தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு 712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகலாம் - தேர்தல் ஆணைக்குழு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முதலில் தபால் மூல வாக்கு முடிவுகளா அல்லது பதிவு வாக்கு முடிவுகளா வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானதுடன் 4 மணிளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் வரமுன்பே... அனுரவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக, கேக் தயார் நிலையில் உள்ளது.
எந்த வெதுப்பகம் என்று தெரிந்தால் வேறு யாராவது ஜனாதிபதியாக வந்தால் மூடுவிழா கொண்டாடடாமில்ல.