வாக்குப்பதிவு முடிந்தவுடன் விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கை; இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே: 3வது இடத்தில் ரணில்; 5ம் இடத்தில் ராஜபக்சேவின் மகன்
இலங்கையில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தவுடன் விடியவிடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் அவரே புதிய அதிபராகிறார். 3ம் இடத்துக்கு தற்போதைய அதிபர் ரணில் தள்ளப்பட்டார். 5ம் இடத்தில் ராஜபக்சேவின் மகன் உள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 நவம்பரில் நடைபெற்ற 8வது அதிபர் தேர்தலில் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து 2022 மே 9ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதே ஆண்டு ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சிறைபிடித்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பியோடினார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கேவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர். இந்நிலையில், இலங்கையின் 9வது அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. விருப்ப வாக்கு அடிப்படையில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து 3 பேரை தேர்வு செய்தனர். அதாவது, ஒரு வாக்காளர் தனது விருப்பத்தின் அடிப்படையில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்தனர். இதில் வாக்காளர் குறிப்பிடும் முதல் வேட்பாளர் முன்னுரிமையை பெற்றவர் ஆகிறார்.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒன்றாம் எண் வாக்குகளை 50 சதவீதத்துக்கு மேல் பெற்ற வேட்பாளர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே, ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜேவிபி கூட்டணியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, லங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நமல் ராஜபக்சே ஆகிய 4 பேர் இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் நேற்றிரவு 7 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதன்பிறகு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு 12 மணிமுதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குப் பதிவின் போது உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுமார் 8,000 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தபால் வாக்குகளின் முடிவில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுராகுமார திசநாயகே முன்னிலை வகித்தார். அவர் காலை 7 மணி நிலவரப்படி 53% வாக்குகளைப் பெற்றார். முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச 22% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க 18% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
காலை 9 மணி நிலவரபடி அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 12,68,357 வாக்குகள் (44.90 சதவீதம்), சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 8,30,019 வாக்குகள் (29.38 சதவீதம்), ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 4,50,022 வாக்குகள் (15.93 சதவீதம்), அரிய நேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 75,726 வாக்குகள் (3.64 சதவீதம்), நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 77,932 வாக்குகள் (2.76 சதவீதம்), திலகர் (தமிழ் வேட்பாளர்) – 328 வாக்குகள் (0.02 சதவீதம்) என்ற எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றனர். தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தாலும் கூட, அவர் 50% வாக்குகளை பெறவில்லை; 45% வாக்குகளை மட்டுமே பெற்று முன்னிலை வகிக்கிறார். இறுதி சுற்றுவரை அவர் 50 சதவீதத்தை தாண்டவில்லை. எனவே இலங்கையின் அதிபர் தேர்தல் முடிவில், எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறவில்லை என்றால், முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளை பெறுபவர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார் என்பதால், மேற்கண்ட விதிகளின்படி அனுரா குமார திசநாயகேவே (56) இலங்கையின் 9வது அதிபராக தேர்வு ெசய்யப்படுவார். எப்படியாகிலும் இன்று மாலைக்குள் அதிகாரபூர்வ அதிபர் யார்? என்பது அறிவிக்கப்படும். இருந்தும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், சில இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி சித்தாந்தம் கொண்ட அனுரா குமார திசநாயகே அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இவர் சீன ஆதரவு கொள்கைகளை ஆதரிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதிபராகும் கூலி தொழிலாளியின் மகன்
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர் முன்னிலை வகித்து வருகிறார். இவரை இலங்கையில் ‘ஏகேடி’ என்று அழைக்கின்றனர். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தலைவரான இவர், கடந்த 2019ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். மார்க்சிஸ்ட் கட்சியான ஜே.வி.பி. கட்சியில் மாணவ பருவத்தில் இருந்தே ஈடுபாடு கொண்ட இவர், 2000ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கடந்த 2004 முதல் 2005 வரை வேளாண் அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாகவும் இருந்தார். கடந்த 1968ம் ஆண்டு இலங்கையின் அனுராதபுரம் மாவட்டம் தம்புதேகம கிராமத்தில் பிறந்த அவரது தந்தை சாதாரண கூலித்தொழிலாளி ஆவார். இலங்கையில் கடந்த சில ஆண்டுக்கு முன் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு முக்கியமான காரணமாக இருந்த இவர், ராஜபக்சே குடும்பத்தையே அரசியலில் இருந்து வெளியேற்றியவர் ஆவார். தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் புதிய சகாப்தத்தை படைத்து அதிபராக பதவி ஏற்க உள்ளார்.