வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது, பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!
04 Nov,2024
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இதனை தெரிவித்தார். 'வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம்
முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப்பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசணையுடன் முப்படையும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
இது தொடர்பில் இராணுப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமையவே வீதி திறக்கப்பட்டது.
இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் சென்றதால் மூடப்பட்டிருந்தது. தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை. எனவே வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக கடந்த முதலாம் திகதி (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது.