ஐபாட் எயார்-2 மற்றும் ஐபாட் மினி-3 அறிமுகம்!-விண்டோஸ் 9 இலவசமா?
18 Oct,2014
கணனி உலக ஜாம்பவான் அப்பிள் நிறுவனம் இருவகையான புதிய கருவிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
ஐபாட் எயார்-2 என்ற கருவியும், ஐபாட் மினி-3 என்ற கருவியும் அறிமுகம் செய்யப்பட்டன.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் இந்த கருவிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இவற்றில் ஐபாட் எயார்-2 மிகவும் மெல்லியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.
இரண்டு கருவிகளும் தொடுகை மூலமான விரல் அடையாளங்களை உணரக்கூடிய உணர் கருவிகளை கொண்டவை.
இதன்மூலம் கருவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ் 9 இலவசமா?
வரும் 2015 ஆம் ஆண்டில் விண்டோஸ் 9 வர உள்ளதாக நம்பத் தகுந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்திலிருந்து கசிந்த தகவல் கூறுகிறது. இது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், இன்னொரு முற்றிலும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டும். எப்படி விண்டோஸ் 8.1 சில எதிர்பார்த்த மாற்றங்களுடன் வெளியானதோ, அதே போல, இதுவும் பயனாளர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
அத்துடன் இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. இது விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்படுத்துவோருக்கு இலவசமான அப்டேட் ஆகவே தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, விண்டோஸ் 7 பயன்படுத்துவோரும், இதனை இலவசமாகவே பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்துவோர்கள், விண்டோஸ் 9 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்க்கிறது.
தற்போதைக்கு, இந்த புதிய சிஸ்டம் தரப்போகும் வசதிகள், அதன் விலை மற்றும் பிற தகவல்கள் குறித்து எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், அனைத்து விண்டோஸ் பயனாளர்களையும், புதிய சிஸ்டத்திற்கு மாற்றும் வழிகளை, மைக்ரோசாப்ட் தீவிரமாகச் சிந்தித்து வருவதாக்க் கூறப்படுகிறது.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்குத் தரப்பட்டு ஏறத்தாழ 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பன்னாட்டளவில், பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இதுவே மிக அதிக பயனாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
இவர்களை இலவசமாக விண்டோஸ் 9 சிஸ்டத்திற்கு மாற்றுவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெரிய நிதி இழப்பைத் தரும். இருப்பினும், காலப் போக்கில் லாபம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்குக் கட்டாயமாக மேம்பாடு தரப்படும் உதவி தொகுப்புகள் நிறுத்தப்பட்டனவோ, அதே போல ஒரு சூழ்நிலை விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் ஏற்படலாம். அது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் முன், புதிய சிஸ்டத்திற்கு பயனாளர்களை மாற்றி விட்டால், பிரச்னை எதுவும் ஏற்படாது என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.