இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் மதியம் 4:00 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாலை 7 மணியளவில் நேரடி வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி,
தேசிய மக்கள் சக்தி (NPP) 57,072
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 6, 492
புதிய ஜனநாயக முன்னனி (NDF) 3,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,877 வாக்குகளை பெற்றுள்ளன
நாடு முழுவதும் 60% முதல் 65% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் தொகுதி ரீதியில் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட ரீதியான முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாளை (வெள்ளிக்கிழமை, நவம்பர் 15) மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
இந்தத் தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.
இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.
இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.
வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
முதலில் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படும். அதற்குப் பிறகு, பிற வாக்கு சீட்டுக்களை எண்ணும் பணிகள் துவங்கும். அடுத்த நாள் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
சமீப காலங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இலங்கையின் பிரதான கட்சிகளைத் தவிர்த்து, மற்றொரு கட்சியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களத்தில் நிற்கிறது.
எனினும், தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்கக்கூடாது என்ற நோக்கில், பிரதான எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன