தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது.
மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது.
எனவே தேசிய மக்கள் சக்தியின் சோசலிச பொருளாதார எதிர்பார்ப்புகள் பின்நிலைக்குச் செல்ல சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் முதலீட்டு உள் வருகைக்கான ஆயத்தங்கள் அனைத்துமே முன்னெடுக்கப்படும் நிலை அதிகம் காணப்படுகின்றன. எனவே இவை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பாராட்டுதல்கள், ஒத்துழைப்புக்கள் முதன்மை பெறும் நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு , மனித உரிமை மீறல்கள் தொடர்பான நகர்வுகள் மேற்படி தளங்களில் அடக்கி வாசிக்கப்படும் நிலை தோற்றம் பெற தொடங்கியுள்ளன.
தற்போதைய இலங்கையின் ஆட்சித்தள நகர்வை பார்க்கின்ற போது சகலரும் எதிர்பார்த்த சோசலிச பொருளாதார நகர்வில் இருந்து விலகி முற்று முழுதாக நடைமுறை சார்ந்த பொருளாதார முறைமையை முன்னெடுக்கும் நிலை காணப்படுகிறது. 1970 காலப்பகுதியில் இந்த நாட்டின் பாரம்பரிய இடதுசாரிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த சோசலிச பொருளாதார முன்னெடுப்புகள் பெரும் தோல்வியை வழங்கியவுடன். இவை காரணமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த நிலையும் தோற்றம் பெற்றது. இவர்களின் ஆட்சி 17 வருடங்கள் இலங்கையில் நீடித்தது.
எனவே இலங்கையின் எதிரணியாக காணப்படும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கட்டும் ஏனைய தரப்புகளாக இருக்கட்டும் இவர்களின் செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி நேர்த்தியாக முன்னெடுப்பதால் இவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலையே காணப்படுகிறது.
மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் களத்தில் நின்று செயல்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் மென்மையான முறையில் முன் வைத்திருக்கின்றன. இவர்கள் இது தொடர்பாக கவன ஈர்ப்பு போராட்ட செயற்பாடுகளுக்கு செல்ல தயார் இல்லாத நிலையும் காணப்படுகிறது.
மேலும் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக அனுதினமும் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலை முன்னிலை சோசலிச கட்சி தளத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வாழ்க்கை செலவு சுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. அரிசி விலை தொடர்பாக சர்ச்சை நீண்டு கொண்டே போகின்றது. தேங்காய் உட்பட மரக்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. இது போதாதென்ற நிலையில் சபாநாயகரின் தகுதி தொடர்பான சர்ச்சை மிகப்பெரிய விவாதங்களை தோற்றுவித்துள்ளது. மேலும் இயற்கை அனர்த்தமும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலையும் தொடர் கதையாக மாறி வருகிறது.இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 70 லட்சம் மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் இதையும் காண முடியாத நிலை தொடர்கின்றது.
தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் அதற்கான தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முகாம் அடக்கி வாசிக்கும் நிலையே காணப்படுகிறது. ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலும் அத்தகைய நிலையே காணப்பட்டது. தேசிய மக்கள் கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்தே வருகின்றனர்.
எனவே மாகாண சபைகள் வழமை போல் இயங்கும். அதற்கு எந்த தடையும் வராது. மூன்று வருடங்களுக்கு பின்னர் எம்மால் கொண்டு வரப்படவிருக்கும் புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம் மட்டும் தேசிய மக்கள் சக்தி தளத்தில் வாக்குறுதியாக இன்னும் காணப்படுகிறது. உண்மையில் தென்னிலங்கையில் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் தேசிய பிரச்சனை தீர்வு விடயம் மேல்வரும் போது அதற்கு எதிரான இனவாத போராட்ட நிலைமை சகலதையும் முடிவுக்கு கொண்டு வரும் நிலை வரலாற்று உண்மையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தம் , டட்லி – செல்வா ஒப்பந்தம் , சந்திரிகாவின் புதிய அரசியல் யாப்பு முயற்சி இதற்கு சிறந்த உதாரணங்களாகும். எனவே தான் தேசிய மக்கள் கட்சியினர் இந்த விஷப் பரீட்சைக்குள் சிக்காமல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய பிரச்சனையை கைவிட்டுள்ளனர் என்ற பகல் கனவில் மிதக்கின்றனர்.
டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் போரின் போது தமது உறவுகளை பறிகொடுத்தவர்கள் காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எப்படி மாவீரர்களை நினைவுகூர்ந்தனரோ அதேபோன்று காணாமல் போனவர்களுக்கு அரசே பதில் கூறு எனக் கேட்டு காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். தென்னிலங்கை அரசு சார்பு ஊடகங்கள் இப் போராட்டங்கள் தொடர்பில் எத்தகைய செய்தியையும் வெளிப்படுத்தாமல் இருந்தமையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்யும் பே ச்சுவார்த்தைகள் செயலுருவம் பெற்று வருவது சற்று ஆறுதல் தரும் விடயமாகும். இது தேர்தல் தொடர்பில் மட்டும் உருவாகாமல் முழு தமிழ் தேசத்துக்குமான அனைத்து விடயங்களிலும் சம்பந்தப்பட்டதாக அமைய வேண்டும். தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தமது அணி வாக்கு வங்கியின் பலத்தைக் கொண்டே கட்சிகளின் இணைப்பை பற்றி கவனம் கொள்ளும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவரின் கருத்தை பார்க்கின்ற போது கொள்கை பலம் தொடர்பாக இவர்கள் அக்கறை கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதிலை முன் வைக்கப் போகின்றார்கள்.
எனவே தேசிய மக்கள் சக்தி எமக்கு என்ன தரப் போகின்றது என்பதை தவிர்த்து எமது தேசத்திற்கு இன்றைய காலகட்டத்தில் எது தேவை எமது தேசம் எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அவை தொடர்பான போராட்ட செயற்பாடுகள் முன்னிலை பெற வேண்டும். தமிழ் தேசிய பிரச்சனையை தமிழ் மக்கள் கைவிட்டுள்ளனர், இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை அவர்கள் வாக்குகளை வழங்கினர் என்ற தென்னிலங்கை தேசிய மக்கள் சக்தியின் முகாமின் நம்பிக்கைக்கு தமிழர் தேசம் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் பதிலை வழங்கும் நிலை வலிமை பெற வேண்டும்.