சீன அரசு வெளியிடும் கம்ப்யூட்டர் ஓ.எஸ்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது. தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது பயன்படுத்தப்படும் வகையில் தரப்படும். இந்த தகவலை, அரசின் செய்தி தகவல் தொடர்பு முகமையான Xinhua தெரிவித்துள்ளது. படிப்படியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் எந்த சிஸ்டமும் சீன தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மொபைல் சாதனங்களில் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் இதே முறையில் நீக்கப்படும்.
தேசிய அளவில் தனக்கென மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரிக்க சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2000 ஆண்டில், Red Flag Linux என்ற பெயரில் ஓ.எஸ். ஒன்றை வடிவமைத்து, அப்போதைய விண்டோஸ் 2000க்குப் பதிலாக சீனா கொண்டு வந்தது. Red Flag Software என்னும் நிறுவனம், முழுக்க அரசு நிதியுதவியுடன் இதனை வடிவமைத்தது. ஆனால், அந்நிறுவனம் மூடப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியைத் தழுவியது. அந்நிறுவனத்தை Penta Wan Jing Information Technology என்ற நிறுவனம் வாங்கியது. அநேகமாக, அந்த சிஸ்டத்தினையே, மீண்டும் புதிய முறையில் வடிவமைக்கும் முயற்சியில் புதிய நிறுவனம் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் 7 லேப்டாப் விந்தைகள்
உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளதா? இங்கு தரப்பட்டுள்ள ஆர்வமூட்டும் குறிப்பினைப் படித்து அதில் சோதனை செய்து பார்க்கவும். Win + X அழுத்தவும். உடன், நீங்கள் உங்கள் விண்டோஸ் 7 லேப்டாப் கம்ப்யூட்டர் திரையில், டேஷ்போர்ட் ஒன்று காட்டப்படும். இதில் கம்ப்யூட்டரை மானிட்டர் செய்திடலாம். கீ செயல்பாடுகளையும் இதன் வழியில் கட்டுப்படுத்தலாம்.
மானிட்டர் திரையின் ஒளி அளவை மாற்றலாம். ஒலி அளவை பட்டைக் கோடு மூலம் அதிகரிக்கவும் குறைக்கவும் செய்திடலாம். பேட்டரியின் மின் சக்தி எந்த அளவில் உள்ளது என அறியலாம். வயர்லெஸ் இணைப்பினை இணைக்கலாம்; நீக்கலாம். உங்கள் இணைப்பினையும் கண்காணிக்கலாம். வேறு ஒரு மானிட்டரை இணைத்து அதனையும் கட்டுப்படுத்தலாம். விண்டோஸ் 8.1 உள்ள சிஸ்டத்தில் விண் கீ + எக்ஸ் இன்னும் பல வசதிகளுக்கான ஆப்ஷன் தரும்.
எக்ஸெல் செல்களில் பார்டர் அமைக்கவும் நீக்கவும்: நாம் தயாரிக்கும் ஒர்க்க்ஷீட்களில், பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. நீங்கள் பார்டர் அமைக்க விரும்பும் செல் அல்லது செல்வரிசையை முதலில்
தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவிலிருந்து Cells என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Border டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸில், Border என்னும் பிரிவில், நீங்கள் எந்த இடத்தில் பார்டர் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Outline என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், செல் முழுவதுமாக பார்டர் அமைக்கப்படும்.
5. Style பிரிவில், எந்தவிதக் கோட்டில் பார்டர் அமைக்கப் பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழியும் உள்ளது. டூல்பாரில் உள்ள Borders என்னும் டூலைப் பயன்படுத்தியும் பார்டர் கோடுகளை அமைக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி, இந்த டூலைப் பயன்படுத்த வேண்டும்.
1. பார்டர் அமைக்கப்பட வேண்டிய செல் அல்லது செல் வரிசையத் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் அமைக்க விரும்பும் பார்டர் வகை பார்டர்ஸ் டூலில் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடும். இல்லை எனில், இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி தொடரவும்.
3. பார்டர்ஸ் டூலின் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்திடவும். பலவகையான பார்டர் வகைக் கோடுகள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்டர் வரியைத் தேர்ந்தெடுக்கவும். அவுட்லைன் பார்டரைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் செல் வரிசையைத் தேர்ந்தெடுக்கலாம். இது பார்டர் கட்டத்தில், கீழாக வலதுபுறம் கிடைக்கும்.
பார்டர் கோடுகளை செல் அல்லது செல் வரிசைகளில் அமைக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும், இவற்றை நீக்க விரும்பினால், மிக எளிய வழி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. கண்ட்ரோல் கீயுடன், அண்டர் ஸ்கோர் கீயை (underscore) அழுத்த வேண்டும் (Ctrl+_) அமைக்கையில் ஷிப்ட் கீயையும் அழுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்). செல்களில் உள்ள பார்மட் கூறுகளில், பார்டர்கள் மட்டுமே, இந்தக் கட்டளையால் நீக்கப்படும். மற்றவை அப்படியே இருக்கும்.
எக்ஸெல் ஆப்ஜெக்ட் பில்லிங்: எக்ஸெல் ஒரு கிராபிக்ஸ் இணைந்த புரோகிராம் அல்ல. அது தனி ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இருப்பினும், நாம் இதில் வரையப்பட்ட படங்களை, ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைத் தெளிவாகக் காட்டும் பொருட்டு இணைக்கலாம். இவ்வாறு இணைக்கப்படும் ஆப்ஜெக்ட்களில் வண்ணப் பூச்சு அமைக்கலாம். எப்படிப்பட்ட வண்ணப் பூச்சுகளை, எந்த விளைவுகள் தரும்படி அமைக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்.
1. எந்த ஆப்ஜெக்ட்டை மாற்றி அமைக்க வேண்டுமோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. ட்ராயிங் (Drawing) டூல்பாரில், Fill Color அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒரு கலர் மெனுவினைக் காட்டும்.
3. இந்த கலர் மெனுவில், Fill Effects என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் Fill Effects டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இந்த டயலாக் பாக்ஸில் உள்ள டூல்ஸ்களைப் பயன்படுத்தி, ஆப்ஜெக்ட்டில் பில் செய்திடுகையில் எப்ப்படிப்பட்ட வகையில் வண்ணம் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவை பின்வருமாறு:
Gradient: ஆப்ஜெக்ட்டின் பல்வேறு பகுதிகளில் நிரப்பப்பட்ட வண்ணத்தின் ஆழம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை வரை
யறை செய்திட, இந்த டேப்பினைப் பயன்படுத்தலாம். நாம் விரும்பும் வகையில் அமைத்திட, இந்த டூலைப் பயன்படுத்தலாம்.
Texture: ஆப்ஜெக்டின் மேற்புறப் பூச்சுக்கு வண்ணம் தீட்ட இந்த டேப்பினைப் பயன்படுத்தவும். இதில் marble, fabric, மற்றும் wood எனப் பல வகைகள் தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
Pattern: நீங்கள் எந்த வண்ணம் தேர்ந்தெடுத்து அமைத்தாலும், பல வகை அமைப்புகளில், அவற்றை அமைத்திட இந்த டேப் உதவுகிறது.இந்த அமைப்புகளில் பல விண்டோஸ் டெஸ்க்டாப் போல அமைகிறது.
Picture: இந்த டேப் மூலம், உங்கள் ஆப்ஜெக்டினை பில் செய்திட உதவும் படம் ஒன்றை எடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் படத்தைப் பொறுத்து, பல புதிய, எதிர்பாராத, ஆர்வமூட்டும் விளைவுகளை இதில் ஏற்படுத்தலாம்.