விரைவில் அறிமுகமாகின்றது Samsung Galaxy Note Edge0RAM மற்றும் ROM
14 Nov,2014
சம்சுங் நிறுவனம் தனது புதிய வடிவமைப்பில் உருவாக்கிய Samsung Galaxy Note Edge ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 28ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இக்கைப்பேசியானது 5.6 அங்கு அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான வளைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 2.7 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 805 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
Android 4.4 KitKat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
எனினும் இதன் விலை தொடரபான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
RAM மற்றும் ROM
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு.
கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.
ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு, டெராபைட்கள் சாதாரணமாய்ப் பேசப்படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன்பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது.
கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட, சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே.
ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்.
சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல்களைக் கொண்டு இயக்க விரும்பினால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும்.
அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம்.
இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற்றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில், 4 ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது.
இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்குத் தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.