மீண்டும் கைகோர்க்கும் ரணில் - சஜித்: நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய அடுத்த நகர்வு
24 Sep,2024
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
அதன் போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பொதுத் தளத்தை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு குழுக்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் தேர்தலில் கூட்டணியொன்றை முன்வைக்க இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (என்.பி.பி) எதிராக ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை முன்வைக்க ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.