இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் இயற்கை எய்தினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல்!
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.
அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார்.
அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.