தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த இரா .சம்பந்தன் , தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினரட, தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இரா .சம்பந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “தேர்தல் அரசியலில் ஈடுபடும் வாய்ப்புகள் பல தடவைகள் தந்தை செல்வா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றபோதும் அவற்றைத் தவிர்த்து வந்த அதேநேரம், தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட அறவழிப் போராட்டங்கள் பலவற்றிலும் முன்னின்று போராடியிருந்தார்.
1961 ஆம் ஆண்டில் எனது தந்தையார் உள்ளிட்ட பல தமிழரசுக்கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன், தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திலேயே சம்பந்தன் அவர்களுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு முதல் முதலாக எனக்கு கிடைத்தது.
எனது தந்தையாருடன் அவருக்கிருந்த பலமான நட்புறவு காரணமாக எனக்கும் அவருக்குமான உறவு அன்றைய நாள் தொட்டு சிறப்பானதாகவே அமைந்திருந்தது. ஆயுதப் போராட்ட அமைப்புகளாக எமது போராட்டப் பாதை மாறுபட்ட தடத்தில் சென்றபோதும் கூட அவருடனான நட்புறவு என்றும் தொடர்ந்திருந்தது.
சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் | Members Of Tamil Pm Condole Sambandhan S Death
1985 ஆம் ஆண்டு பூட்டான் தேசத்து திம்பு நகரில் தமிழ் அமைப்புகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையே நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தையின் போது, இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களில் வெளிப்படுத்த வேண்டிய ஆளுமை நிறைந்த அணுகுமுறைகள் பற்றி அவரிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
அத்தகைய அவரது திறமை மற்றும் பண்பு, பின்வந்த காலங்களில், குறிப்பாக யுத்தத்தின் பின்னர் தமிழ்ச் சமூகத்தின் குரலாக, தென்னிலங்கை சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர் அங்கீகாரம் பெற காரணமாயின. தான் வரிந்து கொண்ட கொள்கைக்காக, எதிரிகளும் நிராகரிக்க முடியாத வகையில், ஆணித்தரமாக ஆளுமை நிறைந்த வகையில் வாதங்களை முன்வைப்பதற்கு அவர் என்றைக்கும் தயக்கம் காட்டியதில்லை.
சக நாடாளுமன்ற உறுப்பினராக பல தடவைகளில் நான் அதனை கண்டுணர்ந்திருக்கிறேன்.” என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து, சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த மிதவாத தலைவர் சம்பந்தன் ஐயா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"விடுதலை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களை சம பார்வையுடன் நோக்கிய தலைவர் சம்பந்தன் ஐயா.
நீண்ட அரசியல் வரலாற்றனுபவமுள்ள இவர், தமிழ் தேசிய அரசியலை மிக சாதுர்யமாக வழிநடத்தினார். ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களில் கூட தமிழ்த்தேசிய அரசியல் விலை போகாமல் பாதுகாக்கப்பட்டது.
தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது. ஒரே வாழிடத்தில் ஒரே மொழி பேசுவோராக வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்களை, சம பார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான்.
தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாது என்பதற்காக முஸ்லிம் தலைமைகளுடன் நல்லுறவை பேணி வந்தார்” என பதியுதீன் கூறியுள்ளார்.