ஜெனிவாவில் கடந்த 18ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 56ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. ஜூலை 12ஆம் திகதி வரை இந்தக் கூட்டத்தொடர் நீடிக்கப் போகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டத்தொடர் முக்கியமானதல்ல. ஏனென்றால் இதில், இலங்கை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படப் போவதில்லை. இலங்கை பதிலளிக்கவும் தேவையில்லை.
அடுத்த கூட்டத்தொடரில் தான், அதாவது 57 ஆவது அமர்வில் தான், இலங்கை தொடர்பான முக்கியமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கையை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்பதா என்பதை தீர்மானிக்க போகின்ற கூட்டத் தொடராகவும் அது இருக்கும்.
தற்போது நடந்து வரும் 56ஆவது கூட்டத்தொடரில் இரண்டாவது நாளான கடந்த 19ஆஆம் திகதி, இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளின் சார்பில், ஜெனிவாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரிட்டா பிரெஞ்ச் (Rita French) , அறிக்கை ஒன்றை வாசித்திருந்தார்.
அந்த அறிக்கையில், இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின், அண்மைய அறிக்கைக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விடுபடுவதை எடுத்துக் காட்டுவதாக சுட்டிக்காட்டியதுடன், வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது பரிந்துரைகளை செயற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த மே 17ஆம் திகதி, அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலுக்கு முதல் நாள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அது வழக்கத்துக்கு மாறான ஒன்று. ஆனால் காலத்தின் தேவை கருதி அதனை வெளிப்படுத்தியிருந்தார். அந்த அறிக்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதற்கு , அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு பொறுப்பானவர்களை பொறுப்புகூற வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதில் அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆயுத மோதல்கள் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், பல தசாப்தங்களாக பலவந்தமாக காணாமல் போதல்களின் நீடிக்கின்ற போதும், இந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அதிகாரிகள் இன்னமும் தவறி வருகின்றனர். என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை பெரிதும் சினத்துக்கு உள்ளாக்கியது. வழக்கமாக இவ்வாறான அறிக்கைகள் வெளியாகி, சில நாட்களின் பின்னர் தான் பதில் வெளியிடப்படும்.
ஆனால் உடனடியாகவே வெளி அமைச்சர் அலி சப்ரி இந்த அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இந்த அறிக்கையை வெளியிட யார் அதிகாரம் அளித்தது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியிருந்தார்.
இது திட்டமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல இடம்பெற்ற காலகட்டத்தில் இந்த அறிக்கை வெளியானது தான், அரசாங்கத்தை அதிகம் சீற்றத்துக்குள்ளாக்கியது.
அதே சீற்றம், பாதிக்கப்பட்ட மக்களிடம் பல தசாப்தங்களாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்கவில்லை.
இப்போதும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் சரியாக உருவாக்கவில்லை.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அந்த ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கை உருவாக்கப்படவில்லை.
கடந்த கால தவறுகள் காரணமாக அரசாங்கம் அமைக்கும் எந்தவொரு ஆணைக்குழுவின் மீது அல்லது விசாரணை குழுவின் மீது நம்பிக்கையை வைக்கக்கூடிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் இல்லை.
இந்த உண்மையை அரசாங்கம் புரிந்து கொள்வதாகவும் தெரியவில்லை.
பொறுப்புக்கூறல் விவகாரத்தை நியாயமாக , நீதியாக அணுக வேண்டும் என்றோ, தீர்க்க வேண்டும் என்றோ கருதவில்லை. இந்தப் பிரச்சினையை எப்படியாவது முடித்து விட்டால் சரி என்ற கோணத்திலேயே செயற்படுகிறது.
அதேவேளை, பொறுப்புக்கூறல் விவகாரங்களை அணுகும் போது, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவது என்ற பெயரில் தமது படையினரோ அல்லது தமது தரப்பில் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதையோ விரும்பவில்லை.
அவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றிக் கொண்டு இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முற்படுகிறது.
ஏற்கனவே இலங்கையில் தண்டனை விலக்கு என்பது மோசமான முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
இதுவே கடந்த கால குற்றங்களுக்கு மாத்திரமன்றி நிகழ்கால மற்றும் எதிர்கால குற்றங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மீளநிகழாமை என்பது பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கு செயற்பாடுகளில் முக்கியமானது. மீளநிகழாமை உறுதிப்படுத்தப்பட்டால் தான் எதிர்காலத்தில் இது போன்ற அநீதிகள், அட்டூழியங்கள் , படுகொலைகள், இன அழிப்பு என்பனவற்றில் இருந்து தமிழர்களால் பாதுகாப்புப் பெறமுடியும்.
ஆனால் அரசாங்கம் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு தயாராக இல்லை. அதனை உறுதிப்படுத்துவதானால் தண்டனை விலக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.
தண்டனை விலக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமானால், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை சர்வதேச அறிக்கைகள் ஒவ்வொரு முறை வலியுறுத்தினாலும் அரசாங்கம் அதனை கண்டு கொள்வதில்லை.
ஏனென்றால் அரச இயந்திரத்தின் தூண்டுதலின் பேரில் தான்- அதன் பாதுகாப்பு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் எல்லா தவறுகளும் இழைக்கப்பட்டன.
தவறுகளுக்கு தண்டனைகளை வழங்கும் போது, தாங்களும் குற்றவாளிகளாகும் நிலை ஏற்படும் என்பதாலும், தாங்களே சிங்கள பௌத்த பாதுகாவலர்கள் என்று காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், தங்களின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு விடும் என்பதாலும் – நியாயமான பொறுப்பு க்கூறல் முயற்சிகளை நிராகரித்து வந்திருக்கிறார்கள்.
இப்போது இணைத்தலைமை நாடுகள் மீண்டும் மீண்டும் பொறுப்புக்கூறலையும் நம்பகமான அதற்கான கட்டமைப்பையும் வலியுறுத்தி இருக்கின்றன.
சுதந்திரமான- வெளிப்படையான- பக்க சார்பற்ற -உள்ளடங்கிய நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று அனுசரணை நாடுகள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன.
இந்த அறிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. குறிப்பாக சாட்சியங்கள் சேகரிக்கும் பொறிமுறையை ஏற்க முடியாது என்றும், அது அவசியமற்றது என்றும் ஜெனிவாவில் கூறியிருக்கிறது.
நியாயமான நம்பகமான பக்கச் சார்பற்ற ஒரு நிலை மாறுகால நீதிப் பொறிமுறைக்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இத்தகைய நிலையில் இலங்கை அரசாங்கம் எவ்வாறு அனுசரணை நாடுகளுடனும் ஜெனிவாவுடன் இணங்கிப் போகும் என்று எதிர்பார்க்க முடியும்?