இராணுவ ஆக்கிரமிப்பில் கிளிநொச்சி மகா வித்தியாலய பாதை! - மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவ தளபதிக்கு கடிதம்
05 Feb,2025
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இன்று (5) இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். அதுவொரு ஆபத்தான பயணமாக காணப்படுகிறது என்பதனை சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் இராணுவம் 11.02.2025க்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கோரியுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.