ஸ்ட்ராட்ஃபோர்ட் தொகுதியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்டஉமா குமரன்!
13 Jul,2024
பிரிட்டன் பொதுத் தேர்தலில், ஸ்ட்ராட்ஃபோர்ட் தொகுதியில் வெற்றி பெற்ற உமா குமரன், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வான முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் தற்போதைய பிரதமர் ரிஷி ஷுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் சிறப்பம்சமாக இந்தியர்கள் கணிசமாக போட்டியிட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் 8 பேர் போட்டியிட்டுள்ளனர். அதன்படி உமா குமரன், கவின் ஹரன், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன், கமலா குகன், டெவினா பால், மயூரன் செந்தில்நாதன் ஆகிய 8 தமிழர்கள் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டனர்.
இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டுள்ளன. இந்நிலையில் ஸ்ட்ராட்ஃபோர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண்ணாண உமா குமரன், 19,145 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமாகுமரனின் பெற்றோர், அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
அங்கேயே பிறந்து வளர்ந்த உமா குமரன், அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, அரசியல் அரங்கிற்குள் வந்தார். தற்போதைய தேர்தல் வெற்றி மூலம், பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது வெற்றியை பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.