இலங்கையில் விசா நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
11 May,2024
நாட்டிற்கு வரும் வழக்கமான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாதிப்படைவதால் வருகைத்தரும் விசா மட்டுமல்ல, இணையத்தின் ஊடான விசா முறையும் நிறுத்தப்பட வேண்டுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் வலியுறுத்தியுள்ளார்.
இணையத்தளப் பிரச்சினைகள் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சில வெளிநாட்டினர் வணிக நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தருகின்ற நிலையில் சுற்றுலா அமைச்சகம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலக்கு வைத்திருந்தாலும் புதிய முறையால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது.
இந்த வருகைத்தரும் (On Arrival) மற்றும் இணையத்தள (Online) விசா முறைகளின் கீழ் பரிவர்த்தனைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 12 வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் 52 அமெரிக்க டொலர்களுக்கு இந்த முறைமை செயற்படுத்தப்பட்டு 50 அமெரிக்க டொலர்கள் (Dollars) திறைசேரிக்கு அனுப்பப்பட்டது.
மேலும், சிறிலங்கா டெலிகொம் வழங்கிய சேவைக்கான கட்டணமாக இரண்டு அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டதுடன் புதிய முறையின் கீழ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் துபாயில் (Dubai) உள்ள வங்கிக்கு அனுப்பப்பட்டதுடன் இரண்டு நாட்களுக்குப் பிறகு உள்ளூர் அரச வங்கி ஒன்றின் மூலம் நிதி திறைசேரியில் வைப்புச் செய்யப்படுகிறது.
முன்னதாக, இந்தக் கட்டணங்கள் இலங்கை மத்திய வங்கியின் பிரதி அரச செயலாளரின் கீழ் உள்ள கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளதுடன் கட்டணங்கள் டொலர் பரிமாற்றத்தின் தினசரி புதுப்பித்தலுடன் ஒவ்வொரு நாளும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு பற்று வைக்கப்படும்.
ஆனால் புதிய முறையின் கீழ், இரண்டு நாட்களுக்குப் பின்னரே கட்டணங்கள் திறைசேரியில் பற்று வைக்கப்படுவதுடன் ஒருவரின் கடவுச்சீட்டு தகவலை மற்றொரு தரப்பினர் பெற்றுக்கொள்ளும் தகவல் மீறல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவே, இந்த புதிய முறைக்கு சீனா (China) உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
VFS GLOBAL நிறுவனத்திற்கு 75.5 டொலர்களை செலுத்திவிட்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள், விசாவைப் பெறும்போது அவர்களது கடவுச்சீட்டு எண் மற்றும் பிறந்த திகதியில் உள்ள பிழைகளை சரிசெய்ய மேலும் 50 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறு பிழைகளை சரி செய்ய குடிவரவுத் திணைக்களத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை அத்தோடு VFS GLOBAL என்பது துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாவதுடன் இது இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது எனினும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.