அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்த டிரம்ப் உத்தரவு - இலங்கை உட்பட பல நாடுகளிற்கு பாதிப்பு
26 Jan,2025
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக்ரூபியோ இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.
இதன் காரணமாக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தி;ட்டங்களிற்கு யுஎஸ்எயிட் அமைப்பும் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வழங்கிவந்த நிதி நிறுத்தப்படும் நிலை நிலை எழுந்துள்ளது.
அமெரிக்கா வெளிநாடுகளிற்கு வழங்கும் வெளிநாட்டு உதவி திட்டங்களை 90 நாட்களிற்கு நிறுத்திவைக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் இதனை அமெரிக்கா வெளிநாடுகளிற்கு வழங்கும் நிதி உதவி அமெரிக்கா ஜனாதிபதியின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவான விதத்தில் காணப்படுகின்றதா என ஆய்வினை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
1956ம் ஆண்டு முதல் அமெரிக்கா இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதிஉதவி சந்தையை அடிப்படையாக கொண்ட பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும்,சுற்றுச்சுழல் பேண்தகுதன்மை மற்றும் மீள் எழுச்சி தன்மை ஆகியவற்றை வளர்ப்பது,நல்லாட்சியை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கு அமெரிக்கா இந்த நிதியுதவியை வழங்குகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் இஸ்ரேலிற்கான இராணுவஉதவிகளை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.