திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர்.
இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.
சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது.
பேரினவாத ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சக்திகள் பேராதரவோடு 2009 இல் இனப்படுகொலையை அரங்கேற்றி கொண்டிருக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரியோர் முதல் சிறுவர் வரை சதை பிண்டங்களாக இரத்த வெள்ளத்திலும் கொல்லப்பட்டும் காயங்களோடும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பக்கம் மக்கள் பட்டினியோடு வெறும் உப்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்த பேரவலத்தை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது.
இவ் வரலாற்று பேரவலத்தினை நினைவு கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும் கடந்த 15 வருட காலமாக தமிழர் தாயகம் எங்கும் முடிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கஞ்சி பகிர்வதோடு மே 18ஆம் திகதி நினைவேந்தல் நடத்தப்படுகின்றது.
உப்பு கஞ்சி மக்களின் நீதிக்கான குரலின் அடையாளமும், ஆயுதமும் ஆகும். இதற்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் நீதியை மடக்கி தம் பக்கம் சாய்ப்பதும் தமிழர்களின் நீதியின் ஆயுதமான கஞ்சியை தட்டிப்பறித்து நீதி குரலை அடக்க நினைப்பது அராஜகமாகும். சம்பூர் பொலிஸார் பெற்றிருக்கும் நீதிமன்ற தடையுத்தரவை மீளப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் அவர்களையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறுகின்றோம். இத்தகைய கைதுகள் நீதியை தடுத்து விட முடியாது என்பதையும் உறுதியாக கூறுகின்றோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே. இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம்.
உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதி குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 வது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
துக்கதினத்தை அனுஸ்டிக்கும் உரிமை கூட இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை - திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக பெண்கள் தாக்கப்பட்டமை குறித்து மக்கள் பேரவைக்கான இயக்கம் கடும் கண்டனம்
திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் துக்கதினத்தை கூட அனுஸ்டிக்கும் உரிமை இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை என தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் மூன்று தசாப்தபோர் மிகவும் மோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்மக்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற கரிசனையில்லாமல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர்.
சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டனர்..
இவர்களை நினைகூரும்வகையில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உணவு இல்லாததால் உணவு கிடைக்காததால் தண்ணீர் கலந்த அரிசியை கஞ்சியை குடித்து உயிர்வாழ்ந்தனர்.
அதனை நினைகூரும் வகையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.
அந்த மக்கள் 15 வருடங்கள் கடந்த பின்னரும் எந்த நீதியையும் பெறாமல் வாழ்கின்றனர். அரசாங்கம் அவர்களிற்கு எந்த ஒரு நீதியையும் வழங்கவில்லை எந்தவொரு முடிவையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மிகமோசமான சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
திருகோணமலை சம்பூரில் பெண்கள் தாங்களாக முன்வந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது வடகிழக்கில் வழமையாக இடம்பெறும் விடயம்தான் அரசாங்கத்திற்கும் இது தெரியும்.
ஆனால் பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டுள்ளனர்.
இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் நினைவுகூரலின் போது உணவு வழங்குவது பானங்களை வழங்குவது அடிப்படை உரிமையாகும்.
வெசாக் தன்சலிற்கு இவ்வாறான தடை உத்தரவை பிறப்பிப்பார்களா?
அப்பாவி பொதுமக்களை பொலிஸார் மிக மோசமான முறையில் நடத்தியுள்ளனர்.
இரவுவேளை வீட்டிற்குள் நுழைந்து அடித்து உதைத்து காடையர்கள் போல செயற்பட்டுள்ளனர்,
இவர்கள் பொலிஸாரா?
ஒரு துக்கதினத்தை கூட அனுஸ்டிக்க முடியாத நிலையில் இந்த நாட்டில் தமிழன் நிலை காணப்படுகின்றது.
இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் வாரத்தில் நினைவுரல் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.