ப்யூட்டர்களில் இணைத்து பயன்படுத்திப் பின்னர் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவிலான மீடியாக்களில், இந்த வகை பைல் சிஸ்டம் இன்னும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய கொள்ள்ளவிலான, 1 TB, மீடியாக்கள் NTFS பைல் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இந்த வகை பைல் சிஸ்டத்தினை, சிறிய அளவிலான ஸ்டோரேஜ் மீடியாக்களில், அல்லது டிஜிட்டல் கேமராக்கள், செட் டாப் பாக்ஸ்கள், மற்றும் கேம் சாதனங்களில் ஒத்த வகைக்காகவும், என்.டி.எப்.எஸ். வகை சப்போர்ட் செய்யப்படாமல் உள்ள மீடியாக்களிலும், FAT32 பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
2. NTFS: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் எக்ஸ்பிக்குப் பின்னால், ட்ரைவ் பிரிப்பதற்கு NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. வெளியில் இருந்து இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ட்ரைவ்கள், FAT32 அல்லது NTFS பைல் சிஸ்டத்தால், பார்மட் செய்யப்படுகின்றன.
3. HFS+: ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர்களில் உள்ளாகவும், வெளியே இணைத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களை HFS+ பைல் சிஸ்டம் கொண்டு பிரிக்கின்றன. ஆனால், மேக் சிஸ்டங்கள் வழியாக, FAT32 சிஸ்டத்திலும் எழுதலாம். இதில் NTFS பைல் சிஸ்டத்தில், பைல்களில் எழுத வேண்டும் என்றால், அதற்கான தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்த வேண்டும்.
4. Ext2, Ext3, மற்றும் Ext4: லினக்ஸ் குறித்துப் பேசுகையில், Ext2, Ext3, மற்றும் Ext4 என்ற பைல் சிஸ்டங்கள் குறித்து கேட்டிருப்பீர்கள். Ext2 என்பது மிகப் பழைய பைல் சிஸ்டம். இந்த பைல் சிஸ்டத்தில் எழுதுகையில், மின் தடை ஏற்பட்டு எழுதுவது நின்று போனால், டேட்டா அனைத்தும் கெட்டுப் போய், மீட்டு எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த பிரச்னை இல்லாத வகையில் Ext3 பைல் சிஸ்டம் உருவானது. ஆனால், இதன் செயல் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. Ext4 பைல் சிஸ்டம் அண்மைக் காலத்தில் உருவான நவீன பைல் சிஸ்டமாகும். விரைவாகச் செயல்படக் கூடியது. இப்போது பயன்படுத்தப்படும் அனைத்து லினக்ஸ் சிஸ்டங்களிலும், இதுவே மாறா நிலையில் உள்ள பைல் சிஸ்டமாக உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் FAT32 மற்றும் NTFS பைல் சிஸ்டங்களில் எழுதவும், அதில் அமைந்த டேட்டாவினைப் படிக்கவும் திறன் கொண்டதாகும்.
5. Btrfs — “better file system”: லினக்ஸ் சிஸ்டத்தின் புதிய பைல் சிஸ்டமாகும். இது இன்னும் வடிவமைக்கப்படும் நிலையிலேயே உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது மாறா நிலை பைல் சிஸ்டமாக இல்லை. ஆனால், விரைவில் Ext4 பைல் சிஸ்டம் இடத்தினை இது பிடித்துவிடும். மிக அதிக அளவில், டேட்டாவினை ஸ்டோர் செய்திட இந்த பைல் சிஸ்டம் வழி தரும்.
6. Swap: லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த ”Swap” பைல் சிஸ்டம் ஒரு பைல் சிஸ்டமே அல்ல. இதன் அடிப்படையில், ட்ரைவில் பார்ட்டிஷன் உருவாக்கிய பின்னர், இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளும். இதனால், இதற்கென தனியே ஒரு பார்ட்டிஷனை, லினக்ஸ் சிஸ்டத்தில் உருவாக்க வேண்டியதுள்ளது.
இன்னும் பல பைல் சிஸ்டங்கள் இருந்தாலும், மேலே கூறப்பட்டவையே, பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். அப்போதுதான், ஏன் ஒரு பைலை ஒரு குறிப்பிட்ட சிஸ்டத்தில் படிக்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்கு, அவர்களே விடை தெரிந்து கொள்வார்கள்
பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்
கிறிப்டோவால் (CryptoWall) என்ற வைரஸ் மால்வேர் சென்ற ஆண்டிலிருந்து பரவி வருகிறது. இதனை பணயத் தொகை சாப்ட்வேர் (Ransomware) என அழைக்கின்றனர். மார்ச் மாத மத்தியில் தொடங்கி, இன்று ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, ஏறத்தாழ 6 லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கைப் பற்றி, 525 கோடி பைல்களை நாசம் செய்துள்ளது.
Ransomware என்பது ஒரு வகையான கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர். இது ஒரு
கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். பின் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அல்லது உரிமையாளருக்கு, கம்ப்யூட்டர் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தினால் தான், கட்டுப்பாட்டினை விலக்கிக் கொள்ள முடியும் என்றும் செய்தி அனுப்பும். பணயமாக கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களும் இருக்கும். பணம் செலுத்தாவிட்டால், அனைத்து பைல்களின் டேட்டாவும் சுருக்கப்பட்டு, அவற்றை எடுத்து செயல்படமுடியாத வகையில் பதியப்படும்.
இவ்வகையில் கிறிப்டோவால் மால்வேர் தயாரித்தவர்கள் பத்து லட்சம் டாலர் வரை ஈட்டியுள்ளனர் என டெல் செக்யூர் ஒர்க்ஸ் த்ரெட் யூனிட் (Dell SecureWorks’ Counter Threat Unit (CTU)) அமைப்பு அறிவித்துள்ளது.
கிறிப்டோவால் வைரஸ் புரோகிராம் எப்படி செயல்படுகிறது? சந்தேகத்திற்கு இடமான, மின் அஞ்சல் கடிதங்களில் தரப்பட்டுள்ள லிங்க்குகளைக் கிளிக் செய்து, ஏதோ ஒரு தளத்திற்கு இட்டுச் செல்லப்படுபவர்களின் கம்ப்யூட்டர்களில் இந்த கிறிப்டோவால் பரவி, தன் கெடுதல் வேலைகளை மேற்கொள்கிறது. ஒரு சில இணைய தளங்களையும் இந்த வைரஸ் கைப்பற்றி, அந்த இணைய தளங்களுக்குச் செல்லும் கம்ப்யூட்டர் பயனாளர்களின் கம்ப்யூட்டர்களையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.
தான் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களையும், போல்டர்களையும் மீண்டும் செயல்படுத்தும் நிலைக்குக் கொண்டு வர, குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என கிறிப்டோவால் புரோகிராமினைத் தயாரித்தவர்களிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. பணயத் தொகை பிட்காய்ன் (Bitcoin) எனப்படும் பண மாற்று முறையில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
கேட்கப்படும் பணயத் தொகை 500 டாலரிலிருந்து 10,000 டாலர் வரை உள்ளது. 6,25,000 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டதில், 1,683 பேர் மட்டுமே இந்த பணயத் தொகையினைச் செலுத்தியுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். ஆறு மாத காலத்தில் நடந்த இந்த கம்ப்யூட்டர் கைப்பற்றுதலில், பணயத் தொகையாக, 11,01,900 டாலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, வியட்நாம் நாட்டில் இந்த கிறிப்டோவால் தாக்குதல் உள்ளது. 66,500 கம்ப்யூட்டர்களுக்கு மேல் இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் அடுத்து இலக்கு வைத்திருக்கும் நாடுகளாக, பிரிட்டன், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சாதனங்கள் பல – கீ போர்ட் ஒன்றுதான்
இன்றைய டிஜிட்டல் உலகில், பலவகையான கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதன்ங்கள் இயங்கி வருகின்றன. கம்ப்யூட்டர்களில் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனைக் கொண்டிருக்கிறோம். அதே போல டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களும் இயங்கி வருகின்றன. மாறுபட்ட இயக்கமும் வடிவமைப்பும் கொண்ட இந்த சாதனங்களில் நாம் வெவ்வேறு கீ போர்ட்களையே இணைத்துப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வயர் இணைப்பு இன்றி
செயல்படும், புளுடூத் கீ போர்டாக இருந்தாலும், மாறுபட்டவற்றையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மவுஸ் மற்றும் கீ போர்ட் வடிவமைப்பதில் உலகில் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் லாஜிடெக், அண்மையில் K480 என்ற பெயரில் புதிய கீ போர்ட் ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது புளுடூத் தொழில் நுட்பத்தில், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் கீ போர்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கீ போர்டில் உள்ள டயல் ஒன்றைச் சுழற்றுவதன் மூலம், விண்டோஸ், மேக் மற்றும் குரோம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்கான கீ போர்டாகப் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஸ்லாட் ஒன்றில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை வைத்துப் பயன்படுத்தலாம். அவற்றின் தடிமன் 10.5 மிமீ அல்லது குறைவாக இருக்க வேண்டும். இதன் எடை 820 கிராம்.
பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றுடன், வை பி இணைப்பில் பயன்படுத்துகையில், கீ போர்டின் ஸ்லாட்டில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போனில் ஒர் எஸ்.எம்.எஸ். டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றால், அப்படியே, டயலைச் சற்று மாற்றிச் சுழற்றி பயன்படுத்தலாம்.
எந்த டிஜிட்டல் சாதனம் என்றாலும், டைப் செய்திட வேண்டிய அவசியம் சிறிதளவாவது உள்ளது. இந்த வகையில், அனைத்து சாதனங்களிலும் பயன்படும் வகையில், இரண்டு அல்லது மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வந்துள்ள இந்த கீ போர்ட், அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கீ போர்ட் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. விலை 50 டாலர்.