மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்புகளுக்கான சப்போர்ட்டினை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. படிப்படியாக, வரும் 18 மாதங்களில் இது முழுமை அடையும். தன்னுடைய தற்போது நடை
முறையில் இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ, அனைவரும் பயன்படுத்தும் வகையில் நுழைத்திட முயற்சிக்கிறது, மைக்ரோசாப்ட். நீங்கள் பழைய பெர்சனல் கம்ப்யூட்டரில், புதிய பதிப்பிற்கு மாறுவதற்கு எதிர்ப்பாக இருந்தால், மைக்ரோசாப்ட் தன் நடவடிக்கை மூலம், உங்களைப் பணிய வைத்திடும். வரும் 2016, ஜனவரி 12 முதல், தன் விண்டோஸ் சிஸ்டம் எவற்றை எல்லாம் சப்போர்ட் செய்திடும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பழைய பதிப்புகளுக்கு தொழில் நுட்ப உதவியோ, பாதுகாப்பினைப் பலப்படுத்தும் பேட்ச் பைல்களோ வழங்கப்பட மாட்டாது. விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஏற்பட்ட கதி தான் இவற்றிற்கும் ஏற்படும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கு முதலில் இந்த உதவிகள் நிறுத்தப்படும். 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 13லிருந்து இதற்கான பேட்ச் பைல்கள் தரப்பட மாட்டாது. தற்போது இந்த பிரவுசர் பதிப்பு, உலகில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 20 சதவீதக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பலவற்றில் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குவதும் குறிப்பிடத் தக்கது. இணைய வழிகளில் ஏற்படும் பரிவர்த்தனையில், 6% பரிமாற்றம் இன்னும் பழைய பிரவுசர்கள் வழியே தான் நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போதைய நிலைப் பயன்பாடு தொடர்ந்தால், இந்த உதவி நிறுத்தம், பலமான பாதிப்பினை ஏற்படுத்தும்.
விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு மாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அப்டேட் பைல்கள் அதற்குக் கிடைக்கும். விஸ்டாவில் இருப்பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ மட்டுமே பதிந்து இயக்க முடியும். இதற்கான சப்போர்ட் நிறுத்தப்படும் நாள் குறித்து மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 ஆகிய இரண்டும், மொத்தத்தில் 15 சதவீதக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பின்னர் வந்த பதிப்புகள் பதியப்பட முடியாத கம்ப்யூட்டர்களில் மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008ல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா, 2017ல் முடிவிற்குக் கொண்டுவரப்பட உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஒன்று மட்டுமே, விண்டோஸ் சர்வர் 2012ல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், விண்டோஸ் 7 இயக்க முறைமை உள்ள அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு மாற்றப்பட வேண்டிய நிலையை அடையும். அப்போதுதான் பிரவுசர் இயக்கத்திற்கான முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். மற்ற பதிப்புகளுக்கு, மைக்ரோசாப்ட் பாதுகாப்பு மற்றும் புதிய வசதிகள் அளிக்கும் சப்போர்ட் பைல்கள் வழங்குவதனை நிறுத்திவிடும்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தினார்கள் என்றால், மைக்ரோசாப்ட் அதனைத் தடை செய்திடாது. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்பில் தான், அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, மைக்ரோசாப்ட் பொறுப்பேற்காது.
பொதுவாகவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் சாப்ட்வேர் வாடிக்கையாளர்கள், தான் வழங்கும் மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையே, பிரவுசர் உட்பட, பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அப்போதுதான், புதிய வசதிகளையும், பாதுகாப்பினையும் தர முடியும் என நினைக்கிறது. ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் நிறுவன்ங்கள், புதியனவற்றிற்கு மாறிக் கொள்ள தயங்குகின்றன. ஏனென்றால், பழைய சாப்ட்வேர் இயங்கும் கம்ப்யூட்டர்கள், புதிய மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை. புதியனவற்றிற்கு மாற வேண்டும் எனில், அவை பெரிய அளவில் நிதிச்சுமையினை ஏற்படுத்துகின்றன. எனவே தான், அவை, எந்த நாள் வரை பழையனவற்றைப் பயன்படுத்த முடியுமோ, அதுவரை பயன்படுத்தி வர முடிவு
செய்கின்றன.
மாறி வரும் யு.எஸ்.பி. தொழில் நுட்பம்
யு.எஸ்.பி. ட்ரைவ் பயன்பாடு இப்போது மிக வேகமாக அதிகரித்த நிலையை அடைந்துள்ளது. அனைத்து தொழில் நுட்பங்களைப் போல, நன்கு வளர்ந்த நிலையில், இது முழுமையான நம்பகத்தன்மை கொண்ட தொழில் நுட்பமாக மதிக்கப்படுவதில்லை. ஆனால், அது அறிமுகமான காலத்தில், எத்தனை பிரச்னைகள் கொண்டவற்றிலிருந்து நமக்கு அது விடுதலை அளித்தது என்று எண்ணினால், இதன் மகத்துவம் தெரியவரும்.
“Universal” Serial Bus என்ற பெயருடன், உலகளாவிய நிலையில் இது உருவாகி வந்தாலும், ஏறத்தாழ 18 ஆண்டுகளில், இது பல பரிமாணங்களில் வளர்ந்துள்ளது. பல்வேறு வகையான இயக்க வேகம், பல வகையான கேபிள்கள் என இதன் தன்மை வகைகள் உள்ளன. யு.எஸ்.பி. சீரான ஒரே இயக்கம் மற்றும் வடிவமைப்பினைக் கொண்டிருப்பதனைக் கண்காணிக்கும் USB Implementers Forum, இந்த பன்முகத் தன்மை குறித்து நன்கு அறிந்தே வைத்துள்ளது. இப்போது கூட ”டைப் சி” என்னும் ஒருவகை கேபிளைப் பயன்படுத்துவதனை தரப்படுத்த இந்த மையம் முனைந்துள்ளது. இது யு.எஸ்.பி. A வகை மற்றும் B வகை போர்ட்களுக்கு மாற்றாக வந்துள்ளது. போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற துணை சாதனங்கள் அனைத்திலும், இது பின்பற்றப்படும். புதியதான யு.எஸ்.பி. 3.1. வேகத்தினை இந்த டைப் சி கேபிள் சப்போர்ட் செய்திடும். டைப் சி வருவதனால், நாம் பலவகையான கேபிள்களைக் குப்பையாகக் கொண்டிருப்பதில் இருந்து விடுபடுவோமா என்பதனைப் பார்க்க வேண்டும். இந்த யு.எஸ்.பி. எப்படி உருவானது என்று பார்க்கலாம்.
யு.எஸ்.பி. தொழில் நுட்பம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னால், கம்ப்யூட்டரை இயக்கிய ஒருவர் பலவகை போர்ட்களில் இணைப்புகளைச் சேர்க்க வேண்டியதிருந்த்து. PS/2 connector அல்லது serial port, DIN கனெக்டர், கேம் போர்ட் என அவை பல வகைகளில் இருந்தன. இவை கம்ப்யூட்டரின் பின்புறத்தில் நிறைய இடத்தை எடுத்துக் கொண்டிருந்தன. 1990 களில், முதல் முதலாக யு.எஸ்.பி.1.1 போர்ட் அறிமுகமானது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 12Mbps ஆக இருந்தது. கீ போர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றை இணைக்கும் போர்ட்களில் வேகம் 1.5Mbps ஆக அமைந்தது. அப்போது வெளியான கீ போர்ட், மவுஸ் மற்றும் பிரிண்டர் போன்ற துணை சாதன்ங்களுக்கு பழைய போர்ட் அல்லது யு.எஸ்.பி. என இரண்டு ஆப்ஷன்களில் வெளியாகின. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு இணைக்கத் தேவையான இடைமுகங்களும் கிடைத்தன.
2000 ஆண்டு மத்திய வாக்கில், யு.எஸ்.பி. 2 வெளியான போது, பலரும் யு.எஸ்.பி. போர்ட்களை மட்டும் பயன்படுத்தத் தொடங்கினர். அதே நேரத்தில், டேட்டாவினைப் பதிந்து வைக்க, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்கள் அறிமுகமாயின. இவை சி.டி. மற்றும் டி.வி.டி.க்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் நிலை தொடங்கியது. அளவில் சிறியதாகவும், வேகமாக டேட்டாவினைப் பரிமாறியதாலும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்கள் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வெளியில் இருந்து இயங்கிய சாதனங்களான, வை பி ரெளட்டர், ஆப்டிகல் ட்ரைவ், ஈதர்நெட் ஆகியவையும் யு.எஸ்.பி. போர்ட்களில் இணைத்து செயல்படும் வகையில் வெளியாகின. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், நான்கு அல்லது ஆறு யு.எஸ்.பி. போர்ட்கள், அவற்றின் முன்னும் பின்னுமாக, எளிதாக இணைத்துப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன.
யு.எஸ்.பி. தொழில் நுட்பத்தின் ஆதிக்கம், யு.எஸ்.பி. 2 மற்றும் 3 வெளியானவுடன் அதிகமாகியது. டேட்டா பரிமாற்றமும் 5 ஜி.பி. வரை உயர்ந்தது. யு.எஸ்.பி. 3 ஹார்ட் ட்ரைவ் அல்லது ப்ளாஷ் ட்ரைவிலிருந்து, ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதையும் வைத்துப் பயன்படுத்துவது சாத்தியமானது. இப்போதெல்லாம், லேப்டாப் கம்ப்யூட்டர்களில் யு.எஸ்.பி. போர்ட் மட்டுமே இருப்பதைக் காணலாம்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய யு.எஸ்.பி. தொழில் நுட்பத்திற்கு பயர்வயர் (FireWire) தொழில் நுட்பம் போட்டியாக அமைந்தது. இதனை IEEE 1394 என்றும் அழைக்கின்றனர். 1990 முதல் 2010 வரை ஆப்பிள் நிறுவனம் இத்தொழில் நுட்பத்தினை அதிகம் சப்போர்ட் செய்து பயன்படுத்தியது. இது யு.எஸ்.பி. தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் பலவகையில் மேம்பட்டதாக அமைந்தது. இதில் சாதனங்களை இணைக்க, ஏதேனும் ஒரு சாதனத்தில் இதற்கான போர்ட் இருந்தால் போதும். தொடர்ந்து இணைக்கப்பட்ட சாதனங்களுடன், மற்றவற்றை இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை daisychain இணைப்பு என அழைப்பார்கள். யு.எஸ்.பி. 1.1. மற்றும் 2.0 தொழில் நுட்பத்தில், ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு திசையில் மட்டுமே டேட்டாவினைப் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால், பயர்வயர் மூலம் இரு வழிகளிலும் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். மேலும், டேட்டா பரிமாற்ற வேகமும் வியக்கத்தக்கதாக அதிகமாக இருந்தது.
ஆனால், பயர்வயர் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த அதிகம் செலவிட வேண்டியதிருந்தது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உரிமைக்கான கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது. இதன் ஒவ்வொரு வகைக்கும், ஒரு வகையான கேபிள் பயன்படுத்த வேண்டியதிருந்தது. இதனால், உயர்நிலை கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மட்டுமே இது இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலிவான செலவில் பயன்படுத்தக் கூடியதாக உள்ள யு.எஸ்.பி. இன்றைக்கும் மக்களிடையே அதிக பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களில், பயர்வயர் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக, தண்டர்போல்ட் (Thunderbolt) என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடைய வேகம் 20Gbps. அடுத்தடுத்து வந்த தண்டர்போல்ட் கனெக்டர்கள், டேட்டா பரிமாற்ற வேகத்தினை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. விரைவில் வர இருக்கிற இந்த கனெக்டர்கள் 40Gbps வேகத்தினைக் கொண்டிருக்கும். தொடர்ந்து பைபர் ஆப்டிக் வகை தண்டர்போல்ட் கனெக்டர்கள் 100 ஜி.பி.எஸ். வரை வேகம் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தண்டர்போல்ட் கனெக்டர்களும் அதிக செலவில் தான் அமைக்க முடியும். கம்ப்யூட்டர்களில் இதற்கென தனி கண்ட்ரோலர்களை அமைக்க வேண்டும். இதனை அமைப்பதாக இருந்தால், ஒவ்வொரு சிப்செட்டிலும் அதிக சிலிகான் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இதனாலேயே, மிக அதிக அளவில் வேகமாக டேட்டா பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டிய உயர்நிலை சாதனங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, யு.எஸ்.பி. தொழில் நுட்பப் பயன்பாட்டிற்கு பயர்வயர் மற்றும் தண்டர்போல்ட் தொழில் நுட்பங்கள் அதிக போட்டியைத் தரவில்லை. ஆனால், இப்போது வயர் இணைப்பு எதுவுமின்றி, டேட்டா பரிமாற்றம் எளிதான ஒன்றாக மாறிவருவதால், இந்த வகை தொழில் நுட்பமே, யு.எஸ்.பி. தொழில் நுட்பத்திற்கு போட்டியாக வரும் வாய்ப்பு உள்ளது. Bluetooth, NFC, WiFi Direct, and AirDrop ஆகிய தொழில் நுட்பங்கலை இந்த வகையில் நாம் எதிர்கொள்கிறோம்.
இருந்தாலும், பல நேரங்களில், நாம் வயர்லெஸ் இணைப்பினைத் தள்ளி வைத்து, நம்பிக்கையுடன் யு.எஸ்.பி. சாதனங்களையே பயன்படுத்துகிறோம். வயர் இணைப்பு வழியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஈதர்நெட் இணைப்பினை, வை பி எப்படி இடம் மாற்ற முடியவில்லையோ, அதே போல, யு.எஸ்.பி. சாதனங்களை, வயர்லெஸ் இணைப்பு சாதனங்கள் முழுமையாக வெளியேற்ற இயலாது என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. நேரடி இணைப்பு, வேகம், வசதி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை, யு.எஸ்.பி. சாதனங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் வைத்திருக்கும்