இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் செயற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச கருத்தரங்கத்திற்கான பிரதம அதிதி உரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பிரதம நீதியரசர் விடயத்தில் ஒரு தவறிழைக்கப்பட்டது.
முன்பு சிரேஷ்ட நீதியரசராக உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகலிங்கம் இருந்தார். அவர் அப்போதைய ஆளுநர் நாயகம் விடுமுறையில் சென்ற போது அவர் சார்பில் பதில் ஆளுநர் நாயகமாக (Governor General) பதவி ஏற்றவர்.
இந்நிலையில், நீதியரசர் நாகலிங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய பிரதம நீதியரசர் பதவி அப்போது சட்டத்துறைத் தலைமையதிபதியாக (Attorney General) இருந்த எச்.எச்.பஸ்நாயக என்பவருக்கு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து சட்டத்துறைத் தலைமையதிபதிகளை பிரதம நீதியரசராக நியமிப்பதும் அந்த திணைக்களத்தில் உயர் பதவிகளில் உள்ளோரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு நியமிப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது.
அதேவேளை, நீதியரசர் துரைராஜாவும் குறித்த திணைக்களத்தில் இருந்தே சிரேஷ்ட நீதிமன்றங்களுக்கு நியமனம் பெற்றவர்.அந்தத் திணைக்களத்தில் வேலை செய்பவர்கள் கடின உழைப்பாளர்கள். அவர்களின் தரத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என் மகன் அந்த திணைக்களத்திலேயே உயர் பதவியில் இருக்கின்றார்.
ஆனால், தமது தொழில் வாழ்க்கை பூராகவும் அரசாங்கம் சார்பில் வழக்குகள் பேசிக் கொண்டிருந்த இவர்களை திடீரென்று மக்கள் சார்பில் நீதிபதிகளாக நியமிப்பது அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்புக்களை அவர்களிடம் இருந்து கொண்டு வராதா என்ற கேள்வி எழுகின்றது.
பலர் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டது என்னவென்றால் நீதியரசர் நாகலிங்கத்தை விடுத்து சட்டத்துறைத் தலைமை அதிபதியை பிரதம நீதியரசர் பதவிக்கு அப்போது நியமித்தமை ஒரு பௌத்த பெரும்பான்மையினத்தவரை அப் பதவியில் இருத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்தினாலேயே என்பதாகும்.
அது மாத்திரமன்றி, என் காலத்திலும் இது தான் நடந்தது. எனக்கு ஐந்து வருடங்கள் கனிஷ்டரான சட்டத்துறைத் தலைமையதிபதியான பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் வெற்றிடம் வந்த போது நேரடியாக நியமனம் பெற்றார்.
இருப்பினும், நீதித்துறையில் சட்டத் துறைத் திணைக்கள வழக்கறிஞர்களையோ தனியார் வழக்கறிஞர்களையோ ஒரு குறிப்பிட்ட கால தேர்ச்சியின் பின்னர் நீதிபதிகளாக்குவதே உசிதம் என்று எனக்குப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், இன்று இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அதற்காக நீதித்துறை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அரசாங்கத்துக்காக உழைத்தவர்களை நேரடியாக நீதித்துறைக்குள் உள்நுழைப்பது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே வெளிக் கொண்டு வருகின்றேன் ” என தெரிவித்துள்ளார்.