இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.
அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய இலங்கைத் தமிழர்களும் கடந்த 2022ம் ஆண்டின் நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த 4 பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியிருந்தது. இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி, ராபர்ட் பயஸ் முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்தனர்.
முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான இந்தியப் பெண்ணுமான நளினி தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
முருகன் மற்றும் நளினி ஆகியோர் மிக விரைவில் லண்டனில் இருக்கும் தங்கள் மகளிடம் சென்று மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.