மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.
1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்: நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம். இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்
.
2. அப்டேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்: நாம் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நமக்கு வழங்கிய நிறுவனங்கள், அவற்றை மேம்படுத்துகையில், புதிய வசதிகள் தருவதோடு, அவற்றிற்கான பாதுகாப்பிற்கென புதிய வழிகளையும் அமைக்கின்றன. எனவே, அப்டேட் செய்திடவில்லை எனில், நம் அப்ளிகேஷன் புரோகிராம் மட்டுமின்றி, போனும் பாதுகாப்பற்ற நிலையை அடைகிறது.
3. அனுமதியற்ற சாதனத்தில் முக்கிய டேட்டா: அலுவலகப் பயன்பாட்டிற்கு எனத் தனியாகவும், சொந்த தொடர்புகளுக்கென தனியாகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், அலுவலகம் சார்ந்த முக்கிய ரகசிய தகவல்களை நம் சொந்த மொபைல் சாதனங்களில் ஸ்டோர் செய்திடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வகை டேட்டாவினையும் தனித்தனியே, வெவ்வேறு சாதனங்களில் ஸ்டோர் செய்வதே பாதுகாப்பானது.
4.கேள்விக்குறியாகும் தகவல்களைத் திறப்பது: மொபைல் சாதனங்கள் மூலம் பயனாளர்கள் தேவையற்ற, நாகரிகமற்ற விஷயங்களைப் பெற முடியும். எஸ்.எம்.எஸ். வழி அனுப்பப்படும் மெசேஜ்கள் இவ்வகையில் நமக்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றன. ஸ்பாம் செய்திகளில் உள்ள லிங்க்குகள் இந்த அபாயங்களுக்கு வாசல்கள் ஆகும். எனவே, இத்தகைய செய்திகளில் தொற்றிக் கொண்டு வரும் லிங்க்குகளில் கிளிக் செய்து திறக்கவே கூடாது. நாம் ஏற்கனவே அறியாத, அறிந்துகொள்ள முடியாத லிங்க்குகள் இருந்தால், அவை கொண்டுள்ள செய்திகளை உடனடியாக அழித்துவிட வேண்டும். ஏனென்றால், பின் நாளில், நாம் அறியாமலேயே இவற்றில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ள நேரிடும்.
இதே போல, நிறுவனங்கள் இல்லாமல், தனி நபர்கள் தயாரித்து இலவசமாக வழங்கும் அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழக்கமும் மிகவும் ஆபத்தானது. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஆகிய தளங்களில் கூட இது போன்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இவற்றிலாவது ஓரளவிற்கு, சோதனை செய்யப்பட்டே புரோகிராம்கள் இதில் தரவிறக்கம் செய்வதற்குப் பதியப்படுகின்றன. இவ்வாறின்றி பிற தளங்களில் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிவு செய்திடும் முன் பலமுறை யோசித்து, சோதனை செய்து, இணையதளங்களில் அந்த புரோகிராம் குறித்த தகவல்களைத் தேடி அறிந்த பின்னரே, பாதுகாப்பு மற்றும் உண்மைத் தன்மை அறிந்த பின்னரே, அவற்றைப் பயன்படுத்த தரவிறக்கம் செய்திட வேண்டும்.
5. பணியாற்றும் நிறுவனக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல்: பல நிறுவனங்கள், தங்களின் அலுவலர்கள், தங்கள் நிறுவனம் குறித்த தகவல்களை, சமூக வலைத் தளங்களில் பதியக் கூடாது எனப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்கும். இவற்றைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். மறந்தும் கூட நாம் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களை, அவை எதுவாக இருந்தாலும், சமூக இணைய தளங்களில் பதியக் கூடாது. ஏனென்றால், இந்த இணைய தளங்களை இயக்குபவர்கள், நாம் தரும் தனி நபர் தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குவதனை உரிமையாகவே கொண்டிருப்பார்கள். இதனை அறியாமல் நாம் பிரச்னைக்குள்ளாகி விடுவோம்.
6.பொது இட வை-பி பயன்படுத்துதல்: உங்கள் மொபைல் போனில் நீங்கள் பெற்றிருக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்தாமல், பொது இடங்களில் கிடைக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவை முற்றிலும் பாதுகாப்பானது என்பதனை உறுதி செய்து கொண்ட பின்னரே பயன்படுத்த வேண்டும். எல்லாரும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிப் பயன்படுத்தும் வகையில் வை-பி இணைப்பு தரப்படுவதாக இருந்தால், அதனைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில், நம் மொபைல் போனில் உள்ள தகவல்களை, அதே நெட்வொர்க்கில் இயங்கும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மொபைல் சாதனங்களில் நாம் பின்பற்ற மறக்கும் நெறிமுறைகளாகும். மொபைல் சாதனங்கள் கையடக்க கம்ப்யூட்டர்களாக மாறியுள்ள நிலையில், இணையத்திற்கான திறவு கோல்களாக உருவெடுத்துள்ள நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் நாம் இவற்றிலும் பின்பற்றியாக வேண்டும்.
யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல்
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் அக்கவுண்ட் போல அல்ல.
அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க அனுமதியைத் தானாகப் பெறுவதில்லை. முதலில் இயக்குபவரைத்தான் கேட்கும்.
யு.ஏ.சி. தீர்த்து வைக்கும் பிரச்னைகள்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முதலில் ஒரு பிரச்னை கண்டறியப்பட்டது. பெரும்பாலானவர்கள், அவர்களுடைய
பெர்சனல் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து செயல்பட, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தினார்கள். அதாவது, ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமும் முழு கம்ப்யூட்டரில் இயங்க, இயக்க, அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியினைப் பெற்றிருந்தன. இதனால், நீங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்றை, நீங்கள் அறியாமல், இயக்கிக் கொண்டிருந்தால், அது கம்ப்யூட்டரின் முழு பகுதியிலும் தன் கெடுதல் வேலையை மேற்கொள்ளும் வசதியினைப் பெற்றுவிடும். உங்கள் வெப் பிரவுசரோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமோ இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராமுக்கு பணிந்துவிட்டால், முழு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
இதற்குப் பதிலாக சிலர் கட்டுப்படுத்தப்பட்ட யூசர் அக்கவுண்ட் (limited user accounts) பயன்படுத்துகின்றனர். ஆனால், பல புரோகிராம்கள் இந்த நிலையில் இயக்கப்படும்போது, இயங்குவதில்லை.
யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் இயங்கும் விதம்: விஸ்டா சிஸ்டம் முதல் யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் டூலினை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. அட்மினிஸ்ட்ரேட்டர் ஒருவர் விண்டோஸ் இயக்கத்தில் நுழைந்தவுடன், விண்டோஸ், explorer.exe பைலை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கான அனுமதியுடன் இயக்குகிறது. நீங்கள் திறக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த பைலால் தொடங்கப்படுகிறது. அந்த புரோகிராம்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியும் சேர்ந்து லோட் செய்யப்படும். இதனால், ஒரு புரோகிராம் இயங்க அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியை புரோகிராம் கேட்கலாம்.
யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் பாப் அப்: ஒரு புரோகிராம் இயங்குவதற்குத் தேவையான அட்மினிஸ்ட்ரேட்டரின் அனுமதியை யு.ஏ.சி., அதன் டயலாக் பாக்ஸை பாப் அப் செய்து கேட்கிறது. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்று இன்ஸ்டால் செய்யப்படும்போது இந்த டயலாக் பாக்ஸ் பாப் அப் ஆவதைக் காணலாம். ஏனென்றால், இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம் குறித்த தகவல்கள் அனைத்தும், யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் பிரிவிலும் எழுதப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சிஸ்டம் செட் அப் செய்யப்பட வேண்டும்.
இதனால் தான், சில பழைய புரோகிராம்களை நாம் இயக்கும் போதெல்லாம், யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல், அந்த புரோகிராமினை இயக்குவதற்கு அனுமதியைக் கேட்கிறது. சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும், யூ.ஏ.சி. அனுமதி கேட்கும். அதற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, சில பைல்களை, புரோகிராம் போல்டரில் காப்பி செய்திட முயற்சித்தால், யூ.ஏ.சி. அனுமதியினைக் கேட்கும். மாறா நிலையில், பைல் மேனேஜர், வரையறுக்கப்பட்ட அனுமதியுடன் தான் இயங்கும்.
பொதுவாக, நாம் யூ.ஏ.சி. அனுமதி கேட்கும் என எதிர்பார்க்கும் நிலையில் மட்டுமே நான் அதனை அனுமதிக்க வேண்டும். நீங்கள் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையிலும், அல்லது சிஸ்டம் அமைப்பில் மாற்றங் களைச் செய்திடுகையிலும், யூ.ஏ.சி. அனுமதி கேட்டால், சரி என ஒத்துக் கொண்டு அனுமதி தருவதே நல்லது. ஆனால், பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், திடீரென யூ.ஏ.சி. பாப் அப் செய்து, எதற்கேனும் அனுமதி கேட்டால், உடனே அனுமதி தரக் கூடாது. என்ன வகை செயல்பாட்டிற்கு அனுமதி கேட்கிறது என்று நன்றாக ஆய்வு செய்து, அதனால், வேறு கெடுதல்கள் ஏற்படாது என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் வருவதனை இந்த ஆய்வு தடுக்கும்.