இன அழிப்பின் நினைவழியாத நாள்.. ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
18 May,2024
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர்.
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம். எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.