தந்தையின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் நுழைந்த சஜித் பிரேமதாஸ, இலங்கை அரசியலின் ஏற்ற இறக்கங்களில் 30 ஆண்டுகளாகப் பயணம் செய்தவர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்தவர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த சஜித், இந்த முறை கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கி இருந்தாலும், அவரால் வெற்றிபெற முடியவில்லை.
"திஸாநாயக்க ஜேவிபிக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கக்கூடாது. இலங்கையின் பாரம்பரிய, பழைய அரசியல் கட்சிகள் மீது, பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களிடையே ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில், அநுர குமார ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது. ஆகையால் அவருக்கு வாக்களிக்கிறார்கள்.
அதேநேரம், சஜித்தை பொறுத்தவரை, அவர் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியே வந்து, ஒரு புதிய கட்சியை உருவாக்கியிருந்தாலும், பழைய ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியே வந்தவர்கள்தான் இந்தப் புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தக் கட்சியும் ஒரு பழைய அரசியல் சக்தியாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
ஆகையால், மக்கள் அவரைப் பெரியளவில் தேர்வு செய்யவில்லை,” என்கிறார் வீரகத்தி தனபாலசிங்கம்.
பிற்காலத்தில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசின் தலைமைக் கொறடாவாகவும் இருந்த காலத்தில், அவருக்கும் ஹேமா விக்ரமதுங்கேவுக்கும் 1967 செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார் சஜித் பிரேமதாஸ.
செயின்ட் தாமஸ் பிரிபரேட்டரி பள்ளி, கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரி, லண்டனில் உள்ள மில் ஹில் ஸ்கூல் ஆகியவற்றில் படித்தார் சஜித். இவருக்குப் பத்து வயதாக இருக்கும்போதே, இவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ, இலங்கையின் பிரதமராகிவிட்டார்.
இருந்தாலும் சஜித்தின் படிப்பு தொடர்ந்தது. லண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் லண்டன் பல்கலைக் கழகத்திலும் படித்த சஜித், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பொது மேலாண்மையில் முதுகலை படிப்பில் சேர்ந்தார்.
இதற்கிடையில் ரணசிங்க பிரேமதாஸ இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே, 1993இல் ஒரு தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார் பிரேமதாஸ. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து சஜித் நாடு திரும்பினார்.
தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபட விரும்பிய சஜித், 1994இல் தனது தந்தை இருந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சிறிய பொறுப்புதான் என்றாலும் சின்னச் சின்ன நிகழ்சிகளை நடத்தி விறுவிறுப்புடன் செயல்பட்டார் சஜித். அந்த மாவட்டத்தில் தருண சவிய என்ற இளைஞர் இயக்கத்தையும் வறுமை ஒழிப்பிற்காக சன சுவய போன்ற அமைப்புகளையும் கட்டியெழுப்பினார்.
கடந்த 2000வது ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பு சஜித்திற்கு அளிக்கப்பட்டது. அதில் பெரும் வெற்றி பெற்றார் சஜித். அதற்குப் பிறகு, 2001, 2004, 2010, 2015 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
கடந்த 2001இல் ரணில் விக்ரமசிங்க பிரதமரானபோது, அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வானார் சஜித்.
கடந்த 2015இல் மைத்திரி பால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தேர்வானதும், சஜித் வீட்டு வசதி மற்றும் சமிர்தி திட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கீழ் மத்தியதர மக்களுக்காகப் பல வீட்டு வசதித் திட்டங்களை முன்னெடுத்தார் சஜித்.
கடந்த 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக பொது வேட்பாளர்களை ஆதரித்தது. 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், விரைவிலேயே ரணிலுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது 2018இல் ஒரு மிகப்பெரிய அரசியல் சாஸன சிக்கலுக்கு இட்டுச் சென்றது. அந்தப் பிரச்சனை பிறகு தீர்க்கப்பட்டாலும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது தவறு எனக் கருதியது ஐக்கிய தேசியக் கட்சி. இதனால், 2019இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், மங்கள சமரவீர, ஹரின் ஃபெர்னாண்டோ போன்றவர்கள் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டும் எனக் கூறினர். சில நாட்கள் இழுபறிக்குப் பிறகு, சஜித்தை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்க ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டார். அந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு 41 சதவீத வாக்குகளைப் பெற்றார் சஜித்.
விரைவிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் சஜித். இந்நிலையில் அவரை பிரதமர் பதவிக்கான போட்டியில் நிறுத்த விரும்பியது ஐக்கிய தேசியக் கட்சி. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாகி ஜன பலவெகய என்ற முன்னணியை உருவாக்கினார் சஜித். இந்த முன்னணிக்கு அன்னப் பறவையின் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட ரணில் ஒப்புக்கொண்டார். ஆனால், இறுதி நேரத்தில் சஜித் ஆதரவாளர்கள், வேறு சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால், கட்சி பிளவடைந்தது.
அந்தத் தேர்தலில் 54 இடங்களைப் பிடித்த சமாகி ஜன பலவெகயவின் சார்பில் சஜித் எதிர்க்கட்சித் தலைவரானார். 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த முன்னணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட களத்தில் இறங்கினார் சஜித்.
"தந்தையின் நிழலில் அரசியலுக்கு வந்தவர் சஜித். அவருடைய பேச்சுகள், பேட்டிகள் ஆகியவை அவர் அந்த நிழலை விட்டு வெளியேறவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. 2022 நெருக்கடியின்போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்தார். பதவியை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டுக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை" என்கிறார் பிபிசி சிங்களப் பிரிவின் ஆசிரியரான இஷாரா தனசேகர.
இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக அவருடைய செயல்பாடுகள் கவனிக்கத் தக்கவையாகவே இருந்தன. பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை, அவர் உலகமயமாக்கலுடன், உள்ளூர் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறார்.
"பொருளாதாரத்தைச் சீர்திருத்தி, அதைப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டதாகவும் மாற்ற வேண்டும். இது மக்களிடையே செல்வத்தை உருவாக்கும். பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட மானியங்களுடன் கூடிய வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் பொருளாதார நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்" என அவருடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழர் பிரச்சனைக்கான தீர்வைப் பொறுத்தவரை, 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதையே முன்வைக்கிறார் சஜித்.
கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய அவர், தான் ஜனாதிபதியானால் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவத்தார். 'சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் புலிகளைவிட சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பை உருவாக்கவே இது உதவும்' என பிவிதுரு ஹெல உருமய போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டியபோதும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை.
இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பல கட்சிகள் இவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போதும், முதல் விருப்ப வாக்குகளில் இந்தப் பகுதிகளில் சஜித்திற்கு கூடுதலான ஆதரவு இருப்பது தெளிவாகவே தெரிந்தது.
இந்தியாவை பொறுத்தவரை, எப்போதும் இந்தியாவை சந்தேகத்துடன் பார்க்கும் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்கவைவிட, ஆரம்பத்திலிருந்தே சீனாவைவிட இந்தியாவை நெருக்கமாகக் கருதும் சஜித்தை கூடுதலாக விரும்பக்கூடும்.
இந்த நிலையில், தோல்வி அடைந்திருந்தாலும், சஜித்திற்கு இதுவொரு முக்கியமான தேர்தல்.