தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் -
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அம்மக்களுக்குக் கூறவேண்டும். அதேபோன்று தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என கருதினால், அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்றுமுடிந்த நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை மனதிலிருத்தி தமது விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
70 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டிவருவதைப் பாராட்டுவதுடன், அதற்குத் தலைவணங்குகின்றோம்.
நாம் இம்முறை ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களிடம் வலியுறுத்தியிருந்தோம். அதற்கமைய வட, கிழக்கு மாகாணங்களில் வழமையான சுமார் 80 சதவீதமாகப் பதிவாகும் வாக்களிப்பு இம்முறை கணிசமானளவினால் குறைவடைந்திருக்கின்றது.
எனவே வட, கிழக்கில் சுமார் 30 - 35 சதவீதமான மக்கள் தமது எதிர்ப்பை வலுவாகக் காண்பித்திருக்கின்றார்கள். அதேபோன்று இம்முறை தேர்தலில் தமிழ்த்தேசிய கோஷத்தை வலியுறுத்தி களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளருக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கிறபோது, வட, கிழக்கில் பெரும்பான்மை மக்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகவே நின்றிருக்கிறார்கள்.
அதேபோன்று தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்திய தமிழரசுக்கட்சியின் ஆதரவைப்பெற்ற சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளை தென்னிலங்கை சிங்கள வேட்பாளருக்கு அளிக்கப்ப்ட்ட வாக்குகளாகக் கருதமுடியாது.
எனவே இவ்வனைத்தையும் சேர்த்தால் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசியத்துக்கான அறுதிப்பெரும்பான்மை காண்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை இந்த ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர், இம்முறை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார் எனில், இதன்மூலம் தென்னிலங்கை மக்களும் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எப்போதும் போல வெறுங்கனவாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
எனவே இவற்றிலிருந்து வேறுபட்டு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமாயின், தெற்கில் வாழும் மக்களுக்கு அநுரகுமார திஸாநாயக்க உண்மையைக் கூறவேண்டும். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை அவர் அம்மக்களுக்குக் கூறவேண்டும்.
மாறாக தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என அவர் கருதினால் அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளங்கிக்கொள்ளவேண்டும்.
அதன்பிரகாரம் அவர் முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கிய பாதையில் இறங்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பாடுமாயின், நாம் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.