இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நிய மனம் - பின்னணி என்ன?
29 Sep,2024
இலங்கை நாட்டின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியவை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். 2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் நடத்தியதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பின்னர் பிரதமராக தினேஷ் குணவர்தனவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஒன்பதாவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி (ஜேவிபி)யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 38 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்க (56) அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு ஏற்ப பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.
இந்நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய (54) இடைக்கால பிரதமராக பதவியேற்றார். இலங்கையின் 16வது பிரதமரான அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்துறை, சுகாதாரம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணிஅமரசூரிய மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட மூவரடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
இலங்கை அதிபர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஹரிணி அமரசூரிய
சிரிமாவோ பண்டார நாயகே 20.07.1960-ல் முதல் இலங்கை பெண் பிரதமராக மட்டுமின்றி, உலகின் முதல் பெண் பிரதமரான பெருமையும் அவருக்கு உண்டு. சிரிமாவோ பண்டார நாயகேவை தொடர்ந்து 1994ம் ஆண்டு அவரது மகள் சந்திரிக்கா குமாரதுங்க சிறிது காலம் பிரதமர் பதவியிலிருந்து அதிபர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதிபரானார். சந்திரிக்கா குமாரதுங்க அதிபர் ஆனதை தொடர்ந்து அவரது தாயார் சிரிமாவோ பண்டாரநாயகே பிரதமராக 1994 முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமர் பதவியில் இருந்தார்.
சிரிமாவோ பண்டாரநாயகேவிற்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து ஹரிணி அமரசூரிய பெண் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஹரிணி அமரசூரிய கல்வியாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல், 2020-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அதிபர் தேர்தல் ஆகியவற்றில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார். அப்போதே ஹரிணி அமரசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அதிபர் தேர்தலில் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.