விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதாக குற்றச்சாட்டு
13 Oct,2024
:
தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவரும் தாய் ஒருவரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை (Ampara) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, திருக்கோவில் காவல் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு கடந்த 8ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அம்பாறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாாறு அழைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் (CTID) தலைமையகத்திற்கு கடற்படை மற்றும் இராணுவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவினர்களைக் கண்டறிய ஜெனீவா (Geneva) மனித உரிமைகள் பேரவை அமர்வு உட்பட உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தாம் மேற்கொண்ட போராட்டங்களின் புகைப்படங்களும் தன்னிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரியிடம் இருந்த கோவையில் காணப்பட்டதாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.