13வது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

30 Dec,2024
 

 
 
 
பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான்  இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.
 
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத்  தவறியதை அடுத்து அது குறித்து  ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் காட்டிய அளவுக்கு  தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை.  
 
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுடனான  செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அரசாங்கம் 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தவறாமல்  வலியுறுத்திவந்த   மோடி இந்த தடவை அதை தவிர்த்துக்கொண்டது பிரத்தியேகமான வித்தியாசமாக தெரிந்தது. 
 
ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி கூறியிருப்பதால் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து கூறாதது ஒரு பிரச்சினை அல்ல என்றும் அரசியலமைப்புக்குள் தான் அந்த திருத்தமும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
 
இந்திய பிரதமர் வேறு எந்த நாட்டினதும் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் தங்களது நாடுகளின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்பதில்லை. சொந்த அரசியலமைப்பை முழுமையாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மற்றைய நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு நாட்டின் தலைவர் கூறவேண்டியதுமில்லை. 
 
ஆனால், இலங்கை ஜனாதிபதிகளிடம் இந்திய தலைவர்கள் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்பதற்கு 1987  ஜூலை இந்திய —  இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்காக  அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13  வது திருத்தம் மாத்திரமே  காரணம். அதனால் ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் அந்த திருத்தம் பற்றி குறிப்பிடுவதை மோடி தவிர்த்தமைக்கு ஒரு பிரத்தியேக காரணம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 
 
தென்னிலங்கை அரசியல் சமுதாயம் மற்றும் மக்கள் மத்தியில் அந்த திருத்தத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதனால் அதைப் பற்றி கூறுவதன் மூலமாக ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உள்நாட்டில்  அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய பிரதமர் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.  இந்திய விரோத கடந்தகாலம் ஒன்றைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை அரசாங்கம் ஒன்று இந்தியாவுடன் சுமுகமான உறவுகளை வளர்ப்பதில் அக்கறை கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையை பழுதாக்குவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிகிறது. மோடி
 
 அவ்வாறு நடந்து கொண்டது  இந்தியாவுடன் விவகாரங்களை கையாளுவதில் தங்களது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றி என்று   ஜே.வி.பி. தலைவர்கள் சிலவேளை  பெருமைப்படவும் கூடும்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு  முயற்சியுமே வெற்றி பெற்றதில்லை. இந்தியாவின் தலையீட்டின் விளைவாக கொண்டுவரப்பட்ட  காரணத்தினால் மாத்திரமே இன்று வரையில் மாகாண சபைகள் முறை நீடிக்கிறது. ஆனால், இந்தியாவின் இடையறாத வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூட 13 வது திருத்தம்  உகந்த முறையில்  நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதை இலங்கை அரசாங்கங்கள் உறுதி  செய்துகொண்டன. 
 
அதனால் இந்தியாவுக்கு அண்மைக்காலமாக 13 வது திருத்தம் குறித்த அரைகுறையான அக்கறையும் கூட இனிமேல்  இல்லாமல் போகுமேயானால், பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும்,  இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடும் கூட இல்லாமல்  போகக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்கள் மோடியின் செயல் குறித்து விசனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.     
 
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. முன்று வருடங்களுக்கு பிறகு கொண்டு வரவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை உள்ளடக்குவதில் மெய்யான அக்கறை  காட்டப்படுமா?  மாகாணமே  அதிகாரப்பரவலாக்கல் அலகாக தொடர்ந்து இருக்குமா? தற்போது 13  வது  திருத்தத்தில் உள்ள அதிகாரங்களாவது முழுமையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா?  அவ்வாறு உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யக்கூடிய அரசியல் வல்லமை தமிழ்க் கட்சிகளிடம் இருக்கிறதா? இந்தியா அதை வலியுறுத்துமா?  இவை விடைவேண்டி நிற்கும்  முக்கியமான கேள்விகள். 
 
இந்தியாவின் தலையீட்டின் விளைவாக கொண்டுவரப்பட்டதன் காரணத்தால் இன்று வரை நீடிக்கும் 13 வது திருத்தம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் புதியதொரு  அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை   கொண்டு வருவதற்கு அரசாங்கத்தை இணங்க வைக்கக்கூடிய  அல்லது நெருக்குதல்  கொடுக்கக்கூடிய அரசியல் வல்லமை வடக்கு,  கிழக்கு தமிழ்க் கட்சிகளிடம்  இருக்கிறதா?  
 
பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பில் இதுவரையில் தமிழ்க்கட்சிகளின் அணுகுமுறைகளின் விளைவாக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தமிழர் பிரச்சினையில் இந்தியா கொழும்புக்கு எந்தவிதமான நெருக்குதலையும்  இனிமேல்  கொடுக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்க்கமுடியாது. தமிழர் பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு இந்தியா இடையறாது  விடுத்துவரும்  வேண்டுகோளையும் தமிழ்க் கட்சிகள் கரிசனையுடன் நோக்கவில்லை. இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிக்காப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக  தமிழர் பிரச்சினையை கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன.
 
இது இவ்வாறிருக்க,  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையிலான ஒரு  அரசியல் அணுகுமுறை குறித்து பொதுப்படையாக பேசுகின்றதே தவிர, அதிகாரப்பரவலாக்கம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இது தொடர்பில் இலங்கையின் முக்கியமான அரசறிவியல் நிபுணர் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அண்மையில் தெரிவித்த ஒரு  கருத்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
 
” இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பரவலாக்கல்  செயன்முறையையும்   தாராளவாத சிந்தனையுடையவர்கள் முன்வைக்கும் நல்லிணக்கச் செயன்முறையையும்  தேசிய மக்கள் சக்தி தவிர்த்து ஒதுக்குகிறது. இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அதன் அரசியல் நிகழ்ச்சித்திட்டம் ‘தோல்வி கண்ட’  கடந்தகால முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாக நோக்கப்படுவதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்றே தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.
 
13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து மூண்ட சர்ச்சைகளின் போது ஒரு கட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க அந்த திருத்தம் தங்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று தமிழ் மக்கள் நம்பினால் அதை ஏற்றுக்கொள்வதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை எதுவுமில்லை என்று கூறினார். பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கூட அரசியலமைப்பில் நீண்டகாலமாக  இருந்துவரும் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட  வேண்டும் என்று கூறினார். ஆனால் எதிர்ப்புகள் தீவிரமடையத் தொடங்கியதும் அவர்கள்  அதைப் பற்றி பேசுவதை தவிரத்துக் கொண்டார்கள். 
 
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி குறிப்பிட்டார்கள். ஆனால் ஜனாதிபதி திசாநாயக்க தனது விஞ்ஞாபனத்தில் அதைப்பற்றி எதையும் கூறாமல் 2015 — காலப்பகுதியில் மைத்திரி — ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவு செய்து பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணப்போவதாக  வாக்குறுதியளித்தார்.
 
தேசிய மக்கள் சக்தி அதன் விஞ்ஞாபனத்தில் 13 வது திருத்தத்தை தவிர்த்திருந்தது குறித்து விமர்சனங்கள் கிளம்பியபோது அது குறித்து கருத்து வெளியிட்ட  சுமந்திரன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையின்போது  அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் 13 வது திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து  ஆராயப்பட்டதால் அந்த திருத்தம் பற்றி ஜனாதிபதி  குறிப்பிட வேண்டிய தேவை இருக்கவில்லை  என்று கூறினார்.
 
ஆனால், மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு வரும்  வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று  அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அந்த இடைப்பட்ட காலத்தில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன்  13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை சாத்தியமானளவுக்கு நடைமுறைப்படுத்துவதே சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகள் விடயத்தில் ஓரளவுக்கேனும் நம்பகத்தன்மையை பெறுவதற்கு ஒரே வழி.
 
மாகாணசபைகளையோ அல்லது 13 வது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் கொழும்பை அனுமதிக்காது என்ற நம்பிக்கை தமிழ்க் கட்சிகளுக்கு இருந்து வந்திருக்கிறது . ஆனால்,  ஜனாதிபதி திசாநாயக்கவுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி 13 வது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை  தவிர்த்ததன் மூலமாக மறைமுகமாக  தெரிவிக்கப்பட்ட  செய்தியை தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொண்டனவோ தெரியவில்லை. நீணடகாலத்துக்கு பிறகு இந்திய  —  இலங்கை கூட்டறிக்கையிலும் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
 
இந்த கருத்துக்களை கட்டுரையாளர் எக்ஸ் சமூக ஊடகத்தில் சில தினங்களுக்கு முன்னர் பதிவுசெய்தபோது அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பிரதிபலிப்பை வெளியிட்டிருந்தார்.
 
“ஒற்றையாட்சியின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கத்துக்கும் இடமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு இடம்பெறும் என்பதை கூறுங்கள். அதிகப் பெரும்பான்மையான தமிழர் 13 வது திருத்தத்தை அரசியல் தீர்வாக  ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட அந்த திருத்தம் ஒருபோதும் இருக்க முடியாது. அதைப்  பற்றி பேசுவதை இந்தியா நிறுத்தினால் மிகுந்த மகிழ்ச்சியடையும் ஒருவனாக நான் இருப்பேன்.
 
” இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் தமிழர்களின் சார்பில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமானது. அந்த உடன்படிக்கையில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரை அவர்களின் சார்பில் தலையீடு செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.  ஆனால், இன்றைய சூழ்நிலையில் உடன்படிக்கை பொருத்தமற்றது என்று இந்தியா உணருகின்றது என்றால் அது முற்று முழுதாக வேறுபட்ட ஒரு  விடயம். எவ்வளவு விரைவாக அதை நாம் அறியமுடியுமோ அவ்வளவுக்கு அது நல்லது” என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.
 
இந்த பதிவு 13 வது திருத்தம் பற்றி இந்தியா இனிமேலும் பேசுவதை அவர்  விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. ஆனால்,  சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கான தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச்  சந்தித்த கஜேந்திரகுமார் இது தொடர்பில்  பேசினார். அத்துடன் அரசாங்கம் கொண்டு வரக்கூடிய புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிமுறைக்குள்  தமிழ் மக்களின் அபிலாசைகள்  கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை  இந்தியா உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
கஜேந்திரகுமாரின் இந்த விருப்பத்தையும் கோரிக்கையையும் தமிழர்களில் எவர்தான் எதிர்க்கப்போகிறார்? ஒற்றையாட்சி நீக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான  அரசியல் தீர்வு கிடைக்கும் என்றால் அதை விடவும் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு என்ற இருக்கப்போகிறது? 
 
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா  என்பதையும் வெறுமனே இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கையை மாத்திரம்  விடுப்பதன் மூலம் அதைச் சாதிக்க முடியுமா என்பதையும் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கோரும் தமிழ்க் கட்சிகளிடம் அதை அடைவதற்கான அரசியல் தந்திரோபாயமோ செயற்திட்டமோ இருக்கிறதா? வழிமுறையைப் பற்றி எந்தவிதமான முன்யோசனையும் இன்றி முன்னைய தமிழ்த் தலைவர்கள்  தனிநாட்டுக் கோரிகைையை முன்வைத்ததன் விளைவை அல்லவா இன்று இலங்கை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 13  வது திருத்தத்தைக் கூட இதுகாலவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி அடிப்படையிலான  அரசியல்  தீர்வை நீங்கள்  எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில்  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியபோது கஜேந்திரகுமாரும் அங்கு இருந்தாரோ தெரியவில்லை. 
 
புதிய பாராளுமன்றத்தில்   இருக்கும் வடபகுதி உறுப்பினர்களில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டவராகவும் மிகுந்த விவாதத் திறமையுடன்  காத்திரமான பங்களிப்பைச் செய்யக்கூடிய ஆற்றலையும் அறிவையும் கொண்டவராகவும் விளங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இதுகாலவரையான தங்களது  கோட்பாட்டுப் பிடிவாதமான அரசியல் அணுகுமுறை  மூலமாக  தங்களது குறிக்கோளில் எந்தளவுக்கு முன்னோக்கி நகரக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். 
 
விடுதலை புலிகளின் தலைவர்  பிரபாகரன் 13 வது திருத்தத்தை மாத்திரமல்ல, அதற்கு  பின்னரான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சகல சமாதான முயற்சிகளையும் தீர்வு யோசனைகளையும்  நிராகரிப்பதற்கு  அவர் தரப்பில் “வலுவான காரணம்” இருந்தது. அதாவது ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனது இலக்கை அடையமுடியும் என்று அவர் நம்பினார். பல வருடங்களாக  அரசாங்கப்  படைகளுக்கு சவால் விடுக்கக்கூடியதாக ஆயுதமேந்திய இயக்கம் ஒன்று அவரிடம் இருந்தது. இறுதியில் உள்நாட்டுப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்றது வேறு விடயம். 
 
ஆனால்,  இன்று தமிழ்க் கட்சிகளிடம் என்ன பலம்  இருக்கிறது?   குறைந்தபட்சம் தமிழ் மக்களின் சார்பில் ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்த நிலைப்பாடொன்றை முன்வைப்பதற்கு கூட தமிழ்க் கட்சிகளினால் இயலாமல் இருக்கிறது. தமிழ் மக்களும்  இந்த கட்சிகளிடமிருந்து தூர விலகிக்கொண்டிருக்கிறார்கள்.  
 
ஐக்கியப்பட்டு செயற்படாத காரணத்தினால் தான் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள்  வெறுப்பதாக  அவற்றின் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். அது மாத்திரம் காரணமல்ல. போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளை தமிழ்க்கட்சிகள் கடைப்பிடிக்காமல் வெறுமனே தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது மக்கள் வெறுப்படைந்தார்கள் . 
 
நீண்டகால அரசியல் தீர்வு குறித்து நெடுகவும்  பேசிக்கொண்டிருப்பது சுலபம். ஆனால் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதில் அக்கறை காட்டாமல் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் மக்களிடம் இருந்து அன்னியப்படவேண்டி வரும். தங்களுக்கு அதுவே நேர்ந்தது என்பதை தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொண்டனவோ தெரியவில்லை.
 
இன்று தமிழ் மக்கள் மத்தியில் தங்கள் குரலுக்கு மீண்டும் இடம்தேட வேண்டிய ஒரு பரிதாப நிலையில் தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன. இனப்பிரச்சினை தீர்வு குறித்து எந்தவிதமான வாக்குறுதியையும் வழங்காத தென்னிலங்கை கட்சியொன்றை  ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்கள்  தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கனதியான செய்தியொன்றைக் கூறியிருக்கிறார்கள். 
 
தமிழ் அரசியல்வாதிகளில்
 
 பலர் மக்களிடமிருந்து  தாங்கள்  தனிமைப்பட்டதைப் பற்றி சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள். 
 
அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரனும் சண்முகம் குகதாசனும் அந்த நாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் கிளைகளை திறக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார்கள். வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சியின் எத்தனை கிளைகள் துடிப்பாக இயங்குகின்றன என்பதை அவர்கள் முதலில் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
 
13 வது திருத்தம் போதுமானது என்று யாரும் வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாக பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்த திருத்தத்தை காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை. அந்த திருத்தத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற தென்னிலங்கை சக்திகளை வலுப்படுத்தக்கூடிய நிலைப்பாடுகளை எடுப்பதில் உள்ள ஆபத்தை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொண்டு கற்பனாவாத அரசியல் உலகத்தில் இருந்து தமிழ்க்கட்சிகள் நிஜ உலகிற்கு  இறங்கி வரவேண்டும்.
 
அரசாங்கம் மூன்று வருடங்களில் கொண்டு வரவிருப்பதாக கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாணசபைகள் 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் “அவை”தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்கவேண்டும். தமிழ்கள் வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டை அரசியலமைப்பில் உள்ளடக்கவேண்டும் என்று அரசாங்கத்துக்கு என்ன தேவை? தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட காரணங்களுக்காக வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு இந்தியாவுக்கு என்ன தேவை? 
 
தற்போதைய நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்து செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால் இறுதியில் இலங்கை தமிழ் மக்கள் எதையுமே பெறமுடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கறது.
 
ஈழநாடு



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies