ஜோசப் பரராஜசிங்கத்தை அழித்தவர்களை தூக்கி எறிந்த மட்டக்களப்பு மக்கள்
15 Nov,2024
தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் எவ்வித மாற்றமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியில்(ITAK) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் (Shanakiyan ) தெரிவித்துள்ளார்.
தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் களுவாஞ்சிகுடியில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது என்னுடைய வெற்றி அல்ல ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களுடைய வெற்றியாகும்.
நாடு முழுவதிலும் திசைகாட்டி சின்னத்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் வாக்கு அதிகமாக இருக்கும் பொழுது, மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை மட்டக்களப்பு வாழ் மக்கள் எனக்கு தந்திருக்கிறார்கள் வடக்கு கிழக்கு முழுவதற்கும் இது ஒரு செய்தியாகும்.
வடக்கு - கிழக்கிலே உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்த கட்சி இலங்கை தமிழரசி கட்சி மாத்திரம்தான்.
மூன்றாவது அதிகூடிய ஆசனங்கள்
எங்களுடைய கட்சி தற்பொழுதும் இலங்கையிலேயே தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியாகும். இலங்கையிலேயே மூன்றாவது அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமாகும்.
இந்நிலையில், தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் மாற்றமில்லை.
இனி வருங்காலத்தில் தமிழரசு கட்சி மாத்திரம்தான் இந்த மாவட்டத்திலேயே மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கப் போகின்றோம்.
அந்த வகையிலே அனைவரையும் இணைத்துக் கொண்டுதான் நாங்கள் பயணிப்போம். நாங்கள் எவருக்கும் எதிரானவர்கள் அல்ல.
நாங்கள் இந்த மாவட்டத்திற்கும் இந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.