உலகின் மிக மெல்லிய ஐபேட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கின்றது. "ஐபேட் ஏர் 2"(iPad Air) என்ற பெயர் கொண்ட இந்த ஐபேட் 6.1 மிமீ அகலமே இருக்கும் என்பது இதன் சிறப்பு. வரும் திங்கட்கிழமை அமெரிக்காவில் இந்த புதிய வகை ஐபேட் விற்பனைக்கு வரவுள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
Mac OS software வசதி கொண்ட இந்த ஐபேட், உலகின் மிக அதிகமான 'ஹை' ரெசலூசன்' திறன் கொண்டது.
இதன் சிறப்புகள்:
அகலம்: 6.1 மிமீ (இதற்கு முன்னர் வெளிவந்த ஐபேட் ஏர் அளவை விட இது 18% மெல்லியது)
ஸ்க்ரீன் அளவு" 9.7 இன்ச்
கேமரா: 8 மெகாபிக்சல் ,
பேட்டரி திறன்: 10 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்
கலர்: சில்வர், கிரே மற்றும் கோல்ட்
கிடைக்குமிடம்: ஆன்லைனில் மட்டும். தற்போதைக்கு கடைகளில் விற்பனை இல்லை.
விலை: $499 முதல் $699 வரை
மொபைல் சாதனப் பயன்பாட்டில் பண்பாட்டு நெறிகள்
இன்றைய நடைமுறை வாழ்க்கையில், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தாதோர் இருக்க முடியாது. நம் வாழ்க்கையில் கூடுதல் வசதிகளை இவை தருவதுடன், நம் வாழ்க்கைச் சூழலையும் மாற்றி உள்ளன. இதனால், நாம் வாழ்வில் சில புதிய பண்பாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகி உள்ளோம். இந்த நெறிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஒப்புதல் உள்ளது என்றாலும், தனிமைப் படுத்தப்படுகையிலும், சில அவசர சூழ்நிலைகளிலும், அவற்றை மீறுகிறோம். அது மற்றவர்களைப் பாதிக்கிறது. அவ்வாறின்றி, கூடுமானவரை நாம் எப்படி இவற்றைக் கடைப்பிடித்து பண்பாட்டுடன் வாழ முடியும் எனப் பார்க்கலாம்.
தொலைபேசியை அதன் ஒலி வெளியில் கேட்காத நிலையில் வைத்தல்: மொபைல் போன் பயன்படுத்தாத இடமே இல்லை என்பதை நாம் அனைவருமே ஒத்துக் கொள்கிறோம். இதனால், ஒருவரின் போன் அழைப்பு ஒலி,மணி ஓசை, பாடல் ஓசை அல்லது வேறு சிறப்பாக செட் செய்யப்பட்ட ஒலி என எங்கும் ஒலிக்கிறது. இது அவர் தனியே இருக்கையில், தன்னுடைய வீட்டில் அல்லது அலுவலகத் தனி அறையில் இருக்கையில் சரியானதாக இருக்கலாம். சில இடங்களில், இந்த அழைப்பு ஒலி ஒலிக்கவே கூடாது. அவை, திரைப்படம் பார்க்கும் போது, அருகிலிருப்பவர் நூல் ஒன்றைப் படிக்கும்போது, ஒருவர் உரையாற்றி, மற்றவர்கள் அதனைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, அனைவரும் மிகவும் ஈர்ப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, நோயாளியின் அறையில், உயர் அதிகாரி மற்றும் மருத்துவர் அறையில், எனப் பல இடங்களைப் பட்டியலிடலாம். இந்த இடங்களில் எல்லாம், உங்கள் மொபைல் போனின் அழைப்பு ஒலியை மவுனமாக வைத்து, அதிர்வு எனப்படும் வைப்ரேஷன் மட்டும் அமைக்கலாம்.
போனில் விளையாடுவதை நிறுத்துங்கள்: நாம் ஒருவருடன் பேசுகையில், அவர் நம் பேச்சை உற்றுக் கேட்காமல், மொபைல் போனில் விளையாட்டினை விளையாடுவதோ, அல்லது செட்டிங்ஸ் அமைப்பதோ நமக்கு நிச்சயம் எரிச்சலைத் தரும். மொபைல் போன் மூலம் சோஷியல் இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறப்படுவது இப்போது அதிகரித்திருப்பதால், பலர், இத்தகைய தொடர்பிலேயே உள்ளனர். ஆனால், நம்முடன் பேசும் நண்பர்கள் பேசுவதனை இந்நேரத்தில் அலட்சியப்படுத்துகிறோம். நட்பினை வளர்க்க என உருவாக்கப்பட்ட சமுதாய இணைய தளங்கள், பல வேளைகளில், நேரடியாக ஈடுபடாமலேயே, நட்பினை முறிக்கும் தளங்களாகவும் மாறுகின்றன. எனவே, மற்றவர்கள் உங்களுடன் பேசுகையில், சமூக நிகழ்வு ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டிருக்கையில், மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் தொடர்பு கொள்வதனை அறவே மேற்கொள்ளக் கூடாது. கட்டாயம் இந்த சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் எனில், நம்மிடம் பேசுபவரிடம் நிலையை எடுத்துக் கூறியபின்னர், அல்லது சமூக நிகழ்விலிருந்து விலகியோ, அத்தொடர்பினை மேற்கொள்ள வேண்டும்.
நேரத்தை நம் விருப்பப்படி அமைத்துக் கடைப்பிடிக்க: இன்றைய மொபைல் தொழில் நுட்பம், நம்முடைய தகவல் பரிமாற்றத்தினை மிக மிக எளிதாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் மேற்கொள்ளும் வசதியைத் தந்துள்ளது. நேரடியாக ஒருவரிடம் பேசுவதைக் காட்டிலு, மெசேஜ் மூலம் நம் செயல்பாட்டினை எளிதாக மற்றவருக்குத் தெரிவிக்கலாம். இந்த வசதி, நாம் எந்த ஒரு நிகழ்விற்கும், சரியான நேரத்திற்குச் செல்வதனை எதிர்பார்க்கிறது. நிகழ்வில் மாற்றங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் போது, அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமையையும் நம்மிடம் சுமத்துகிறது. எனவே, சரியான நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதனையும், அது நேரம் மாற்றப்படும் போது, மற்றவருக்குத் தெரிவிக்க வேண்டுவதனையும் நாம் பின்பற்ற வேண்டும்.
திரைப்படம் பார்க்கையில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்கு: திரைப்பட நிலையங்களில் சிலர் தங்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களான, மொபைல் போன், ஐ பேட், ஐபோன் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை இயக்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது செட்டிங்ஸ் மாற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்கள், மற்றவர்கள் தங்களைக் கவனிக்கவில்லை என்றும், தங்கள் சாதனங்களில் ஏற்படும் ஒலி, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இல்லை என்றும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அப்படி நிகழ்வதில்லை. அருகில் இருப்பவர்கள், இவர் ஏன் இங்கு வந்து இந்த வேலையை மேற்கொண்டிருக்கிறார் என்று எரிச்சல் பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த சாதனங்களின் திரை வெளிச்சமே மற்றவரின் கவனத்தைத் திருப்பும் எரிச்சல் அம்சமாக இருக்கும். எனவே, திரைப்பட நிலையங்களில், இவற்றை இயங்காமல் முடக்கி வைப்பதே நல்லது. மொபைல் போன் போன்றவற்றில் அழைப்புகள் இருந்தால், அதற்கென செட் செய்யப்பட்ட மெசேஜை அனுப்பலாம். அல்லது போனையே ஆப் செய்து வைக்கலாம்.
டெக்ஸ்ட் அமைக்கும் நெறிகள்: முன்பெல்லாம், இளைஞர்களே அதிகம் டெக்ஸ்ட் செய்திகள் அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலும் வெட்டிப் பேச்சுகளை, வர்ணனைகளே இருந்து வந்தன. இதற்கான வாக்கியங்கள் அரை குறை வாக்கியங்கள், எழுத்துப் பிழைகள், முற்றுப் பெறாத சொற்கள் என இருக்கும். இப்போதும் இவை இருக்கின்றன. ஆனால், இப்போது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றும் மற்றவர்களுடன் அலுவல் குறித்த தகவல்களை, டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பிப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே, இதில் சரியான வகையில் டெக்ஸ்ட் அமைப்பதுவே பண்பான ஒன்றாகும். ஓர் உயர் அதிகாரிக்கு “lol wuts up boss?” என டெக்ஸ்ட் அனுப்புவது நல்ல நாகரிகமாகாது. அல்லது “Can you come in a few hours la?” என அனுப்புவதும் தவறான ஒன்றாகும். மேலும் சிலர் கேப்பிடல் எழுத்துக்களைக் கொண்டு டெக்ஸ்ட் அமைப்பார்கள். இதுவும் தவறான பண்பாகும். தனிப்பட்ட நண்பர்கள் விடுத்து, மற்றவர்களிடம் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக் கொள்கையில், கேப்பிடல் லெட்டர்களாக இல்லாமல், முறையான வாக்கியங்கள் மூலம் டெக்ஸ்ட் அமைப்பதுவே சரியான பண்பாகும்.
எப்போதும் குற்றம் குறையா?: நம்மைச் சுற்றியுள்ள சிலர் எப்போதும் எதனையாவது குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்ப்பார்கள். இவர்கள் தங்களைப் பற்றிய மோசமான பண்புப் பதிப்பினை மற்றவருக்குக் காட்டிக் கொண்டிருப்பவர்களாவர்கள். நிச்சயம் சுற்றி இருப்பவர்கள், இத்தகைய குணம் கொண்டபவர்களை வெறுப்பார்கள்; அல்லது விலகிச் செல்ல விரும்புவார்கள். சிலர் இணையத்திலும் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள். அஞ்சல் குழுக்களில் இது போலச் செயல்பட்டால், சிலர் குழுக்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளும் முடிவிற்குச் செல்வார்கள். தங்கள் வலை மனைகளில் இது போல எழுதுபவர்களின் எழுத்தைப் படிக்க ஆட்களே இருக்க மாட்டார்கள். எனவே, இணையத்தில், நம் கோபத்தினை என்றாவது ஒரு நாள், நாகரிகமாகக் காட்ட வேண்டுமோ ஒழிய, பண்பில்லாமல் தொடர்ந்து எழுதுவதனைத் தவிர்க்க வேண்டும்.
மனிதர்களைக் காட்டிலும் சாதனங்கள் முக்கியமல்ல: தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டதனால், அவை கொடுக்கும் வசதிகளைப் பயன்படுத்தும் போது நாம் நம்மை இழக்கிறோம். ஏனென்றால், நாம் டிஜிட்டல் சாதனங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கிறோம், மனிதர்களை இரண்டாவது இடத்தில் வைக்கிறோம். இந்த தவற்றினைத் திருத்திக் கொண்டால், நிச்சயம் நாம் பண்பாளர்களாகவே தொடர்ந்து இருப்போம்.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளவையோடு இன்னும் சில உறுத்தல் தரும் செயல்களையும் சிலர் இந்த சாதனங்களில் மேற்கொள்ளலாம். அவற்றை எல்லாம், அவர்களாகவே புரிந்து கொண்டு விலக்குவதே நல்லது.