திருமலை வழக்கு : சி.வி.கே. மற்றும் சத்தியலிங்கத்துக்கு சிறிதரன் அவசர கடிதம்
09 Feb,2025
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருக்கு பாராளுமன்ற குழுத் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சனிக்கிழமை (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் சந்திரசேகரம் என்பவரால் எமது கட்சி அங்கத்தவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 2ஆம், 4ஆம், 7ஆம் எதிராளிகளான மூவரும் வரைபு இணக்க நியதிகளை கடந்த 7ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.
இந்த அடிப்படையில் எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த நிபந்தனைகளை எதிராளிகளான நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் அந்த வரைவு இணக்க நியதிகளின் பிரதிகளையும் தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட ரீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், பத்பநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், எஸ்.எச்.குலநாகம், எஸ்.யோகேஸ்வரன், இரத்தினவடிவேல் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்படப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரும் பொருட்டே மேற்படி முன்மொழி வரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கடந்த ஜனவரி 21ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான பொதுச்சபை 326 உறுப்பினர்களுடன் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட
கட்சியின் நிர்வாகிககளுடைய தேர்தலை இணக்கம் எட்டப்படும் தினத்தில் இருந்து இரண்டு மாதகாலத்துக்குள் நடத்துவதற்கு தரப்ப்பினர் இணங்கிக்கொள்கின்றனர்.
அத்துடன் குறித்த 326உறுப்பினர்கள் தவிர்த்து வேறு எந்த உறுப்பினர்களும் வாக்களிப்பதமற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.