இலங்கை சிவனொளிபாத மலைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள் :
17 Feb,2025
இலங்கையின் பிரபலமான சுற்றுலாத்தளங்களுள் ஒன்றான சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகள் இலட்சக்கணக்கில் வருகைதருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நல்லதண்ணி காவல்துறைப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்துள்ளார்.
நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து வாகன நிறுத்துமிடங்களும் வாகனங்களால் நிரம்பியுள்ளதாகவும், மீதமுள்ள வாகனங்கள் நல்லதண்ணி-மாரி சந்திப்பிலிருந்து லக்சபான தோட்டம் வரை சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி பாதை வழியாக வருபவர்களால் சிவனொளிபாத மலையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்திகட்டுபஹானவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான நல்லதண்ணி சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகை தருபவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.