இங்கிலாந்து மேரி யாத்திரைக்கு செல்லும் இலங்கை தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
10 May,2024
இங்கிலாந்தின் (England) வோல்சிங்ஹம் (Walsingham) மேரி யாத்திரையுடன் ஒருநாள் நிகழ்வுக்காக நோர்போக் கடற்கரைக்கு செல்லும் இலங்கை தமிழர்கள் உட்பட்ட யாத்திரிகர்களுக்கு உயர் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்கர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்துக்கு சென்றதன் பின்னர் அவர்களில் பலர் கடலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எனவே இதன்போது ஆபத்தான ஒலிகள் எழுப்பப்படும்போது வெல்ஸில் (Wells) உள்ள பிரதான கடற்கரைக்குத் திரும்புமாறு தமிழில் பாதுகாப்புத் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2007ஆம் ஆண்டு குறித்த கடல்பகுதியில் ஏற்பட்ட அலையால் ஒரு தமிழ் சிறுவன் கொல்லப்பட்டதை அடுத்தே தமிழில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வோல்சிங்கம்- பக்கன்ஹாம் மற்றும் கடற்கரையை நோக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, யாத்திரையில் கலந்து கொள்ளாதவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.