ராஜபக்ச சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகள் இருப்பதாக அடிக்கடி கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரகல போராட்ட காலத்தில் ஒரு பெரிய பட்டியலே வெளியிடப்பட்டது. ஆனால் தமது பெயரில் அவ்வாறு சொத்துகள் இருந்தால் எவரும் நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என அவர்கள் சவால் விட்டிருந்தனர்.
ஆகவே அவர்கள் மிகவும் சாதுரியமாக வேறு நபர்களின் பெயர்களில் குறித்த சொத்துகளை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இன்று வரை இலங்கை மக்கள் மனங்களில் நிலவி வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சி காலத்தில் ராஜ வாழ்க்கையை வாழ்ந்தனர்.
மகிந்த மற்றும் அவரது பிள்ளைகள் ஒரு பக்கம் சொகுசு வாழ்க்கையில் திளைக்க, மகிந்தவின் சகோதரர் பஸில் நாடெங்கினும் உல்லாச ஹோட்டல்களை ஆரம்பிப்பதில் மும்முரமாக இருந்தார்.
இவர்களது காலத்தில் பலரது நிலங்கள், சொகுசு பங்களாக்கள் அபகரிக்கப்பட்டன. பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அவை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன.
ராஜபக்ச சகோதரர்களில் கோட்டாபய மாத்திரம் மிகவும் அவதானமாக நடந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் தான் ஒரு அரச அதிகாரி போன்று நடந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி போன்று உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்கும் ஒருவராக விளங்கினார்.
2020இல் அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தான் ஒரு நேர்மையான அரச அதிகாரியாகவே இருந்ததாக மக்கள் மத்தியில் தன்னை காட்டிக்கொண்டார்.
தனது பெயரில் இலங்கையில் எங்கேயாவது ஒரு சிறிய வீட்டையாவது எவராலும் காட்ட முடியாது என்று கூறினார். கோட்டாபாயவின் மனைவியின் சொந்த ஊர் மஹரகம பகுதியிலுள்ள உடமுல்ல ஆகும்.
தனது மனைவியின் பெயரில் உடமுல்லவில் ஒரே ஒரு வீடு மாத்திரமே தனது சொத்து என்று தெரிவித்த கோட்டாபய வேறு எந்த சொத்தாவது தனது பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ இருந்தால் நிரூபித்து காட்டும்படி அச்சந்தர்ப்பத்தில் சவால் விட்டிருந்தார்.
ஆனால் 2018 ஆண்டிலேயே தற்போது பேசப்படும் கதிர்காமம் சொகுசு பங்களா பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
கதிர்காமம் பகுதியிலுள்ள பங்களாவுக்கு கோட்டாபய ராஜபக்சவின் பெயரில் மின்சாரப் பட்டியல் இருந்தமை குறித்து விசாரணைகளுக்காக குற்றப்புலலானய்வு திணைக்களத்துக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. அதற்கு முன்பதாக மகிந்தவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்சவும் வருகை தந்திருந்தார்.
எனினும் கதிர்காமம் டிப்போ வீதியில் வனராஜ பெதச எனும் விலாசத்தில் அமைந்துள்ள பங்களாவானது இராணுவத்தினரின் பங்களிப்புடன் ராஜபக்சகளின் காலத்தில் இரகசியமாக அமைக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பங்களாவின் நீர்க்கட்டணப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே உள்ளது. 2015 ஆம் ஆண்டின் நீர்க்கட்டணப் பட்டியலானது 2018 ஆம் ஆண்டு ஒரு சில பத்திரிகை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த நீர்க்கட்டணப்பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச வனராஜ பெதஸ, டிப்போ வீதி கதிர்காமம் என முகவரி உள்ளது.
குறித்த பங்களா யாருடையது என்றாலும் அதன் மின்சார மற்றும் நீர்க்கட்டணப் பட்டியல்கள் ஏன் கோட்டாபயவின் பெயர்களில் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதொரு கேள்வியாகும்.
கோட்டாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கதிர்காமத்தின் புனித நதியான மாணிக்கக்கங்கையின் ஓரத்தில் இந்த பங்களா அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ பொறியியல் பிரிவினரே இதை அமைத்துள்ளதாகத் தெரிகின்றது.அதன் காரணமாகவே இந்த குடியிருப்பு மிகவும் இரகசியமாக இருந்து வந்துள்ளது.
மேலும் இந்த பங்களாவானது சுற்றி ஆளுயர மதில்களுடன் உள்ளே நடப்பது என்னவென்பதை வெளியார் அவதானிக்க முடியாதவாறு உருவாக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயம்.
குறித்த வீடானது அரசாங்கத்துக்கு உரித்தான நிலம் என்பதாலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கடந்த வாரம் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய, திணைக்களத்தின் வெளியே ஊடகவியலாளர்கள் எவரையும் சந்திக்காமல் வாகனத்தில் சென்று விட்டார்.
எனினும் அவரது சார்பாக வருகை தந்த சட்டத்தரணி, ஊடகங்களிடம் இது ஒரு வேடிக்கையான விவகாரம் என பதிலளித்தார்.
மின்சார கட்டணம் அல்லது நீர்க்கட்டணத்தை பெறுவதற்கு உரிய ஆவணங்கள் அவசியம் என்பதை சிறு பிள்ளையும் அறியும். ஆகவே கோட்டாபய பெயரில் மின்சார பட்டியல் இருப்பதென்பது பொய்யான தகவல் என அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அவரது பெயரில் நீர்க்கட்டணப் பட்டியல் இருக்கின்றதா இல்லையா என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கூறவில்லை.
எனினும் மேற்படி கதிர்காமம் பங்களாவின் நீர்க்கட்டணப் பட்டியலானது கோட்டாபயவுக்கு தெரியாமல் அக்காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்க முடியாது.
ஏனென்றால் தேசிய நீர் வடிகாலமைப்பு சபையும் கோட்டாபய ராஜபக்ச யார் என்பதை அறியாமலிருக்க சந்தர்ப்பங்கள் இல்லை.
எனவே இது ராஜபக்ச சகோதரர்களின் ஒரு நாடகமாகவே நினைக்க வேண்டியுள்ளது. அவரது பெயரில் பட்டியல் இருக்குமாயின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தேசிய நீர் வடிகாலமைப்பு சபை மற்றும் மின்சார சபையிடம் விசாரணைகளை நடத்தலாம்.
குறித்த ஆவணங்களை யார் சபையிடம் சமர்ப்பித்தது போன்ற விபரங்களைப் பெற்றால் உண்மைகள் வெளிவரும். எனினும் இவ்விடயத்தில் பல மர்ம முடிச்சுகள் எதிர்காலத்தில் அவிழும் என அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.