இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
28 Nov,2024
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷ கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மௌனம் சாதிக்கிறது. ராஜபக்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை.
தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை புலிகளின் தலைவர் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.
இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.