வட, கிழக்கில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு 'தீவிரவாதி' முத்திரை - 
                  
                     28 Feb,2025
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார்.
	 
	ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் செவ்வாய்கிழமை (25) இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் எனவும், நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
	 
	அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
	 
	அதேபோன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
	 
	அதன்படி இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேரி லோலர், மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
	 
	அதுமாத்திரமன்றி பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.