வேர்ட் டிப்ஸ்-கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க
கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பிரிவில் ‘Display gridlines on screen’ என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.
வேர்டில் எப்2 கீ: டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல.
டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத்திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து வைக்கலாம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட்டைப் பின் டாகுமெண்ட்டில் தெரியுமாறும் வைக்கலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் View மற்றும் Hidden Text தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் தெரிய வரும். இந்த வசதியினைப் பயன்படுத்தி ஒரு உரையாற்றுகையில் அதனை அச்சில் பெறுபவருக்கு குறிப்பு டெக்ஸ்ட்டினை மறைத்தவாறே அச்செடுத்து தரலாம்.

மைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட்டிப்பு
வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது. எக்ஸ்பிக்கு சப்போர்ட் நிறுத்திக் கொள்ளும் நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி இயங்கும் சிஸ்டங்கள் வழியாக, இதனை டவுண்லோட் செய்திட அனுமதி இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த புரோகிராமிற்கு தொடர்ந்து அப்டேட் வழங்கி வரும் மைக்ரோசாப்ட், அவற்றையும் எக்ஸ்பி பயன்படுத்துவோருக்கு வழங்க முடியாது எனத் தெளிவாகக் கூறியது. அப்டேட் பைல்கள் இல்லாமல், செக்யூரிட்டி எசன்சியல் புரோகிராமினை இயக்குவது என்பது புத்திசாலித்தனமான நிலை அல்ல. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான சப்போர்ட்
இல்லாவிட்டாலும், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான அப்டேட் பைல்களை டவுண்லோட் செய்து, ஓரளவிற்குப் பாதுகாப்பினைப் பெறலாம் என எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தவர்கள் எண்ணியிருந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மைக்ரோசாப்ட் அறிவிப்பு இருந்தது. இதனால் எக்ஸ்பி வாடிக்கையாளர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது மைக்ரோசாப்ட் தன் நிலையைச் சற்று தளர்த்தியுள்ளது. எக்ஸ்பியிலிருந்து மாறுபவர்களின் நிலையைப் பாதுகாப்பாக வைத்திட, வரும் 2015 ஜூலை 14 வரை, செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமிற்கான ஆண்ட்டி மால்வேர் எதிர்ப்பு குறியீடுகளைத் தொடர்ந்து அப்டேட் செய்திடலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராமினை முழுமையாக, புதியதாக டவுண்லோட் செய்பவர்கள், ஏப்ரல் 8க்குப் பின்னர் பெற முடியாது. இதனைத் தெளிவாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.